வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. அடுத்த 2 நாட்களுக்குக்குள், இது தமிழ்நாடு - இலங்கை கடலோரத்தை நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நகரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இதனால் சென்னை உட்பட தமிழக கடலோர மாவட்டங்களில் கன மற்றும் மிக கனமழையை மக்கள் எதிர்பார்க்கலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!
சென்னையில் இந்த ஆண்டும் பாதிப்பு இருக்குமா?
கடந்த சில ஆண்டுகளாக டிசம்பர் மாதங்களில் தமிழ்நாட்டில் கனமழை பெய்து, சென்னை கடுமையாக வெள்ள பாதிப்பை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் சென்னை மக்கள், ஒரு பயத்துடனே இருந்து வரும் நிலையில், நடப்பு ஆண்டில், அக்டோபர் மாதமே மழை தொடங்கி, சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே போல ஒரு மழையை சென்னை மக்கள் இந்த ஆண்டும் எதிர்பார்க்கலாம்.

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்
23-11-2024 இல் பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது, 24-11-2024 காலை 05:30 மணி அளவில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஓட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்று, காலை 08:30 மணி அளவில் அதே பகுதியில் நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (25-11-2024) தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இது மேலும் அதற்கடுத்த இரு தினங்களில் வடமேற்கு திசையில் தமிழகம்- இலங்கை கடற்கரையை நோக் நகரக்கூடும்.
எங்கெங்கே எவ்வளவு மழை
25-11-2024 முதல் 28-11-2024 வரை கடலோர தமிழகத்தில் சென்னை உட்பட அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் கன மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கடலூர், விழுப்புரம், அரியலூர், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள், புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நெல்லூர் - புதுச்சேரி இடையே கரையை கடக்கும்
தென்மேற்கு வங்க கடலில் ஏற்பட்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் நிலைகொண்டிருந்திருந்தால், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில், கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனிடையே தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்பு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்றுள்ளதாகவும், நாளை மறுநாள் சென்னை அருகே நெல்லூர் - புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
சென்னை மக்கள் முன்கூட்டியே தேவையான உணவு பொருட்கள் மற்றும் மருந்துகள் வாங்கி வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மிக கனமழை பெய்து பாதிக்கப்படுவோம் என்று பயந்துவிட வேண்டாம், இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான். சென்னையின் அனைத்து பகுதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு உதவிகள் உடனே கிடைக்குமாறு வழிவகை செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கூடுதலாக, தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, மீனவர்கள் ஆழ்கடல் பகுதிகளில் மீன் பிடிக்க செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.



Click it and Unblock the Notifications



