மஹாபலேஷ்வர் – பசுமை குன்றா எழில்மலைக்காட்சிகள்!

மஹாராஷ்டிரா மாநிலத்தின்  சதாரா மாவட்டத்தில் அமைந்திருக்கும் மஹாபலேஷ்வர் ஒரு பிரபலமான மலை வாசஸ்தலமாகும். ரம்யமான மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் அமைந்துள்ள இந்தப் பகுதி உலகில் என்றென்றும் பசுமையாக காணப்படும் இடங்களில் ஒன்று. இந்தியாவின் மற்ற கோடை வாசஸ்தலங்களை போலவே மஹாபலேஷ்வர் நகரமும் ஆங்கிலேய ஆட்சி காலத்தில் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாத இந்திய கோடை காலத்தை கழிப்பதற்கு பயன்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.

மஹாபலேஷ்வர் என்னும் பெயருக்கு மஹா வலிமை கொண்ட கடவுள் என்பது பொருளாகும். வெண்ணை, காயத்ரி, சாவித்ரி, கோன்யா மற்றும் கிருஷ்ணா போன்ற ஐந்து ஆறுகள் இந்த பகுதியில் பாய்வதால் மஹாபலேஷ்வர் ஐந்து ஆறுகளின் ஸ்தலம் என்றும் அழைக்கப்படுகிறது.

தலை சுற்றவைக்கும் 4718 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த சுற்றுலா நகரம் 150 ச.கி.மீ  அளவில் பரந்து காணப்படுகிறது. மஹாபலேஷ்வர் முக்கிய பெரு நகரங்களான மும்பை, புனே போன்றவற்றிலிருந்து முறையே 264 கி.மீ மற்றும் 117 கி.மீ  தூரத்திலேயே அமைந்துள்ளதால் ஒரு பரபரப்பான பெரு நகர வாழ்க்கையிலிருந்து விலகி ஓய்வெடுக்க மிக பொருத்தமான மலை வாசஸ்தலமாக திகழ்கிறது.

மஹாபலேஷ்வர் - வரலாற்றுப் பின்னணி

சிங்கன் எனும் அரசனால் இந்த இடம் கண்டறியப்பட்டு மஹாபலேஷ்வர் என்ற புகழ் பெற்ற கோயிலையும் அந்த அரசன் கட்டியதாக வரலாறு கூறுகிறது. 17 ம் நூற்றாண்டில் மாமன்னர் சிவாஜியின் ஆளுகைக்கு கீழ் வந்த பின்னர், இங்கு பிரதாப்கட் எனும் கோட்டையும் கட்டப்பட்ட்து.

அதன் பின்னர் 1819 வாக்கில் ஆங்கிலேயர் வசம் இந்த இடம்  சென்றது. அவர்கள் ஆட்சியின்போது நம்மால் இப்போது மஹாபலேஷ்வர் என்றழைக்கப்படும் இந்த நகரம் மால்கம் பேத் என்று குறிப்பிடப்பட்ட்து.

பிரமிக்க வைக்கும் மலைக்காட்சிகள்

சொக்க வைக்கும் மலைச்சரிவுகளின் இயற்கை எழிலை பார்க்க வசதியாக 30 மலைக்காட்சித் தளங்கள் (உச்சியிலிருந்து மலைக்காட்சிகளை கண்டு ரசிக்க வசதியாக அமைக்கப்பட்ட இடங்கள்)  மஹாபலேஷ்வரில் அமைந்துள்ளன.

இவற்றிலிருந்து பார்க்கும் போது சுற்றிலும் உள்ள காடுகள், அருவிகள், நீர்வீழ்ச்சிகள், ஆறுகள் மற்றும் காட்டு உயிரின்ங்கள் போன்றவற்றை மிக அருகில் கண்ணுக்கு விருந்தாக காணலாம்.

வில்சன் பாயிண்ட் அல்லது சன்ரைஸ் பாயிண்ட் எனும் மலைக்காட்சி தளம் மிகவும் உயரமான இட்த்தில் அமைந்துள்ளது குறிப்பிட்த் தக்கது. அதற்கடுத்ததாக கன்னாட் சிகரம் மலைப்பள்ளத்தாக்குகளை ரசிக்க ஏதுவான காட்சி மையமாகும்.

