நாகர்கோட் என்று முற்காலத்தில் அழைக்கப்பட்ட காங்க்ரா நகரத்தில் உள்ள முக்கியமான சுற்றுலா அம்சம் இந்த நாகர்கோட் ஃபோர்ட் கோட்டையாகும். காங்க்ரா பள்ளத்தாக்கை நோக்கியவாறு அமைந்துள்ள இந்த கோட்டை பங்கங்கா மற்றும் மஞ்சி எனும் இரண்டு ஓடைகள் ஒன்று சேரும் இடத்தில் வீற்றுள்ளது.
ரஞ்சித் சிங் தர்வாஸா மற்றும் ஜஹாங்கீர் தர்வாஸா எனும் பிரம்மாண்ட மர நுழைவாயில் கதவுகளை இந்த கோட்டை கொண்டுள்ளது. ஜஹாங்கீர் தர்வாஸா எனும் வாசல் வழியாக மரங்கள் அடர்ந்த பகுதிக்குள் உள்ள ஒரு மசூதியை அடையலாம்.
இங்கு ஜஹாங்கீர் மன்னர் தொழுகைகள் புரிந்ததாக சொல்லப்படுகிறது. மசூதிக்கு அருகிலேயே மெஹ்ராப் எனப்படும் அலங்கார விதான வளைவு அமைப்பையும் காணலாம்.
தற்போது புதர்கள் மண்டியுள்ளதால் இந்த விதான வளைவு சிதிலமடைந்து வருகிறது. இது தவிர வேறு சில அமைப்புகளின் இடிபாடுகளும் இந்த மசூதிக்கு அருகில் காணப்படுகின்றன.
அந்தேரி தர்வாஸா எனும் வாசல் அமைப்பு மெஹ்ராப் வளைவுக்கு அப்பால் அமைந்துள்ளது. மேலும், தர்ஷினி தர்வாஸா எனும் மிகப்பழையான வாசல் அமைப்பும் இந்த கோட்டை வளாகத்தில் காணப்படுகிறது.
இது ஒரு அழகிய முற்றத்திற்கான வழியாக அமைந்துள்ளது. இந்த முற்றத்தில் ஓடுகள் பதிக்கப்பட்டு காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பல்வேறு மன்னர்கள் இந்த கோட்டை வளாகத்தில் பல கோயில்களையும் கட்டியுள்ளனர்.
இவை யாவுமே ஜைன கோயில்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஷீஷ் மஹால் எனப்படும் கண்ணாடி அறை ஒன்று இந்த கோட்டையின் மேல் தளத்தில் காணப்படுகிறது. இந்த கோட்டையின் உச்சியிலிருந்தும், ஒரு காவல் கோபுரத்தின் உச்சியிலிருந்தும் சுற்றிலுமுள்ள இயற்கை எழிற்காட்சிகளை பயணிகள் பார்த்து ரசிக்கலாம்.



Click it and Unblock the Notifications