மேற்கத்திய கலாச்சாரம் எனும் மோகத்தில் இந்திய மக்கள் பலரும் ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கத்தை அடியோடு மறந்து விட்டனர். இதனால் தான் மாரடைப்பு, நீரிழிவு நோய், சிறுநீரக நோய் என பலவிதமான நோய்களும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இது போன்ற எல்லாவற்றிற்கும் மூலதனமாக இருக்கும் உடல் பாரும் நோயும் இந்தியாவில் தலை விரிக்க ஆரம்பித்து விட்டது. சமீபத்திய ஆய்வில், 2050 ஆம் ஆண்டுக்குள் 44 கோடிக்கும் அதிகமான மக்கள் உடல் பருமனால் பாதிக்கப்படுவார்கள் என்று ஆய்வு தெரிவிக்கிறது!
உலக அளவில் இரண்டாவது இடம் பிடிக்கப்போகும் இந்தியா
தி லான்செட் ஜர்னல் வெளியிட்டுள்ள புதிய ஆய்வில், 2050 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 440 மில்லியனுக்கும் அதிகமான உடல் பருமன் மற்றும் அதிக எடை கொண்ட மக்கள் இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் இந்தியாவில் அதிக எடை மற்றும் பருமனான பெரியவர்களின் எண்ணிக்கை சீனாவிற்குப் பிறகு உலகின் இரண்டாவது மிக அதிகமாக இருக்கலாம் என்று உலகளாவிய பகுப்பாய்வு வெளிப்படுத்தியுள்ளது. அமெரிக்கா, பிரேசில் மற்றும் நைஜீரியா முறையே மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்றில் ஒரு மடங்கு மக்களுக்கு பாதிப்பு
சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழுவின் கண்டுபிடிப்பு, 2050 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 218 மில்லியன் ஆண்களும் 231 மில்லியன் பெண்களும் அதிக எடை மற்றும் உடல் பருமனால் பாதிக்கப்படுவார்கள் என்பதைக் காட்டுகிறது. மொத்தமாக 44 கோடிக்கும் அதிகமான மக்கள் உடல் பருமன் நோயால் பாதிக்கப்படுவார்கள். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) ஆராய்ச்சியாளர்களும் உலகளாவிய நோய் சுமை (GBD) ஆய்வு 2021 இன் ஒரு பகுதியாக இருந்ததை வைத்து இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் அதிகரித்து வரும் உடல் பருமன் நோய்
ஆய்வின்படி, ஏற்கனவே உலகின் பெரியவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர்; 25 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஒரு பில்லியன் ஆண்கள் மற்றும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பெண்கள், 2021 இல் அதிக எடை மற்றும் பருமனாக இருந்தனர். இந்தியாவில், இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 180 மில்லியனுக்கும் அதிகமாக இருந்தது - 81 மில்லியன் ஆண்கள் மற்றும் 98 மில்லியன் பெண்கள் இதில் அடங்குவர். இருப்பினும், 2050 ஆம் ஆண்டுக்குள், உலகளவில் இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 3.8 பில்லியனாக - 1.8 பில்லியன் ஆண்கள் மற்றும் 1.9 பில்லியன் பெண்களாக உயரக்கூடும்.

சிறு குழந்தைகளும் பாதிப்படைவார்கள்
5-14 வயதுடைய இந்தியாவில் சுமார் 16 மில்லியன் சிறுவர்கள் மற்றும் 14 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள், 2050 ஆம் ஆண்டுக்குள் அதிக எடை மற்றும் உடல் பருமனால் பாதிக்கப்படலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர், இது சீனாவிற்குப் பிறகு உலகின் இரண்டாவது அதிகபட்சமாக மாறும். சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகியவை அதிக எடை மற்றும் உடல் பருமன் கொண்ட உலக மக்கள்தொகையில் தொடர்ந்து ஒரு பெரிய விகிதத்தைக் கொண்டிருக்கும் அதே வேளையில், துணை-சஹாரா ஆப்பிரிக்கா சூப்பர் பிராந்தியத்தில் இந்த எண்ணிக்கை 254.8 சதவீதம் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதை சரிகட்டுவது எப்படி?
· துரித உணவு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை குறைத்து, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை பின்பற்ற வேண்டும்.
· நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், விளையாட்டுகள் என உடல் செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும்.
· சர்க்கரை பானங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற சிற்றுண்டிகளை சாப்பிடக்கூடாது.
· ஊட்டச்சத்து கல்வியை பள்ளி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும்.
· யோகா, தியானம் மற்றும் மன அழுத்த மேலாண்மை திட்டங்களை ஊக்குவிக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications



