இந்தியாவின் பல பிரபல கோயில்களில் கடுமையான ஆடைக் கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுகின்றன. பாரம்பரியத்தை நிலைநிறுத்தவும், ஆன்மீக ஒழுக்கத்தை ஊக்குவிக்கவும், பக்தர்களிடையே புனிதத்தன்மை மற்றும் சீரான உணர்வை உறுதி செய்யவும் ஆடைக் கட்டுப்பாடு பராமரிக்கப்படுகிறது. தமிழகத்தின் மதுரை மீனாட்சியம்மன் கோயில் துவங்கி, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில், திருப்பதி ஏழுமலையான் கோயில், குருவாயூர் கிருஷ்ணர் கோயில், பத்மநாபசுவாமி கோயில் உட்பட பல கோயில்களில் ஆடைக் கட்டுப்பாடுகள் உள்ளன. இப்போது இந்தியாவின் மற்றுமொரு பிரபல கோயிலிலும் ஆடைக் கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது!
மும்பை சித்தி விநாயகர் கோயிலில் தடை
இந்தியாவின் டாப் 10 பிரபல மற்றும் பணக்கார கோயில்களில் ஒன்றான மும்பை சித்தி விநாயக் கோயில் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான யாத்ரீகர்களை ஈர்க்கிறது. பாலிவுட் நட்சத்திரங்கள் துவங்கி, தொழிலதிபர்கள், பிரபல கிரிக்கெட் வீரர்கள் வரை மும்பையில் வசிக்கும் அனைவரும் இந்த கோயிலுக்கு செல்வது வழக்கம். இந்நிலையில், ஷார்ட்ஸ் மற்றும் உடல் தெரிவது போன்ற ஆடைகளை அணிந்து கொண்டு கோயிலுக்கு வரக்கூடாது எனவும் மீறி வரும் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ஸ்ரீ சித்தி விநாயகர் கணபதி கோயில் அறக்கட்டளை (SSGTT) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

பாரம்பரிய உடை அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே அனுமதி
கோயில் அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கையில், " சராசரியாக தினமும் 75,000 முதல் 90,000 பேர் கோயிலுக்கு வருகிறார்கள். கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அடக்கமான இந்திய பாரம்பரிய ஆடைகளை அணிய வேண்டும். தனிநபர்கள் உடலை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணிய வேண்டும் என்று விதிகள் கட்டளையிடுகின்றன" என்று கூறியுள்ளது. வழிகாட்டுதல்களை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் கோயில் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த முடிவு ஜனவரி 28 முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் பொருந்தும்
சமீபத்தில் நடந்த கூட்ட முடிவின் ஒரு பகுதியாக இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் வழிபாட்டுத் தலத்தில் புனிதத்தைப் பேணுவதற்காக உடையில் சில விதிகளை அமல்படுத்த ஒரு கூட்டு முடிவு எடுக்கப்பட்டது. யார் என்ன அணிய வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. கோயிலுக்கு வரும் நபர்கள் கண்ணியத்தைக் குறிக்கும் ஆடைகளை அணிய வேண்டும் என்று மட்டுமே நாங்கள் கூறுகிறோம். இது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் பொருந்தும் என்றும் கோயில் அறக்கட்டளை கூறியுள்ளது.

பாரம்பரியத்தை கடைபிடிக்கவே இந்த முடிவு
இந்த முடிவின் பின்னணியில் உள்ள காரணங்களை விளக்கிய அறக்கட்டளை உறுப்பினர் ராகுல் லோண்டேவின் கூற்றுப்படி, "பெரும்பாலும் டி-சர்ட் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்து கோயிலுக்குள் சாதாரணமாக நடந்து செல்லும் பக்தர்களை நாங்கள் சந்திக்கிறோம். "வெளிப்படையான ஆடைகளில் சிலர் வருகிறார்கள், ஒவ்வொரு இடத்திற்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உண்டு. சன்னதிக்குள் இருக்கும் தெய்வத்தின் முன் அநாகரீகமாக நிற்பதை கற்பனை செய்து பாருங்கள், அது மற்ற பக்தர்களையும் தொந்தரவு செய்கிறது. இதனால் தான் ஆடைக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
ஆடைக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள கோயில்கள்
1. மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
2. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில்
3. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில்
4. ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில்
5. குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோயில்
6. திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்
7. திருமலை வெங்கடேஸ்வர கோயில்
8. யாதகிரிகுட்டா லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில்
9. குக்கே சுப்பிரமணிய கோயில்
10. தர்மஸ்தலா மஞ்சுநாத கோயில்
11. பூரி ஜகந்நாதர் கோயில்
12. ஷீர்டி சாய்பாபா கோயில்
13. கோலாப்பூர் மகாலட்சுமி கோயில்
இது போன்ற பல பிரபல கோயில்களில் ஆடைக் கட்டுப்பாடுகல் கடைபிடிக்கப்படுகின்றன.



Click it and Unblock the Notifications