ஆர்தர் சீட் என்று அழைக்கப்படும் மற்றொரு மலைக்காட்சி தளம் ஆர்தர் மாலெட் எனும் ஆங்கிலேயர் பெயரால் அழைக்கப்படுகிறது. இவர்தான் இங்கு முதன்முதலாக ஒரு வீட்டை கட்டியதாக கூறப்படுகிறது.

எக்கோ பாயிண்ட் என்ற மற்றொரு காட்சி தளம் குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடையே பிரசித்தி பெற்றதாகும். இங்கிருந்து நாம் கூக்குரலிட்டாலோ அழைத்தாலோ அது தூரத்தில் மலைகளிலிருந்து திரும்ப எதிரொலித்து நம்மை ஆனந்த கிளர்ச்சியில் ஆழ்த்துகிறது.

எல்பின்ஸ்டோன் பாயிண்ட், மார்ஜரி பாயிண்ட் மற்றும் கேஸ்டில் ராக் போன்ற காட்சி தளங்களும் அவசியம் பார்க்க வேண்டியவையாகும். இது தவிர பாபிங்க்டன் பாயிண்ட், ஃபாக்லேண்ட் பாயிண்ட், கார்னாக் பாயிண்ட் மற்றும் பாம்பே பாயிண்ட் போன்றவையும் மலையழகை கண்டு ரசிக்க உதவும் இதர காட்சி தளங்களாகும்.

மஹாபிரசித்தி பெற்ற பிரதாப்காட் கோட்டை இங்கு தவறவிட கூடாத அற்புதமாகும். வேறு சில புராதன கோயில்களும் இங்கு காணப்படுகின்றன. பழைய மஹாபலேஷ்வர் நகரில் அமைந்துள்ள மஹாபலேஷ்வர் கோயில் விசேஷமான ஒன்றாகும். இப்பகுதியில் உள்ள வெண்ணா ஏரி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ள ஒரு அம்சமாகும்.

மஹாபலேஷ்வர் – பசுமைப்பிரதேசம்

மஹாபலேஷ்வர் மலைப்பகுதி முழுக்க முழுக்க மிக அரிதான ஆயுர்வேத மூலிகைத் தாவரங்களால் நிரம்பி காணப்படுகிறது. காட்டுயிர்களான மான்கள், நரிகள், காட்டெருமைகள் மற்றும் புல்புல் போன்றவை இங்கு வசிக்கின்றன.

இங்குள்ள சுற்றுச்சூழல் மிகத்தூய்மையானதாகவும் எப்போதும் புதிய ஆக்ஸிஜன்  நிரம்பியுள்ளதாகவும் காணப்படுவதால், நோய்வாய்ப்பட்டு குணமடைய வேண்டிய நிலையில் உள்ள நோயாளிகள் இங்கு ஓய்வெடுப்பது உடல் நலத்துக்கும் துரித முன்னேற்றத்துக்கும் மிக நல்லது என்று கூறப்படுகிறது.

மலையின் உச்சியில் மஹாபலேஷ்வர் அமைந்துள்ளதால் கோடையின் வெப்பம் இப்பகுதியை ஒருபோதும் பாதிப்பதில்லை. ஆண்டின் எல்லா பருவ காலங்களிலும் இப்பகுதி அனைவரையும் வரவேற்கும் வகையில் மிதமான பருவநிலையை பெற்றதாக இப்பகுதி அமைந்துள்ளது.

கோடையின் போது வெப்பமாகவும் இருப்பதில்லை அதேபோல் குளிர்காலத்தின் போது மிக்க் குளிராகவும் இருப்பதில்லை. எல்லா கோடை வாசஸ்தலங்களையும் போன்றே இது மழைக்காலத்தில் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு இடமாகவும் திகழ்கிறது.

மழைக்காலத்தின் போது இப்பகுதி ஒரு சொர்க்கலோகம் போன்றே உருமாறி எங்கெங்கு திரும்பினாலும் பச்சை பசேல் என்று ஆங்காங்கு அருவிகள், நீர்விழ்ச்சிகள் என்று பரவசப்படுத்தும் இயற்கை எழில் காட்சிகள் நிறைந்து காணப்படுகிறது.

