Search
  • Follow NativePlanet
Share
» »அந்தமான் மட்டும் இல்லிங்க இந்தியாவுல இன்னும் 20 தீவுகள் இதே மாதிரி இருக்கு!

அந்தமான் மட்டும் இல்லிங்க இந்தியாவுல இன்னும் 20 தீவுகள் இதே மாதிரி இருக்கு!

By Staff

தீவு எனும் அற்புத உலகத்தை விரும்பாதவர்கள் உலகில் யாருமே இருக்க மாட்டார்கள். அதன் தனிமையும், சுற்றிலும் நீரால் சூழப்பட்ட பேரழகும், ஆழ்ந்த மௌனத்தில் ஒலிக்கும் கடலின் ஓங்கார சங்கீதமும் என அத்தனையும் ஆன்மீக அனுபவம்.

அந்த வகையில் உலகின் எந்த தீவுக்கும் சளைக்காத எழிலுடன் இந்தியாவில் சில தீவுகள் அமைந்துள்ளன. அவ்வாறு அமையப்பெற்றுள்ள தீவுகளில் கவின் கொஞ்சும் 20 தீவுகளைப் பற்றி இங்கே காண்போம்.

குரும்காட் தீவு

குரும்காட் தீவு

ஆமை வடிவத்தில் காணப்படும் குரும்காட் தீவு கர்நாடகாவின் கார்வார் கடற்கரையிலிருந்து 7 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு டால்பின் வேடிக்கை, பீச் வாலிபால், புதையல் வேட்டை போன்ற சுவாரசியமான பொழுதுபோக்கு அம்சங்கள் குவிந்துகிடக்கின்றன. மேலும் இங்குள்ள கடற்கரைப்பகுதியில் மீன் பிடித்தல், ஆழ்கடல் நீச்சல் (ஸ்நார்கெல்லிங்) போன்றவற்றில் சுற்றுலாப் பயணிகள் ஈடுபட்டு திளைக்கலாம்.

படம் : Gopal Venkatesan

அமினி தீவு

அமினி தீவு

லக்ஷ்வதீப்பில் நாம் எதை எதிர்பார்த்து செல்கிறோமோ அவை யாவுமே இந்த அமினி தீவில் நமக்காக காத்திருக்கின்றன. முட்டை வடிவத்தில் சிறியதாக காட்சியளிக்கும் இந்த தீவு வெறும் 3 கி.மீ நீளம் மற்றும் 1 கி.மீ அகலம் மட்டுமே கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. சூரிய அஸ்தமனக்காட்சிகளை கண்டு களிப்பதற்காக இந்த தீவிலுள்ள ரிசார்ட் விடுதிகள் செயற்கை மரப்பொருட்கள் கொண்டு அமைக்கப்பட்ட காட்சி தளங்களை அழகாக நிர்மாணித்துள்ளன. இவற்றில் அமர்ந்தபடி சூரிய அஸ்தமனத்தை ரசிக்கும் அனுபவத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. அகத்தி தீவிலிருந்து வாடகைப்படகில் இந்த அமினி தீவுக்கு வந்து சேரலாம்.

படம் : Sankara Subramanian

ஹேவ்லாக் தீவு

ஹேவ்லாக் தீவு

அடர்ந்த மழைக்காடுகள் போர்த்திய மலைகள், கடலோரம் வரை நீரைத் தொட்டுக்கொண்டு நிற்கும் நெடிதுயர்ந்த மரங்கள் என ஆழமற்ற மரகதப்பச்சை நிற கடலால் சூழப்பட்டது ஹேவ்லாக் தீவு. இந்த தீவில் கோவிந்தா நகர், ராதா நகர், பிஜோய் நகர், ஷ்யாம் நகர் மற்றும் கிருஷ்ணா நகர் என ஐந்து அழகிய கடற்கரைப்பகுதிகள் அமைந்துள்ளன. இவற்றில் ராதா நகர் கடற்கரையை ‘ஆசியாவிலேயே மிகச்சிறந்த அழகான கடற்கரை' என்று பிரபலமான ‘டைம்' பத்திரிகை 2004-ஆம் ஆண்டில் தேர்வு செய்தது. மேலும் போர்ட் பிளேர் நகரத்திலிருந்து வடகிழக்கே 55 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த ஹேவ்லாக் தீவுக்கு ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை ‘ஃபெர்ரி' சொகுசு படகுகள் இயக்கப்படுகின்றன.

