Search
  • Follow NativePlanet
Share
» »கேரளாவின் 12 அழகிய அரண்மனைகள்!

கேரளாவின் 12 அழகிய அரண்மனைகள்!

By Super Admin

கேரள கட்டிடக்கலை என்பது திராவிட கட்டிடக் கலை மற்றும் இந்திய வாஸ்து சாஸ்த்திரத்தின் அடிப்படையில் உருவானது.

இருப்பினும் அதன் வெப்பநிலை, வரலாறு, நிலம் போன்ற காரணிகள் சார்ந்து தனித்துவமான கட்டிடக்கலையாக திகழ்ந்து வருகிறது.

இந்திய அளவில் கேரள பாணி கட்டிடக்கலைக்கு என்று எப்போதும் மவுசு இருக்கிறது. அந்த வகையில் கேரளாவில் அமையப்பெற்றுள்ள சில அழகிய அரண்மனைகள் குறித்து காண்போம்.

ஹில் பேலஸ்

ஹில் பேலஸ்

1865-ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஹில் பேலஸ், கொச்சிக்கு அருகிலுள்ள திருப்புணித்துறா என்ற இடத்தில் அமைந்துள்ளது. இதன் வளாகத்தில் மான் பண்ணை, தொல்லியல் அருங்காட்சியகம், சிறுவர் பூங்கா என மொத்தம் 49 கட்டிடங்கள் உள்ளன. கேரள மாநில தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ள இந்த வளாகம் அதன் பாரம்பரிய அழகு கெடாமல், மெருகுடன் அருங்காட்சியகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அரண்மனையில் 'சந்திரமுகி' படத்தின் ஒரிஜினலான 'மணிச்சித்திரத்தாழ்' திரைப்படம் படம்பிடிக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.

படம் : Gokulvarmank

கௌடியர் அரண்மனை

கௌடியர் அரண்மனை

கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள கௌடியர் அரண்மனை 1915-இல் கட்டப்பட்டதாகும். 150 அறைகளுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட இந்த அரண்மனைக்குள் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

படம் : Manu rocks

ஷக்தன் தம்புரான் அரண்மனை

ஷக்தன் தம்புரான் அரண்மனை

திரிசூர் நகரத்தை உருவாக்கிய அப்பன் தம்புரான் வாழ்ந்த அரண்மனையாக ஷக்தன் தம்புரான் அரண்மனை புகழோடு அறியப்படுகிறது. கொச்சி ராஜவம்சத்துக்கு சொந்தமாக இருந்த இந்த அரண்மனையை 1795-ஆம் ஆண்டில் ஷக்தன் தம்புரான் கேரள-டச்சு பாணியில் புதுப்பித்துள்ளார். 2005-ஆம் ஆண்டில் இந்த அரண்மனையானது ஒரு அருங்காட்சியகம் போன்று மாற்றப்பட்டுள்ளது. இங்கு தம்புரான் காலத்திய பல நினைவுப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. திப்பு சுல்தான் போன்ற பிரபல வரலாற்று ஆளுமைகள் இந்த அரண்மனைக்கு விஜயம் செய்ததற்கான ஆதாரங்களும் இங்கு காணப்படுகின்றன.

படம் : Sibyav

கனகக்குண்ணு அரண்மனை

கனகக்குண்ணு அரண்மனை

கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள கனகக்குண்ணு அரண்மனை திருவிதாங்கூர் மன்னர்களால் கட்டப்பட்டுள்ளது. இந்த அரண்மனை தற்போது திருவனந்தபுரத்தின் முக்கியமான பாரம்பரிய நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படும் பிரத்யேக மையமாக பயன்படுத்தப்படுகிறது. இதை ஒட்டியே நேப்பியர் மியூசியம் எனும் அருங்காட்சியகம் அமைந்துள்ளது.

