சுற்றுலா செல்லும் போது ஏதோ சில இடங்களுக்கு போய் ஜாலியாக இருந்து விட்டு வந்தோம் என்று இல்லாமல், குழந்தைகளுக்கு வித்தியாசமான அனுபவத்தை தரும் வகையிலான டிரிப்பாக இருந்தால் அவர்களாலும் மறக்க முடியாததாக இருக்கும். அப்படி குடும்பத்துடன் சென்று சுற்றிப் பார்க்க ஏற்ற தென்னிந்தியாவில் உள்ள 8 வனவிலங்கு தேசிய பூங்காக்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

பந்திப்பூர் தேசிய பூங்கா (கர்நாடகா)
பந்திப்பூர் தேசிய வனவிலங்குகள் பூங்கா புலிகள், யானைகள் மற்றும் சிறுத்தைகளின் தாயகம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு செல்ல உகந்த மாதங்கள் அக்டோபர் முதல் பிப்ரவரி வரை ஆகும். இந்த மாதங்களில் சென்றால் இதமான வானிலையை அனுபவிப்பதுடன், நல்ல புகைப்படம் எடுக்கும் சூழலும் கிடைக்கும்.
பெரியார் வனவிலங்கு சரணாலயம்
பெரியார் தேசிய பூங்கா, கேரள மாநிலத்தில் உள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதி ஆகும். மேற்குத் தொடர்ச்சி மலையில், தமிழ்நாடு - கேரளா எல்லையில் அமைந்துள்ள இப்பூங்கா, தேக்கடி என்றும் அழைக்கப்படுகிறது. ஏராளமான பசுமையான மற்றும் அடர்ந்த காடுகளைக் கொண்டது. மான்கள், யானைகள், சாம்பர், லங்கூர் போன்ற பல விலங்குகள் தங்குமிடமாக இது உள்ளது. இங்கு படகு சவாரி செய்யும் வசதியும் உள்ளது.
நாகர்ஹோல் தேசிய பூங்கா (கர்நாடகா)
கர்நாடகாவில் குடகு மாவட்டம் மற்றும் மைசூர் மாவட்டத்தில் இந்த தேசிய பூங்கா அமைந்துள்ளது. சிறுத்தைகள், யானைகள் மற்றும் காட்டு நாய்கள் நிறைந்த பசுமையான புலிகள் காப்பகம் ஆகும். இங்கு அடர்ந்த வனப்பகுதிகள், சிறு ஓடைகள், பள்ளத்தாக்குகள், நீர்வீழ்ச்சிகள் ஆகியவை உள்ளன. இது குழந்தைகளை அழைத்துச் செல்ல ஏற்ற இடமாகும்.

முதுமலை தேசிய பூங்கா ( தமிழ்நாடு)
இது தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் உள்ளது. இந்த தேசிய பூங்கா யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு யானைகள் முகாம் உள்ளது. இது சுற்றுலா வரும் பார்வையாளர்களை கவரும் ஒன்றாகும். முதுமலையில் யானை, காட்டெருமை, புலி, சிறுத்தை, கரடி, மான், பறக்கும் அணில், காட்டு முயல், முதலை, காட்டு நாய் போன்ற பல்வேறு விலங்குகள் உள்ளன.
சைலன்ட் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா
இது கேரளாவில் இரண்டாவது பெரிய தேசிய பூங்கா ஆகும். இந்த பூங்கா அழகிய மலைக் காடுகளை உள்ளடக்கியது. இந்த பள்ளத்தாக்கில் சிங்கவால் கொண்ட குரங்குகள் அதிக அளவில் உள்ளன. இது குறைந்து வரும் மிக அரிய வகை வனவிலங்காக கருதப்படுகிறது.
பத்ரா வனவிலங்கு சரணாலயம்
பத்ரா சரணாலயம், ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதி ஆகும். இது புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தோன்றிய புலிகள் காப்பகம் ஆகும். இங்கு ஜீப்புகளில் சஃபாரி செய்து வனவிலங்குகளை காண்பது மிகவும் பிரபலமான ஒன்றாகும். புலிகள் தவிர யானைகள், புள்ளி மான்கள், சிறுத்தைகள், காட்டு நாய்கள், சாம்பர் மற்றும் அழகான மயில்கள் ஏராளமாக உள்ளன.
சத்தியமங்கலம் வனவிலங்கு சரணாலயம்
இது தமிழ்நாட்டின் மிகப்பெரிய வனவிலங்கு சரணாலயம் ஆகும். யானைகள் மற்றும் கருஞ்சிறுத்தைகள் அதிக அளவில் உள்ளன. இங்கே ஜீப் சஃபாரி செய்து புலிகள் வழித்தடத்தை காணலாம். இங்குள்ள அழகான மலைகளும், நீர் பரப்பும் மிகவும் ரம்மியமாகவும் மனதிற்கு சிலிர்ப்பூட்டும் அனுபவமாகவும் இருக்கும்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்
இது தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற புலிகள் காப்பகம் ஆகும். புலிகள், சிறுத்தைகள்,தனித்துவமான உள்ளூர் பறவைகளின் தாயகமாக இந்த காப்பகம் உள்ளது. இது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி ஆகும். இங்கு செல்ல வனத்துறையினரிடம் முறையாக அனுமதி வாங்கிய பின்னரே செல்ல முடியும்.



Click it and Unblock the Notifications