படம் : mattharvey1

பங்காரம் தீவு

பங்காரம் தீவு

லக்ஷ்வதீப்பில் வேறெங்கும் இவ்வளவு ஹனிமூன் ஜோடிகளை பார்க்க முடியாது என்பதுபோல் பங்காரம் தீவு ஹனிமூன் ஜோடிகளால் எப்போதும் ஜேஜேவென்று இருக்கும். இந்த தீவில் கடற்கரைக்கு அருகிலேயே 60 காட்டேஜ்கள் அமைந்திருப்பதோடு, அவற்றுடன் பிரத்யேக உணவு விடுதியும் இணைக்கப்பட்டிருப்பதால் வேண்டிய உள்ளூர் உணவு வகைகளை வரவழைத்து ருசி பார்க்கவும் வசதியாக இருக்கிறது. இங்கு ஸ்கூபா டைவிங் மற்றும் ஸ்நார்க்கெலிங் போன்ற கடல் மூழ்கு நீச்சலில் ஈடுபட்டு நீருக்கடியில் உள்ள பலவிதமான உயிரினங்கள் மற்றும் பவளப்பாறை அமைப்புகளை பார்த்து ரசிக்கலாம். மேலும் லக்ஷ்வதீப்பில் மதுவுக்கு அனுமதி வழங்கப்படும் ஒரே தீவு இந்த பங்காரம் தீவுதான்!

கிரேட் நிக்கோபார்

கிரேட் நிக்கோபார்

கிரேட் நிக்கோபார் என்று அழைக்கப்படும் இந்த பெருந்தீவு நிகோபார் தீவுக்கூட்டங்களில் உள்ள மிகப்பெரிய தீவாகும். போர்ட் பிளேர் நகரத்திலிருந்து ஹெலிபாக்டர் சேவைகள் மற்றும் சொகுசுப்படகு (ஃபெர்ரி) மூலமாக பயணிகள் இந்த கிரேட் நிக்கோபார் தீவிற்கு வரலாம். அப்படி படகு மூலம் செல்லும்போது வழியில் லிட்டில் நிக்கோபார், நான்கௌரி மற்றும் கார் நிக்கோபார் என்று அழைக்கப்படும் வடக்கு நிகோபார் தீவுக்கூட்டங்கள் ஆகியவற்றை ரசித்தபடியே பயணிக்கலாம். இந்தத் தீவுப்பகுதியில் காணப்படும் நிக்கோபார் ஸ்க்ரப் பவுல் மற்றும் மெகாபாட் என்ற இரண்டு அரிய காட்டு கோழியினங்களை பயணிகள் கண்டு ரசிக்கலாம்.

படம் : Scheherezade Duniyadar

அகத்தி தீவு

அகத்தி தீவு

லக்ஷ்வதீப்பின் நுழைவாயிலாக அறியப்படும் அகத்தி தீவில்தான் சொகுசுப்படகுகளுக்கான துறைமுகமும், உள்நாட்டு விமான நிலையமும் அமைந்திருப்பதால் நீங்கள் இந்த தீவில் கால்பதிக்காமல் இருந்துவிட முடியாது. இந்த தீவு 4 ச.கி.மீ பரப்பளைவை மட்டுமே கொண்டிருப்பதால் ஒரு வாடகை சைக்கிளை எடுத்துக்கொண்டு தீவு முழுவதையும் சுற்றிப்பார்த்து விடலாம். இங்கு கண்ணாடி அடித்தளத்தை கொண்ட படகுகளில் பயணம் செய்து விதவிதமான பவளப்பாறை அமைப்புகளை கண்டு ரசிக்கலாம். மேலும் நீங்கள் இங்கு மீன் பிடித்து பொழுதை கழிக்கலாம் என்பதுடன் பிடித்த மீன்களை உடனே சமைத்து சாப்பிட ‘பார்பிக்யூ' வசதியும் இருக்கிறது.

