லக்ஷ்வதீப் – ஆழிப் பெருங்கடலில் எழில் கோலங்கள் படைக்கும் லட்சத் தீவுகள்!

மாலத்தீவில் உள்ள மாலே நகரத்தை ஒரு பாலைவனச்சோலை என்று கூறுகின்றனர். எனில் அங்கிருந்து சிலநூறு கிலோமீட்டர் வடக்கே, இந்தியாவின் கேரளக்கடற்கரையிலிருந்து 250 கி.மீ தூரத்திலேயே அமைந்திருக்கும் இந்த அற்புத ‘லட்சத்தீவு’களுக்கு விஜயம் செய்வதில் என்ன தயக்கம் இருக்க முடியும். இந்தியாவுக்கு சொந்தமான இந்த தீவுகளின் அற்புதங்களை ரசிக்க இந்தியக் குடியுரிமை அந்தஸ்தே போதும் எனும்போது இந்த சொர்க்கத்தீவுகளுக்கு விஜயம் செய்யாமல் தவிர்ப்பதில் அர்த்தமே இல்லை.

30 தீவுகள் மற்றும் குறுந்தீவுகளை உள்ளடக்கியுள்ள இந்த லக்ஷ்வதீப் ஒரு பிரபல்யமான சுற்றுலாத்தலமாக சமீபகாலத்தில் வளர்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக கடற்கரை மணல், சூரியன், கடல் போன்ற அம்சங்களை வெகுவாக விரும்பும் பயணிகள் மத்தியில் இது மிக பிரசித்தமாக அறியப்படுகிறது.

4200 ச.கி.மீ பரப்பளவுக்கு அதிகமான தீவுக்கூட்ட பரப்பையும் 36 ச.கி.மீ பரப்பையும் கொண்டுள்ளது. தோராயமாக 132 கிமீ நீள கடற்கரைப்பரப்புடன் அமைந்துள்ளதால் இந்த தீவுப்பிரதேசம் எல்லாவிதமான நீர் விளையாட்டு பொழுதுபோக்கு அம்சங்களையும் பெற்றிருக்கிறது.

லக்ஷ்வதீப்பின் வரலாற்றுப்பின்னணி

ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இருந்த இந்த தீவுப்பகுதி 1947ம் ஆண்டு இந்திய சுதந்திரம் பெற்ற பிறகு இந்திய யூனியனுடன் இணைக்கப்பட்டது. இருப்பினும் கணிசமான அளவில் முஸ்லிம் மக்கள் தொகையை கொண்டுள்ள இந்த தீவுக்கு பாகிஸ்தான் உரிமை கோரக்கூடும் என்ற குழப்பம் அப்போது நிலவியது.

இருப்பினும் இந்திய உள் துறை அமைச்சர் கப்பற்படைகளை இத்தீவிற்கு அனுப்பி இந்திய தேசியக்கொடியை உடனடியாக இத்தீவில் பறக்க செய்தார். தற்போது லக்ஷ்வதீப் பகுதி இந்தியக் கப்பற்படைக்கான முக்கிய கேந்திரமாக பயன்படுத்தப்படுகிறது.

மத்திய கிழக்கு பிரதேசத்தில் இந்திய கப்பல்களுக்கான பாதுகாப்பு மற்றும் இதர தேசப்பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இந்த கப்பற்படைக்கேந்திரம் வசதியாக உள்ளது.

தீவுப்பகுதியில் உல்லாசப்பொழுதுபோக்குகள்

ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக இந்த தீவுப்பகுதி பிரசித்தி பெற்றிருப்பதற்கான காரணங்களை ஊகிப்பது ஒன்றும் கடினமில்லை. தீவு என்றாலே ரம்மியம்தானே. அதுவும் சிறிய பரப்பளவில் அதிகம் மாசுபடாத கடற்கரைகள் மற்றும் தரைக்கடல் பகுதியை கொண்ட தீவுப்பகுதி என்றால் அது நிச்சயம் சொர்க்கபூமியாகத்தான் காட்சியளிக்கும் என்பது இயற்கை ரசிகர்களுக்கு தெரிந்த விஷயம்.

முதல் முதலில் வெளிமனிதர்கள் இந்த தீவை கண்டுபிடித்தார்களோ அப்படியே அதே அழகோடுதான் இது இன்றும் காட்சியளிக்கிறது என்பது பரவலான ஒரு கருத்து. இந்த தீவுப்பகுதியின் முக்கியமான இரண்டு தீவுகளாக விமான நிலையம் அமைந்திருக்கும் அகத்தி எனும் தீவும் மற்றும் அளவில் பெரியதான சுற்றுலா கோலாகல வசதிகள் நிரம்பிய பங்கரம் எனும் தீவும் அறியப்படுகின்றன. இந்த இரண்டாவது தீவில் மட்டுமே மதுபானம் அருந்த அனுமதி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தீவின் கிடைக்கும் உணவுத்தயாரிப்புகளின் தரத்தையும் ருசியையும் வார்த்தைகளால் விளக்குவது கடினம். அவ்வளவு தனித்தன்மையான செய்முறைகளுடன் இங்கு ருசியான கடல் உணவுகள் கிடைக்கின்றன.

இப்பகுதியில் ‘ட்யூனா’ மீன் அதிகம் கிடைப்பதால் அது பலவிதமான ருசிகளில் இங்கு சமைக்கப்படுகிறது. மேலும், லக்ஷ்வதீப்பின் ஒட்டுமொத்த அழகையும் பார்க்கும் போது உங்கள் மனதில் ஒன்றே ஒன்றுதான் தோன்றும், அதாவது, “இப்படியெல்லாம் பூமியில் வீற்றிருக்கும் சொர்க்கங்களை விட்டுவிட்டு கான்கிரீட் காடுகளுக்குள் நாம் என்ன தேடிக்கொண்டிருக்கிறோம்?” எனும் ஆதங்கம்தான் அது!

