Search
  • Follow NativePlanet
Share
» »அதிசயங்கள் நிகழ்த்தும் அற்புதக் கோவில் – இங்கு சென்று வழிபட்டால் அனைத்து துன்பங்களும் நீங்கி விடுமாம்!

அதிசயங்கள் நிகழ்த்தும் அற்புதக் கோவில் – இங்கு சென்று வழிபட்டால் அனைத்து துன்பங்களும் நீங்கி விடுமாம்!

சம்பந்தரால் பாடல் பெற்ற சிவஸ்தலம், வக்கிரன் வழிப்பட்ட ஸ்தலம், பாடல் பெற்ற தொண்டை நாட்டு தலங்களில் ஒன்று, மூர்த்தி, தலம் மற்றும் தீர்த்தம் ஆகிய முப்பெருமைகளையும் கொண்ட தலம் என பற்பல சிறப்புகள் வாய்ந்த திருவக்கரையில்

மன நிம்மதி வேண்டி வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரம் அருளும் அற்புத தெய்வமாக திருவக்கரை வக்கிர காளியம்மன் விளங்குகிறாள்.

இங்கு சென்று வக்ர காளியை வழிபட்டால் எல்லா வக்கிரங்களும் தீரும், எல்லா துன்பங்களும் மறைந்து மகிழ்ச்சி நிலவும்.

இந்தக் கோவிலின் சிறப்புகள் என்னென்ன? யாரெல்லாம் செல்ல வேண்டும்? எப்போது செல்ல வேண்டும்? கோவில் எங்கே அமைந்திருக்கிறது போன்ற அனைத்துக் கேள்விகளுக்கும் விடை இங்கே உள்ளது!

சந்திரமவுலீஸ்வரர் ஆலயமே வக்ர காளியம்மன் ஆலயமாக பெயர் பெற்றது

சந்திரமவுலீஸ்வரர் ஆலயமே வக்ர காளியம்மன் ஆலயமாக பெயர் பெற்றது

முதலாம் ஆதித்த சோழன் தொடங்கிப் பல சோழ மன்னர்கள் இந்தக் கோவிலை புதுப்பித்தும் விரிவு படுத்தியும் கட்டி வந்திருக்கிறார்கள். மிகப் பழமையான பெருமையும், புனிதமும், சிறப்புகளும் நிறைந்த திருவக்கரை உண்மையிலேயே ஒரு சிவஸ்தலம் ஆகும்.

திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சேக்கிழார், அருணகிரிநாதர், ராமலிங்க சுவாமிகள் ஆகிய அருளாளர்கள் திருவக்கரை அருள்மிகு சந்திரமவுலீசுவரரை பாடி உள்ளனர்.

தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றான ஸ்ரீசந்திர மவுலீஸ்வரர் ஆலயத்தில் தான் வக்ர காளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இத்திருத்தலம் மூலவராக உள்ள சந்திரமவுலீஸ்வரரின் பெயரில் விளங்கினாலும் வக்கிர காளியம்மனே பிரசித்தி பெற்று விளங்குகிறார்.

இங்கு நடராஜர் தன் இயல்பான தாண்டவத்தினின்றும் மாறுபட்டு வக்கிர தாண்டவம் ஆடுவது குறிப்பிடத்தக்கது. சாஸ்திரப்படி முக லிங்கங்களின் முகங்கள் வெவ்வேறு முறையில் அமைந்திருக்க வேண்டும். ஆனால் இங்கே லிங்கத்தின் மூன்று முகங்களும் வேறுபாடில்லாமல் அமைந்திருப்பது விந்தையாக உள்ளது.

ஸ்தல வரலாறு

ஸ்தல வரலாறு

வக்ராசூரன் என்ற அசுரனை வரதராஜ பெருமாள் சம்காரம் செய்கிறார். அந்த வக்ராசூரனின் தங்கை துன்முகியை வக்ர காளி சம்காரம் செய்யும் போது அந்த ராட்சசி துன்முகி கர்ப்பமாக இருந்தாளாம். குழந்தையை வதம் கூடாது என்பது தர்ம சாஸ்திரம். எனவே துன்முகியின் வயிற்றில் கருவிலுள்ள குழந்தையை காளி தனது வலது காதில் குண்டலமாக அணிந்து கொண்டு ராட்சசியை சம்காரம் செய்தாளாம். வக்கிராசூரனின் தங்கையை அழித்ததால் வக்ரகாளியாக அங்கேயே அமர்ந்து விட்டாளாம்.

சம்காரம் பண்ணியதால் ஓங்காரமாக நின்ற காளியை ஆதி சங்கரர் வந்து சாந்தம் செய்து இடது பாதத்தில் ஸ்ரீ சக்ர ராஜ எந்திரத்தை பிரதிஷ்டை செய்துள்ளார்.ராகு கேது கிரகங்களுக்கு அதிதேவதை காளி என்பதால் வலது புறம் 5 இடப்புறம் 4 என்ற கணக்கின்படி சுற்றிவர வேண்டும் என்பது ஐதீகம். எனவே தான் இது வக்ர சாந்தி திருத்தலம் என்று பெயர் பெற்றது.