கட்மத் தீவு

கட்மத் தீவு

லக்ஷ்வதீப்பின் அமிந்திவி தீவுக்கூட்டத்தை சேர்ந்த கட்மத் தீவு , ஏலக்காய் தீவு என்ற பெயரில் பிரபலமாக அறியப்படுகிறது. இந்த தீவில் கடல் ஆழம் குறைவாக காணப்படுவதுடன் ஏராளமான பவளப்பாறைகளும் அமைந்திருக்கின்றன. இங்கு ஸ்கூபா டைவிங்கில் ஈடுபட நபர் ஒருவருக்கு 2500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. மேலும் கடல் நீச்சல், ஸ்நார்க்கெலிங் போன்ற நீர் விளையாட்டுகளிலும் நீங்கள் ஈடுபட்டு மகிழலாம். அதுமட்டுமல்லாமல் இங்கு வரும் பயணிகள் மண் கோட்டை கட்டுவதிலும், மீன் பிடிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

போர்ட் பிளேர்

போர்ட் பிளேர்

அந்தமான் நிக்கோபார் யூனியன் பிரதேசத்தின் தலைநகரமான போர்ட் பிளேர் நகரம் தெற்கு அந்தமான் பகுதியில் அமைந்துள்ளது. இந்த போர்ட் பிளேர் நகரத்துக்கு வெகு அருகில் ராஸ் தீவு, வைப்பர் தீவு, உள்ளிட்ட சுற்றுலாத் தளங்கள் இருப்பதோடு, போர்ட் பிளேரிலும் எண்ணற்ற போழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. மேலும் சென்னை, கொல்கத்தா மற்றும் புவனேஸ்வர் நகரங்களிலிருந்து போர்ட் பிளேர் வீர சாவர்க்கர் விமான நிலையத்துக்கு தினசரி விமானங்கள் இயக்கப்படுகின்றன. இது தவிர இந்திய கப்பல் துறை நிறுவனம் பலவிதமான சொகுசு பயணக்கப்பல்களையும் போர்ட் பிளேர் நகருக்கு இயக்கி வருகிறது.

கல்பேணி தீவு

கல்பேணி தீவு

கொச்சியிலிருந்து 150 மை தூரத்தில் அமைந்துள்ள கல்பேணி தீவு 2.8 கி.மீ நீள தரைக்கடல் பகுதிக்காக புகழ்பெற்றுள்ளது. அதாவது தரைக்கடல் என்றால் கடற்கரையை ஒட்டி ஆழம் குறைவான அலைகள் அற்ற ஸ்படிகம் போன்ற தூய நீருடன் காட்சியளிக்கும் கடல் நீர்ப்பரப்பாகும். எனவே இங்கு கடல் குளியல் மற்றும் ஸ்நார்க்கலிங் போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டு பொழுதை கழிக்கலாம். இந்த தீவில் 37 மீட்டர் உயரத்துடன் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கலங்கரை விளக்கத்தின் உச்சிக்கு சென்றால் கல்பேணி தீவின் இயற்கை அழகை பரிபூரணமாக கண்டு ரசிக்க முடியும்.

ராஸ் தீவு

ராஸ் தீவு

போர்ட் பிளேர் நகரத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில் கிழக்கே அமைந்துள்ள ராஸ் தீவில் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட சில கட்டிட அமைப்புகளின் சிதிலங்கள் காணப்படுகின்றன. இங்கு 1857-ஆம் ஆண்டில் முதல் சுதந்திர போராட்டம் வெடித்த பின்னர் ஆங்கிலேயெ அரசாங்கம் இந்த தீவுப்பகுதியை அதிதீவிர சிறை வளாகமாக மாற்றி இங்கு முக்கியமான அரசியல் கைதிகளை அடைத்துவைக்க திட்டமிட்டது. இதற்கான கட்டமைப்பு ஏற்பாடுகள் ஏறக்குறை 80 வருடங்களுக்கு மேற்கொள்ளப்பட்டன. இப்படி ஏற்படுத்தப்பட்ட கட்டுமானங்கள் யாவும் இன்று சிதிலங்களாக காட்சியளிப்பதுதான் இந்த ராஸ் தீவின் பிரதான சுற்றுலா அம்சமாக அறியப்படுகிறது.

