வார இறுதிகளிலும், விடுமுறை நாட்களிலும் புதுச்சேரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. எத்தனை பேருந்துகள் இயக்கப்பட்டாலும் புதுச்சேரி பேருந்து நிலையம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. இதற்கிடையில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தை புதுப்பித்து வருகின்றனர். தற்போது புதுச்சேரியில் 6 ஆண்டுகளுக்கு பிறகு பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு முதல்வர் அறிவிப்புக்கு பிறகு நடைமுறைக்கு வர உள்ளது!
அதிகரித்து வரும் புதுச்சேரி சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை
அழகான கடற்கரை நகரமான புதுச்சேரி, பிரெஞ்சு காலனித்துவ பாரம்பரியம் மற்றும் துடிப்பான இந்திய கலாச்சாரத்தின் மகிழ்ச்சிகரமான கலவையாகும். வண்ணமயமான கடற்கரைகள் துவங்கி, பிரெஞ்சு கட்டிடக்கலை, துடிப்பான கஃபேக்கள், ஆடம்பர பப்கள், அழகிய ஆரோவில், என புதுச்சேரி அனைவருக்குமான ஒரு சுற்றுலாத் தலமாக விளங்குகிறது புதுச்சேரி. இதனால் நீண்ட விடுமுறை நாட்களிலும், வார இறுதிகளிலும் புதுச்சேரி சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழிகிறது. புதுச்சேரிக்கு வருகை தரும் பயணிகளும் பொதுமக்களும் புதுவையில் செயல்படும் பேருந்து சேவைகளை வெகுவாக பயன்படுத்தி வருகின்றனர்.

புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணம்
புதுச்சேரியில் பஸ் கட்டணம் கடந்த 2018 ஆம் ஆண்டு உயர்த்தப்பட்டது அதை அடுத்து தற்போது ஆளுநர் கைலாஷ்நாதன் உத்தரவின்படி போக்குவரத்து துறை கூடுதல் செயலர் சிவக்குமார் புதுச்சேரி பேருந்து கட்டண உயர்வை தெரிவித்து தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, ஏ.சி., வசதி இல்லாத டவுன் பஸ்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாயில் இருந்து 7 ரூபாய் ஆகிறது. அதிகப்பட்ச கட்டணம் 13 ரூபாயில் இருந்து 17 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது குறைந்த பட்சம் 2 ரூபாய், அதிகபட்சம் 4 ரூபாய் என கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஏ.சி.டவுன் பஸ்களுக்கான கட்டணம் உயர்வு
டீலக்ஸ் நான் ஏ.சி.பஸ்களுக்கு, ஏ.சி.டவுன் பஸ்களுக்கான கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் டீலக்ஸ் ஏ.சி.பஸ்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் 12 ரூபாயில் இருந்து 16 ரூபாய்ஆகவும், அதிகபட்ச கட்டணம் 36 ரூபாயில் இருந்த 47 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏ.சி. அல்லாத எக்ஸ்பிரஸ் பஸ்கள் புதுச்சேரி எல்லைக்குள் கி.மீ.க்கு 0.75 பைசா என்பது 0.98 பைசாவாக உயர்த்தப்பட்டுள்ளது. 25 கி.மீ. வரை 20 ரூபாய் என இருந்த குறைந்தபட்ச கட்டணம் 25 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி-கடலூர் மற்றும் புதுச்சேரி-விழுப்புரம் கட்டணம் உயர்வு
ஏ.சி. எக்ஸ்பிரஸ் பஸ்கள் புதுச்சேரி எல்லைக்குள் கி.மீ. 1.30 என்பது தற்போது ரூ.1.69 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரி நகர பகுதிக்குள் ஏ.சி., வால்வோ பஸ் கி.மீ.க்கு 1.70 என்பது தற்போது 2.21 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது முதல் 30 கி.மீ.க்கு 54 ஆக இருந்த கட்டணம் தற்போது 70 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த கட்டண உயர்வு முதல்வர் அறிவிப்புக்குப் பிறகு ஓரிரு நாட்களில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய கட்டண உயர்வின் படி, புதுச்சேரியிலிருந்து கடலூர் செல்ல கட்டணம் 20 ரூபாயிலிருந்து 25 ரூபாய் ஆகவும், விழுப்புரம் செல்ல 25 ரூபாயிலிருந்து 30 ரூபாய் ஆகவும் உயர்ந்துள்ளது.



Click it and Unblock the Notifications



