இந்தியாவில் மஹாராஷ்டிரா மாநிலத்தின் தென் கிழக்கு பகுதியில் வீற்றிருக்கும் இந்த லாதூர் நகரம் வரலாற்று ரசிகர்களை கவர்ந்திழுக்கும் பல அம்சங்களை தன்னுள் கொண்டிருக்கிறது. நீண்ட பாரம்பரியத்தை வாய்க்கப்பெற்றிருக்கும் இந்நகரம் ஏராளமான வரலாற்று சுவாரசியங்களை சுற்றுலா பயணிகளுக்கு வாரி வழங்குகிறது. மராத்வாடா பிராந்தியத்தில் அமைந்திருக்கும் இந்நகரில் 7ம் நூற்றாண்டு தொடங்கி ஆங்கிலேயர் ஆண்ட 1900 வரையிலான காலம் வரையிலான வரலாற்று சான்றுகள், கட்டிடக்கலை அம்சங்கள் போன்றவை நம் கண் முன் தரிசனம் அளிக்கின்றன. முக்கியமான வரலாற்று சம்பவங்கள் நிகழ்ந்தேறிய களமாக இந்நகரம் விளங்கி வந்திருப்பதை தற்போது பிரபலமாக அறியப்படும் இதன் சுற்றுலா அம்சங்களிலிருந்தே நாம் எளிதில் புரிந்துகொள்ளலாம்.
லாதூர் நகரத்தின் சிறப்பம்சங்கள்
லாதூர் நகரம் முழுதுமே பாலக்காட் பீடபூமியின் மீது அமைந்திருக்கிறது. இது (சராசரி) கடல் மட்டத்திலிருந்து 2000 அடி உயரத்தில் அமைந்திருப்பதால் குளிர்காலத்தில் இங்கு குளுமையான பருவநிலை நிலவுகிறது.
லாதூர் நகரத்தின் ஊடே ஓடும் மஞ்சாரா ஆறு இந்நகரத்தின் அழகை மேலும் கூட்டுகிறது. ஆற்றை ஒட்டி மாலை நேரத்தில் நடை பயணம் செல்வது ஒரு இனிமையான அனுபவமாக இருக்கும். மேலும், மஞ்சாரா ஆறு மட்டுமல்லாமல் தேர்னா, மன்யாத், லென்டி மற்றும் கர்ணி போன்ற ஆறுகளும் லாதூர் நகரத்தை ஒட்டி ஓடுகின்றன.
லாதூர் நகரம் மற்றும் சுற்றியுள்ள முக்கிய சுற்றுலா அம்சங்கள்
லாதூர் நகரத்தில் உள்ள உத்கீர் கோட்டை ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாகவும் புகைப்பட ரசிகர்களின் விருப்ப ஸ்தலமாகவும் அமைந்திருக்கிறது. சாக்கூர் வழியாக நந்தேட் சென்று அங்குள்ள பிரபலமான சிவன் கோயிலையும் பயணிகள் தரிசிக்கலாம்.
லாதூர் நகருக்கு விஜயம் செய்ய ஏற்ற பருவம்
புகைப்பட ஆர்வலர்கள் மற்றும் மழை ரசிகர்கள் மழைக்கால மாதங்களில் லாதூர் நகருக்கு விஜயம் செய்யலாம். மழைக்காலத்தில் ஆறுகள் நிரம்பி ஓடுவதை பார்த்து ரசிக்க முடியும்.
நிஜாம் மன்னர்களின் ஆட்சியில் இருந்த காலத்திலிருந்து இந்த லாதூர் நகரம் மராத்வாடா பிராந்தியத்தின் ஒரு முக்கியமான வணிகக்கேந்திரமாக இருந்து வருகிறது. இன்றும் லாதூர் நகரம் பல்வேறு தானியங்களின் விற்பனைக்கு பிரசித்தி பெற்றுள்ளது.
புதுமையான விவசாய முறைகள் மற்றும் விளைபொருட்கள் போன்றவற்றில் ஆர்வம் உள்ளவர்கள் ஒரு முறை விஜயம் செய்யவேண்டிய பகுதி இந்த லாதூர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
லாதூர் நகரத்திற்கான போக்குவரத்து வசதிகளுக்கும் எந்த குறைவுமில்லை. நந்தேட் மற்றும் பர்பணீ போன்ற முக்கிய சுற்றுலா நகரங்களை ஒட்டி அமைந்துள்ளது மட்டுமல்லாமல் இங்கிருந்து மஹாராஷ்டிரா மாநிலங்களின் சில முக்கியமான உள்நகரங்களுக்கு சுற்றுலா மேற்கொள்வதும் எளிதாக உள்ளது.



Click it and Unblock the Notifications