பலன் தரும் வக்ர காளி

பலன் தரும் வக்ர காளி

வக்கிர கிரகங்களால் வாழ்க்கையில் பாதிக்கப்பட்டவர்கள் இத்திருத்தலத்திற்கு வந்து வக்கிர காளி, வக்கிர லிங்கம், வக்கிர சனி பகவான் முதலியோரை தரிசித்து வக்கிரமாக கட்டப்பட்டுள்ள இக்கோவிலை வலம் வந்தால் வக்கிர கிரகங்களின் தொல்லைகளும் துன்பங்களும் நீங்கப் பெற்று வாழ்க்கையில் பயன் அடைவர்.

திருமணமாகாதோர், பிள்ளைப்பேறு அற்றோர், வேலை வாய்ப்பு வேண்டுபவர், குடும்பத்தில் தீராத பிரச்சினையை சந்திப்பவர்கள் அனைவரும் இக்கோவிலில் உள்ள துர்க்கையம்மனை தரிசித்து, செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் ராகுகால நேரத்தில் அர்ச்சனை செய்தால் நல்ல பலன் உண்டு.

மனநிம்மதி கிடைக்க, கிரக தோசங்கள் நீங்க, காரியத் தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாக, பூர்வஜென்ம பாவங்கள் விலக, புத்திர தோசங்கள் விலக, பாவ தோசங்களும் விலக, காரியத் தடைகள் நீங்க இந்த கோவிலுக்கு வருகைத் தர வேண்டும்.

காளி வழிபாடு

காளி வழிபாடு

அம்மனை ராகுகாலத்தில் தரிசிப்பது மிகவும் விசேஷம். அம்மனுக்கு பூ, எலுமிச்சை மாலை சாத்துவது மிகவும் நல்லது. மேலும் தேங்காய் பழங்கள் குங்குமம் கொண்டு அர்ச்சனையும் செய்யலாம். இந்த ஆலயத்தில் பல்வேறு பரிகாரங்களும் செய்யப்படுகின்றன. ஆலய அலுவலகத்தில் சென்று விசாரித்து பரிகாரங்களை மேற்கொள்ளுங்கள். நிச்சயம் வாழ்வில் மாற்றம் ஏற்படும்.

அமாவாசை, பவுர்ணமி விழாக்காலங்களில் வக்கிர காளியம்மனை சந்தன காப்பு அலங்காரத்துடன் காணும் காட்சி கண் கொள்ளாக் காட்சியாகும். பவுர்ணமி தினத்தில் இரவு 12 மணிக்கும், அமாவாசையில் பகல் 12 மணிக்கும் இங்கு காட்டப்படும் ஜோதி தரிசனம் நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அதனைக் காண தவறாதீர்கள்.

நினைத்த காரியம் கைகூட வக்கிர காளியம்மனைத் தொடர்ந்து மூன்று பவுர்ணமி நாளில் தரிசிக்க வேண்டும். எந்தவிதமான பிரச்சினைகள் இருந்தாலும் கோரிக்கை சீட்டு எழுதி சூலத்தில் கட்டி வைத்தால் மறுமுறை நீங்கள் கோவிலுக்கு வருவதற்குள் அதற்கு காளி பதிலளித்து விடுகிறாள் என்பது ஐதீகம். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் தம்பதி சகிதமாக ஆலயத்திற்கு வந்து அம்மனை மனமுருகி வழிபட்டுச் செல்கிறார்கள்.

கோவிலை அடைவது எப்படி?

கோவிலை அடைவது எப்படி?

விழுப்பரம் மாவட்டம் திண்டிவனத்தில் வராக ஆறு என அழைக்கப்படும் சங்கராபரணி ஆற்றின் வடகரையில் இந்த திருத்தலம் அமைந்துள்ளது. திண்டிவனம் நகரில் இருந்து பேருந்து வசதி உள்ளது. திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் வழியில் மயிலம் வழியாக பெரும்பாக்கம் என்ற இடத்தில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோ அல்லது வாடகைக் கார் மூலம் திருவக்கரை கோவிலை அடையலாம்.

திருவக்கரை கோவிலுக்கு ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் புதுச்சேரியில் இருந்தும், திண்டிவனத்தில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன

திருவக்கரை வக்கிர காளியை வழிபட்டால் எல்லா வக்கிரங்களும் தீர்ந்து மனம் பக்குவப்படும். வக்ர காளியம்மனை தொடர்ந்து தரிசனம் செய்து வந்தால் வாழ்வில் நிச்சயம் திருப்பம் ஏற்படும் என பக்தர்கள் கருதுகின்றனர். எனவே நீங்களும் இங்கு சென்று வாருங்கள்.

Read more about: thiruvakkarai puducherry
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X