ஜலந்தர் – வடமேற்கு இந்தியாவின் வரலாற்று நகரம்!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் நகரம் சிறந்த வரலாற்று பின்னணியை கொண்ட புராதன நகரமாக அமைந்துள்ளது. ஜலந்தரா எனும் அசுர குல மன்னன் இப்பகுதியை ஆண்டதாக மஹாபாரதம் போன்ற புராணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஜலந்தர் எனும் பெயருக்கு ‘நீருக்கு அடியில் வீற்றிருக்கும் ஸ்தலம்’ என்பது பொருளாகும். பியாஸ் மற்றும் சட்லெஜ் எனும் இரண்டு ஆறுகளுக்கும் நடுவில் அமைந்திருப்பதால் இந்த நகரத்துக்கு இப்பெயர் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 1953ம் ஆண்டு வரை இது பஞ்சாப் மாநிலத்தின் தலைநகரமாக இருந்து வந்திருக்கிறது. அதன் பின்னர் சண்டிகர் நகரம் அந்த தலைநகர் உரிமையை எடுத்துக்கொண்டது.

இருப்பினும் ஆழமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் பலவிதமான சுற்றுலா அம்சங்கள் வாய்க்கப்பெற்றிருக்கும் இந்த ஜலந்தர் -பஞ்சாப் மாநிலத்திலுள்ள முக்கிய சுற்றுலா நகரங்களில் ஒன்றாக பிரசித்தி பெற்றுள்ளது.

ஜலந்தர் நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள சுற்றுலா சிறப்பம்சங்கள்!

கோட்டைகள், கோயில்கள் மற்றும் மியூசியங்கள் என்று ஏராளமான சுற்றுலா சுவாரசியங்களை இந்த ஜலந்தர் நகரம் தன்னுள் கொண்டிருக்கிறது. இவற்றில் ஷிவ் மந்திர், துளசி மந்திர், தேவி தளாப் மந்திர், செயிண்ட் மேரி கதீட்ரல், புஷ்பா குஜ்ரால் சைன்ஸ் சிட்டி, பகத் சிங் மியூசியம் மற்றும் ஒண்டர்லேண்ட் தீம் பார்க் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இவை தவிர சீக்கிய குருத்வாரா கோயில்களும் இந்நகரத்தில் அதிகமாக காணப்படுகின்றன. இவை யாவும் இப்பிரதேசத்தின் பாரம்பரிய கலைமரபுக்கான சாட்சியங்களாக வீற்றிருக்கின்றன.

வளர்ந்து வரும் நவீன நகரம் எனும் அடையாளத்துக்கேற்ற வகையில் இங்கு பல ஷாப்பிங் மால்கள், வளாகங்கள் போன்றவையும் அமைந்திருக்கின்றன.

எப்படி செல்வது ஜலந்தருக்கு?

ரயில் சேவை இணைப்புகள் மூலமாக இந்தியாவின் எல்லா முக்கிய நகரங்களுடனும் ஜலந்தர் நகரம் இணைக்கப்பட்டிருக்கிறது. வட மாநிலங்களின் சில முக்கிய நகரங்களுக்கு இங்கிருந்து பேருந்து சேவைகளும் ஏராளம் இயக்கப்படுகின்றன.

ஜலந்தருக்கு அருகிலுள்ள விமான நிலையம் அம்ரித்ஸர் நகரில் (90 கி.மீ) உள்ளது. இங்கிருந்து இந்தியாவின் பல நகரங்களுக்கு விமான சேவைகள் கிடைக்கின்றன.

விஜயம் செய்ய ஏற்ற பருவம்?

ஜலந்தர் நகரம் ஈரப்பதம் நிரம்பிய உப வெப்ப மண்டல பருவநிலையை கொண்டிருக்கிறது. நடுங்க வைக்கும் குளிருடன் கூடிய குளிர்காலம் மற்றும் உஷ்ணமான கோடைக்காலம் போன்ற அம்சங்களை இது பெற்றிருக்கிறது. அக்டோபர், நவம்பர், பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய மாதங்கள் ஜலந்தர் நகரத்துக்கு விஜயம் செய்ய ஏற்றவையாக உள்ளன.

Please Wait while comments are loading...