பரபரப்பும், சந்தடியும், தூசும், புகையும் நிரம்பி எந்த வித ஒத்திசைவோ அழகம்சமோ இல்லாத கான்கிரீட் கட்டிட அமைப்புகள் நிறைந்திருக்கும் நகர்ப்புறங்களில் வாழ்ந்து விட்டு அப்பழுக்கற்ற மணலையும், ஸ்படிகம் போன்ற சுற்றுச்சூழலையும், அசைந்தாடும் தென்னை மரங்களையும், நீலப்பச்சை நிற கடற்பரப்பையும், வேறு எங்குமே பார்க்க முடியாத வசீகரத்துடன் சிரிக்கும் சூரியனையும் சந்திரனையும் இந்த லக்ஷ்வதீப்பில் தரிசிக்கும் அனுபவம் வாழ்வில் என்றென்றுமே மறக்கமுடியாத ஒன்றாக இருக்கும்.

மீன்பிடித்து மகிழ்வது ஸ்கூபா டைவிங் எனப்படும் மெய்சிலிர்க்க வைக்கும் கடலடி நீச்சல் பயணம் போன்றவை லக்ஷ்வதீப்பில் பயணிகளுக்காக காத்திருக்கும் விசேஷ அனுபவங்களாகும்.

ஸ்கூபா டைவிங் அனுபவஸ்தர்கள் இந்த லக்ஷ்வதீப்பில் காணக்கிடைப்பது போன்ற டைவிங் காட்சிகள் வேறு எங்குமே இல்லை என்று கூறுகின்றனர். அன்று பிறந்தவை போன்றே காட்சியளிக்கும் பவழப்பாறைகளையும் விதவிதமான கடலுயிர்களையும் வண்ண மீன்களையும், கடல் மீன்களையும் இங்குள்ள கடற்பகுதிகளில் ஸ்கூபா டைவிங் செய்து பார்த்து ரசிக்கலாம்.

இதற்கான நவீன உபகரணங்களோடு அனுபவமிக்க டைவிங் பயிற்சியாளர்கள் இங்கு பயணிகளுக்கு உதவ காத்திருக்கின்றனர். பொதுவாக டைவிங் எனப்படும் ‘நீர்மூழ்கு நீச்சல்’ 30 அடி ஆழம் வரை அனுமதிக்கப்படுகிறது.

இருப்பினும் விசேஷமான சந்தர்ப்பங்களில் ‘டைவிங் சேம்பர்’ எனப்படும் நீர்மூழ்கி அறை வசதியை பயன்படுத்தி பயணிகள் அதிக ஆழத்திற்கும் செல்லலாம். இந்த விசேஷ வசதி மே 15ம் தேதி முதல் செப்டம்பர் 15ம் தேதி வரை மட்டுமே வழங்கப்படுகிறது.

எளிமையான முறையில் டைவிங்கில் ஈடுபட விரும்புகிறவர்கள் ‘ஸ்னார்க்கலிங்’ என்ற சிக்கல் இல்லாத வசதிகளை பயன்படுத்தி நீருக்கடியில் மூழ்கி ரசிக்கலாம்.

குறிப்பு: ஸ்கூபா டைவிங் எனப்படுவது முதுகில் ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் கால்களில் மீன் துடுப்பு போன்ற அமைப்புடன் நெடுநேரம் நீருக்குள் ஆழத்தில் நீந்தக்கூடிய வகையிலான முறை. ஸ்நார்க்கலிங் என்பது சுவாச முகமூடிஅமைப்புடன் நீர்ப்பரப்புக்கு வெகு அருகிலே நீருக்குள் மூழ்கி பார்த்து ரசிப்பது. இதிலும் கால்களுக்கு துடுப்புபோன்ற அமைப்புகளை பொருத்திக்கொள்ளலாம்.

லக்ஷ்வதீப் பகுதியின் ஆழமற்ற தரைக்கடல் பகுதிகள் (இவை ‘லகூண்’ எனப்படும் அலைகள் அற்ற ஆழம் குறைந்த கடல்நீர்ப்பரப்பு வகையை சேர்ந்தவை) அதன் அடியில் காணப்படும் பவழப்பாறை வளர்ச்சிகளுடன் நீல நிறத்தில் ஸ்படிகம் போன்று ஜொலிக்கின்றன.

அப்பழுக்கற்ற வெண் மணற்பரப்புடன் தென்னை மரங்களும் ஈச்ச மரங்களும் அசைந்தாடும் இந்த தீவுகளின் கடற்கரைகள் பயணிகளை சொக்க வைக்கின்றன. தீவுப்பகுதியில் நல்லதொரு விடுமுறைச்சுற்றுலா அனுபவத்தை திட்டமிட்ட முறையில் அனுபவிக்க பல ரிசார்ட் விடுதிகளும் அமைந்துள்ளன.

ஒரு முறை லக்ஷ்வதீப்பிற்கு விஜயம் செய்து இயற்கை தரிசனம் செய்துவிட்டு திரும்பும்போது நீங்கள் முற்றிலும் புதிய மனிதராக திரும்புவது உறுதி. மேலும், இந்தியாவுக்குள் இது போன்ற அம்சங்கள் வேறு எங்கும் இல்லை என்பதால் சந்தேகத்துக்குமிடமின்றி இது ஒரு விசேஷ விடுமுறை சுற்றுலாத்தலமாகும்.

Please Wait while comments are loading...