படம் : Shimjithsr

காவரத்தி தீவு

காவரத்தி தீவு

லக்ஷ்வதீப்பின் தலைநகரமான காவரத்தி தீவிற்கு இந்திய கடற்கரையிலிருந்து நேரடி சொகுசுப்படகு போக்குவரத்து உள்ளது. லக்ஷ்வதீப்பின் உல்லாசப்பொழுதுபோக்கு மையமாக திகழும் இந்த தீவில் நீச்சல் தெரிந்த மற்றும் தெரியாதவர்களும் பல்வேறு நீர் விளையாட்டுகளை பயிற்சியாளர்களின் உதவியோடு விளையாடி மகிழலாம். மேலும் 'ஸ்கூபா டைவிங்' செய்ய அச்சப்படுபவர்கள் குறைந்த ஆழத்தில் மேற்கொள்ளப்படும் ‘ஸ்நார்க்கெலிங்'-கில் ஈடுபட்டு மகிழலாம்.

வைப்பர் தீவு

வைப்பர் தீவு

1906-ஆம் ஆண்டில் அந்தமான் செல்லுலர் ஜெயில் கட்டப்படுவதற்கு முன்பு வைப்பர் தீவு ஒரு முக்கிய சிறைச்சாலைப்பகுதியாக பயன்படுத்தப்பட்டுள்ளது. போர்ட் பிளேர் நகரத்திலிருந்து 8 கி.மீ தூரத்தில் வடமேற்கே அமைந்துள்ள இந்த தீவுக்கு ஃபெர்ரி மூலமாக சென்றடையலாம். இந்தத் தீவில் ‘வைப்பர்' எனப்படும் கொடிய விஷம் கொண்ட ‘கண்ணாடி விரியன் பாம்புகள்' நிறைந்திருந்ததால் வைப்பர் தீவு என்று பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது.

படம் : Biswarup Ganguly

மாலிகு தீவு

மாலிகு தீவு

மாலத்தீவின் ஒரு அங்கமாக இருந்த மாலிகு தீவு 1976-ஆம் ஆண்டு இந்தியா மற்றும் மாலத்தீவு நாடுகள் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தின்படி இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதோடு மாலிகு தீவு பல அம்சங்களில் மாலத்தீவை போன்றே தனித்துவமான அழகுடன் காட்சியளிக்கிறது. மேலும் எங்கு பார்த்தாலும் உயர உயரமான தென்னை மரங்களுடன், அதிகம் பரபரப்பில்லாத தனிமையுடன் காட்சியளிக்கும் மாலிகு தீவிற்கு நீங்கள் வாழ்வில் முறையாவது வந்து செல்ல வேண்டும்.

படம் : Ajmal Hussain PKH

ஜாலி பாய்

ஜாலி பாய்

‘மஹாத்மா காந்தி மரைன் நேஷனல் பார்க்' அல்லது ‘வாண்டூர் நேஷனல் பார்க்' எனப்படும் கடல்சார் தேசியப்பூங்காவின் ஒரு அங்கமாக வீற்றுள்ளது ஜாலி பாய் தீவுப்பகுதியில் சில அரிய வகை பவளப்பாறை வளர்ச்சிகளை பயணிகள் கண்டு களிக்கலாம். இந்த ஜாலி பாய் தீவை நோக்கி பயணிக்கும் அனுபவமே உங்களை மெய்மறக்க வைத்துவிடும். அதாவது போர்ட் பிளேருக்கு மிக அருகிலேயே உள்ள ஜாலி பாய் தீவுக்கு பல அழகிய தீவுகளின் வழியாக, நீலப்பச்சை நீர்ப்பரப்பின் ஊடே நீளும் ஃபெர்ரி பயணத்தில் கூடவே வரும் வழிகாட்டிகள் ஆங்காங்கு காணப்படும் எழில் அம்சங்கள், தாவரங்கள் மற்றும் கடல் உயிரினங்களை சுட்டிக்காட்டி விளக்குகின்றனர்.