மஹாபலேஷ்வர் தொடர்பான மற்றொரு குறிப்பிடத் தக்க வரலாற்று செய்தி இங்குள்ள சமவெளியில் 1800 ஆம் ஆண்டு சீன மற்றும் மலேய கைதிகள் சுமார் 30 வருடங்களுக்கு சிறைப்படுத்தப்பட்டிருந்தனர் என்பதாகும்.

அவர்களால் இப்பகுதி விவசாயம் செய்ய ஏற்றவாறு திருத்தம் செய்யப்பட்டு ஸ்ட்ராபெர்ரி, சிவப்பு முள்ளங்கி போன்றவை பயிரிடப்பட்டதாக கூறப்படுகிறது. அதுவே பின்னர் இப்பகுதியின் அடையாளமாகவும் மாறியதுடன் அக்கைதிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட மூங்கில் கைவினைப்பொருட்கள் தயாரிப்பும் இன்று மஹாபலேஷ்வரில் பிரதானமாக உள்ளது.

ஸ்ட்ராபெர்ரி மற்றும் மல்பெர்ரி போன்ற பழங்கள் அவசியம் மஹாபலேஷ்வர் செல்லுபவர்கள் சுவைத்துப்பார்க்க வேண்டிய பழங்களாகும். ஸ்ட்ராபெர்ரி வித் கிரீம் எனும் உணவு வகை மஹாபலேஷ்வரில் அவசியம் சுவைக்க வேண்டிய ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

மஹாபலேஷ்வர் – சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கம்

மஹாபலேஷ்வர் ரயில், சாலை மற்றும் விமான மார்க்கங்களில் சிறந்த முறையில் இணைக்கப்பட்டுள்ளது. விமான மார்க்கம் எனில் புனே விமான நிலையம் சென்று அங்கிருந்து ஒரு வாடகைக்காரில் மஹாபலேஷ்வரை சென்றடையலாம்.

ரயில் மூலம் எனில் மஹாபலேஷ்வர் அருகிலுள்ள வாதார் எனும் ரயில் நிலையத்திலிருந்து செல்லலாம். நீங்கள் மஹாராஷ்டிராவில் அருகில் வசித்தாலோ அல்லது மும்பை, புனேயிலிருந்து வருகின்றவராக இருந்தாலோ காரிலே மஹாபலேஷ்வர் வருவது ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும்.

மஹாபலேஷ்வர் வரும் வழியில் சாலைகளும் இயற்கைக்காட்சிகளும் மிக இனிமையான பயண அனுபவத்தை கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. அருகிலுள்ள முக்கிய நகரங்களிலிருந்து பஸ் வசதிகளும் நிறைய உள்ளன.

மஹாபலேஷ்வர் சுற்றுலா விரும்பிகளின் சொர்க்கமாகும். ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையின் நெருக்கடி மிகுந்த நடைமுறையிலிருந்து ஒரு மாற்றம் அவ்வப்போது தேவைப்படுகிறது.

ஆகவே உங்கள் பயணப்பையை எடுத்துக்கொண்டு மஹாபலேஷ்வருக்கு ஒரு முறை பயணம் செய்து பாருங்கள். அந்த குளுமையான காற்றும் பரவசமூட்டும் இயற்கை எழில் காட்சிகளும் உங்களை மயக்கி ஒரு லேசான மனோ நிலைக்கு இழுத்துச் செல்லும் அனுபவத்தை பெறுவீர்கள்.

முதல் முறையாக வருபவராக இருந்தாலும் சரி அடிக்கடி வருபவராக இருந்தாலும் சரி, மஹாபலேஷ்வர் பகுதியின் அழகு உங்களை ஒவ்வொரு முறையும் அசர வைக்கும் எந்த சந்தேகமுமில்லை.

இப்படி ஒரு சுற்றுலாத்தலத்தை இந்தியாவிலேயே வசிப்பவர்கள் ஒரு முறையாவது விஜயம் செய்யாமல் இருந்தால் அது மன்னிக்க முடியாத குற்றம் என்றே கூட சொல்லலாம். ஆம், மஹாபலேஷ்வரின் அழகு அத்தகையது!

Please Wait while comments are loading...