படம் : Sajiv Vijay

பொல்கட்டி அரண்மனை

பொல்கட்டி அரண்மனை

கொச்சிக்கு அருகிலுள்ள பொல்கட்டி தீவில் அமைந்துள்ள பொல்கட்டி அரண்மனை 1744-ஆம் ஆண்டில் டச்சுக்காரர்களால் கட்டப்பட்டுள்ளது. இந்த அரண்மனை தொடக்கத்தில் மலபார் டச்சு கமாண்டரின் இருப்பிடமாக இருந்துள்ளது. பின்னர் 1909-ஆம் ஆண்டில் டச்சு வணிகர்கள் இம்மாளிகையை ஆங்கிலேயருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளனர். இந்தியா சுதந்திரமடைந்த பிறகு அரசுடமையாக்கப்பட்ட இந்த அரண்மனையில் தற்போது ஒரு பாரம்பரிய சொகுசு ஹோட்டலும், ரிசார்ட்டும் செயல்பட்டு வருகின்றன.

படம் : Innotata

கிருஷ்ணாபுரம் அரண்மனை

கிருஷ்ணாபுரம் அரண்மனை

ஆலப்புழா மாவட்டத்தில் அரபிக் கடலோரம் அழகாக காட்சியளித்துக்கொண்டிருக்கும் காயம்குளம் எனும் நகரத்தில் கிருஷ்ணாபுரம் அரண்மனை அமைந்துள்ளது. 18-ஆம் நூற்றாண்டில் அன்றைய திருவிதாங்கூர் மஹாராஜாவான அனிழம் திருநாள் மார்த்தாண்ட வர்மா இங்கிருந்த பழைய அரண்மனையை தரை மட்டமாக்கிவிட்டு ஒரே ஒரு தளத்தை மட்டுமே கொண்ட ஒரு எளிமையான அரண்மனையாக கிருஷ்ணாபுரம் அரண்மனையை உருவாக்கியுள்ளார். ஒரு மலையின் உச்சியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த அரண்மனையை சுற்றி புல்வெளிகள், நீரூற்றுகள் மற்றும் குளங்கள் ஆகியவை காணப்படுகின்றன.

படம் : Appusviews

குதிர மாளிகா

குதிர மாளிகா

கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் புகழ்பெற்ற கோயிலான பத்மநாபசுவாமி கோயிலுக்கு அருகில் குதிர மாளிகா அமைந்துள்ளது. புத்தென் மாளிகை என்ற பெயராலும் அறியப்படும் இம்மாளிகையின் கூரைப்பகுதிக்குக் கீழே குதிரை சிற்பங்கள் அமைந்திருப்பதால் குதிர மாளிகா (குதிரை மாளிகை) என்று அழைக்கப்படுகிறது. 1840-களில் கட்டப்பட்ட இந்த மாளிகை 150 ஆண்டுகளாக பூட்டப்பட்டு இருந்தது. பின்னர் 1991-ல் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு பிறகுதான் திறக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த அருங்காட்சியகத்தில் திருவிதாங்கூர் அரசுக்கு சொந்தமான வாள் முதலிய படைக்கலன்கள், சிம்மாசனங்கள், ஓவியங்கள், மர வேலைப்பாடுள்ள பொருட்கள், மற்ற நாடுகளில் இருந்து அரசுக்கு அளிக்கப்பட்ட பரிசுகள் முதலியன காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