படம் : MGA73bot2

எலஃபண்டா தீவு

எலஃபண்டா தீவு

எலஃபண்டா தீவுக்கு 17-ஆம் நூற்றாண்டுகளில் வந்த போர்த்துகீசிய ஆராய்ச்சியாளர்கள் இங்கு நிறைய யானை சிற்பங்கள் இருப்பதைக் கண்டு இதற்கு எலஃபண்டா தீவு என்று பெயரிட்டனர். அதற்கு முன்பு கராப்புரி என்ற பெயரிலேயே இந்தத் தீவு அழைக்கப்பட்டு வந்தது. இதற்கு குகைகளின் நகரம் என்று பொருள். மும்பையின் கேட்வே ஆஃப் இந்தியா முனையத்திலிருந்து படகு அல்லது ஃபெர்ரி சேவை மூலமாக சுலபமாக எலஃபண்டா தீவை அடையலாம். இதற்கான கட்டணமாக அவர்கள் வசூலிக்கும் தொகையும் மிகவும் குறைவே. அதோடு ஒவ்வொரு மணி நேரத்துக்கும் இரண்டு முறை எலஃபண்டா தீவுக்கு ஃபெர்ரி சேவை இயக்கப்படுகிறது.

படம் : Ting Chen

நீல் தீவு

நீல் தீவு

போர்ட் பிளேர் பகுதியிலிருந்து 40 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள அழகிய தீவான நீல் தீவு 19 சதுர கி.மீ நீளம் பரந்து விரிந்து கிடக்கிறது. இந்தத் தீவு ஹேவ்லாக் தீவைப்போல் பரபரப்பின்றி காணப்படுவதால், அமைதி விரும்பிகள் கட்டாயம் இங்கு வரலாம். இத்தீவை போர்ட் பிளேரிலிருந்து அடைவதற்கு நாள் ஒன்றுக்கு 2 படகுகள் இயக்கப்படுவதோடு, 2 மணிநேரத்தில் நீல் தேவை இந்தப் படகுப் போக்குவரத்தில் அடைந்துவிட முடியும். இங்கு சீதாநகர், ராம்நகர், லக்ஷ்மண்பூர் என 3 கவின் கொஞ்சும் கடற்கரைகள் அமையப்பெற்றுள்ளன.

படம் : Dastra

சாகர் தீவு

சாகர் தீவு

கொல்கத்தா கடலோரப் பகுதியில் உள்ள சாகர் தீவின் வாழ்க்கை முறை, உணவு வகைகள், படகு சவாரிகள் என அனைத்துமே ஒரு புது உலகத்தை சுற்றுலாப் பயணிகளுக்கு அறிமுகப்படுத்தும்.

படம் : Abhijit Kar Gupta

வில்லிங்டன் ஐலேண்ட்

வில்லிங்டன் ஐலேண்ட்

1936-ஆம் ஆண்டில் வேம்பநாடு ஏரியில் இந்த தீவு முதல் முதலில் உருவாக்கப்பட்டு புதிய கொச்சி துறைமுகமாக நிர்மாணிக்கப்பட்டது.

படம் : Vssun

செயிண்ட் மேரி தீவு

செயிண்ட் மேரி தீவு

கர்நாடகாவின் மங்களூர் நகரிலிருந்து 58 கி.மீ தொலைவில் உள்ள செயிண்ட் மேரி தீவு, தேங்காய் தீவு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இது உடுப்பி மாவட்டத்தின் மால்பே கடற்கரைப் பகுதிகளில் அமைந்திருக்கும் நான்கு தீவுகளின் தொகுப்பாகும். இங்கு உள்ள தூண் போன்ற வடிவத்தில் காட்சி தரும் எரிமலை பாறைகள் பயணிகளிடையே மிகவும் பிரபலம். எனவே ஒரு புதுமையான கடற்கரையை கண்டு ரசிக்கும் ஆர்வமுள்ள பயணிகள் இந்த தீவுப்பகுதிக்கு தாராளமாக வரலாம்.

படம் : Man On Mission

மன்ரோ ஐலேண்ட்

மன்ரோ ஐலேண்ட்

மன்ரோ துருத் என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் இந்த மன்ரோ தீவுப்பகுதி எட்டு குட்டி தீவுகளை உள்ளடக்கியுள்ளது. கொல்லம் நகரிலிருந்து 27 கி.மீ தூரத்தில் அஷ்டமுடி நீர்த்தேக்கம், கல்லடா ஆற்றோடு சங்கமிக்கும் இடத்தில் அமைந்திருக்கிறது.

படம் : DhanushSKB

Read more about: தீவுகள்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more