மலயாட்டூர் தேவாலயம் உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்குவதால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச யாத்ரீக மையமாக திகழ்ந்து வருகிறது. இங்கு ஒருமுறை கிறிஸ்தவ மார்க்க உபதேசத்திற்காக ஏசுநாதரின் சீடர்களில் ஒருவரான செயின்ட் தாமஸ் வந்ததாக நம்பப்படுகிறது.
அதோடு அவர் வந்த காலத்தில் எங்கு கன்னி மேரியின் ஆலயத்தை நிறுவினாரோ, அதே பகுதியில்தான் இப்போது மலயாட்டூர் தேவாலயம் அமைந்திருக்கிறது.
மலயாட்டூர் குன்றுகளின் உச்சியில் அமைந்துள்ள மலயாட்டூர் தேவாலயம் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்த்து வருகிறது. இந்த தேவாலயம் கிரேக்கோ-ரோமன் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது.
இங்கு ஏராளமான சிற்ப வேலைப்பாடுகளும், ஓவியங்களும் காணப்படுவதுடன், ஏசு கிறிஸ்த்துவால் போதிக்கப்பட்ட மகிழ்ச்சி தரும் ஐந்து ரகசியங்களும் தேவாலய சுவர்களில் பொறிக்கப்பட்டுள்ளன.
அதோடு மார்தோம மண்டபம், தங்கச் சிலுவை, அற்புத நீரூற்று, பாறை ஒன்றில் காணப்படும் செயின்ட் தாமஸின் காலடித்தடம் மற்றும் அவருடைய முழு உருவச் சிலை போன்றவை தேவாலயத்தின் புகழுக்கு முக்கிய காரணங்களாக விளங்கி வருகின்றன.
மேலும் மலயாட்டூர் தேவாலயத்தில் ஆண்டுதோறும் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் மலயாட்டூர் பெருநாள் என்ற திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.



Click it and Unblock the Notifications