படம் : Dinakarr

ஹால்சியோன் கேஸ்டில்

ஹால்சியோன் கேஸ்டில்

திருவிதாங்கூர் மஹாராணி சேது லட்சுமி பாயி என்பவருக்காக அவரது கணவர் ஸ்ரீ ராம வர்மா வலியக்கோயில் தம்புரான் என்பவரால் 1932ம-ஆம் ஹால்சியோன் கேஸ்டில் கட்டப்பட்டுள்ளது. இது திருவிதாங்கூர் ராஜ குடும்பத்தினருக்கான பிரத்யேக ஓய்வு மாளிகையாக இருந்துவந்தபோதும் 1964-ஆம் ஆண்டில் கேரள அரசாங்கத்துக்கு விற்கப்பட்டுவிட்டது. கோவளம் அரண்மனை என்று பிரபலமாக அறியப்படும் இந்த மாளிகை ‘கோவளம் இன்டர்நேஷனல் பீச் ரிசார்ட்' வளாகத்திலேயே இடம் பெற்றுள்ளது. இந்த பாரம்பரிய விடுதியை பிரபலமான ‘லீலா குரூப் ஆஃப் ஹோட்டல்ஸ்' நிறுவனம் ஒரு 5 நட்சத்திர விடுதியாக நடத்தி வருகிறது. (புகைப்படம் 1957-ல் எடுக்கப்பட்டது)

படம் : Dave Conner

பந்தளம் அரண்மனை

பந்தளம் அரண்மனை

பந்தளம் அரண்மனை அடூர் நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பந்தளம் எனும் சிறிய நகரத்தில், அச்சன்கோயில் ஆற்றங்கரையோரத்தில் அமைந்திருக்கிறது. இந்த அரண்மனையில் மதுரை பாண்டிய மன்னர்களின் வழித்தோன்றல்களாக கருதப்படும் பந்தளம் அரச பரம்பரையினர் வாழ்ந்து வந்தனர். பந்தளம் அரச பரம்பரையில் பிறந்தவராகவே சுவாமி ஐயப்பன் புராணங்களில் போற்றப்படுகிறார்.

படம் : Anoopan

கிளிமண்ணூர் அரண்மனை

கிளிமண்ணூர் அரண்மனை

இந்தியாவின் தலைசிறந்த ஓவியர்களில் ஒருவரான ராஜா ரவி வர்மா பிறந்த இடமாக கிளிமண்ணூர் அரண்மனை பிரபலமான அறியப்படுகிறது. இந்த அரண்மனையில் ஓவியம் வரைவதற்காகவும், அவற்றை சேகரித்து வைப்பதற்காகவும் சில கட்டிடங்களை ராஜா ரவி வர்மா உருவாக்கியுள்ளார்.

படம் : Fotokannan

ஆறன்முள கொட்டாரம்

ஆறன்முள கொட்டாரம்

கேரளாவில் உள்ள பாரம்பரிய கிராமமான ஆறன்முள கிராமத்தில் அமைந்துள்ள ஆறன்முள கொட்டாரம் அல்லது ஆறன்முள அரண்மனை 150 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டதாகும். இந்த அரண்மனை ஆறன்முள வடக்கே கொட்டாரம் ‎என்ற பெயரிலும் அறியப்படுகிறது. சபரிமலை புனித யாத்திரைகளுள் ஒன்றான "திருவாபரண கோச ‎யாத்திரை" இந்த அரண்மனையில் தாமதித்துச் செல்வது வழக்கம்.

படம் : Ajithchandra

மட்டாஞ்சேரி அரண்மனை

மட்டாஞ்சேரி அரண்மனை

1555-ஆம் ஆண்டில் கொச்சியை ஆண்ட வீர கேரள வர்மா என்பவருக்காக இந்த அரண்மனை போர்த்துகீசியர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்னர் 1663-ஆம் ஆண்டில் டச்சுக்காரர்களால் இதில் பல மாறுதல்களும் புதுப்பிப்பு வேலைகளும் செய்யப்பட்டு அதன் காரணமாக ‘டச்சு அரண்மனை' என்ற பெயராலும் இது அழைக்கப்பட்டு வந்தது. கொச்சி கோட்டை பகுதியிலேயே அமைந்துள்ள இந்த அரண்மனை தற்போது கேரள பாணி கலை மற்றும் பாரம்பரியத்துக்கான ஒரு அருங்காட்சியகத்தை போன்றே பயன்படுத்தப்படுகிறது. இதன் சுவர்களில் காணப்படும் சுவரோவியங்களில் ஹிந்து புராணக்காட்சிகள் மற்றும் கடவுளர்களின் உருவங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.

படம் : P.K.Niyogi

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X