சென்னைக்குள் ஏது ஒரு நீர்வீழ்ச்சி என்று நீங்கள் கேக்குறீர்களா? ஆனால், உண்மையில் உங்கள் வீட்டு குட்டீஸ்கள் மற்றும் நண்பர்களுடன் ஆனந்தமாக நீரில் ஆட்டம் போட்டு மகிழ்ந்து, நீச்சலடிக்க ஒரு சூப்பர் ஸ்பாட் உள்ளது. சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில், கேளம்பாக்கத்தை அடுத்த தையூரில் தான் அமைந்துள்ளது இந்த குட்டி நீர்வீழ்ச்சி! இந்த இடத்திற்கு எப்படி செல்வது? எப்போது செல்வது என்று இங்கே பார்ப்போம்!
சென்னைக்குள் பலரும் அறியாத நீர்வீழ்ச்சி
கடற்கரைகள், கோட்டைகள், கோவில்கள், மால்கள், தியேட்டர்கள் என சென்னைக்குள் பொழுதை போக்க பல இடங்கள் இருந்தாலும் கூட்ட நெரிசலில் இருந்து தப்பி சென்று தான் அவற்றை பார்க்க வேண்டும். ஆனால் சென்னைக்கு உள்ளேயே அதிக மக்களால் ஆராயப்படாத ஒரு சிறு நீர்வீழ்ச்சி இருக்கிறதே! சென்னைக்குள் நீர்வீழ்ச்சியா! ஆம்! இது சென்னை கேளம்பாக்கத்தில் அமைந்துள்ளது. இந்த வாரம் உங்கள் குடும்பம் குழந்தைகளுடன் அங்கு சென்று வரலாமே. எப்பொழுது செல்வது? எப்படி செல்வது? அங்கே என்ன ஸ்பெஷல் என கீழே காண்போம்!

சென்னைக்கு உள்ளேயே நீர்வீழ்ச்சி
சென்னை நகரத்தின் வாகன நெரிசல், புகை மூட்டம், கூட்ட நெரிசலில் சிக்காமல் இந்த வார இறுதியை கழிக்க இது ஒரு சரியான ஸ்பாட். எங்கு பார்த்தாலும் நீர்வீழ்ச்சி நிரம்பி வழிகிறதே, ஆனால் நம்மால் போக முடியவில்லையே என்ற கவலையா உங்களுக்கு. இந்த இடம் உங்களது கவலையை போக்கி விடும் மக்களே. ஒரு நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தால் என்ன ஒரு உணர்வு கிடைக்குமோ அது உங்களுக்கு இங்கயே கிடைத்து விடும். ஆம்! சென்னை கேளம்பாக்கத்திலேயே ஒரு நீர்வீழ்ச்சி இருக்கிறது.
இயற்கை சுற்றுலாத் தலங்கள் சூழ்ந்த சென்னை
சென்னை, அதன் நகர்ப்புற நிலப்பரப்புக்கு பெயர் பெற்றிருந்தாலும், இயற்கையில் புத்துணர்ச்சியூட்டும் வகையில் பல இயற்கை சுற்றுலாத் தலங்களால் சூழப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த காலங்களில் புகலிடமாக பறவைக் கண்காணிப்பாளர்களுக்கு, சொர்க்கமாக விளங்கும் ஏரி முதல், மலையேற்றப் பாதைகள் மற்றும் இயற்கைக் காட்சிகளுடன் அமைதியான பின்வாங்கலை வழங்கும் மலைவாசஸ்தலம், அழகான கடற்கரைகள் மற்றும் பழங்கால பாறைக் கோயில்களுக்குப் பெயர் பெற்ற பிரபல கடற்கரை நகரம் வரை சென்னைக்கு அருகில் அமைதியான சுற்றுலாத் தலங்கள் பல உண்டு. அவற்றில் ஒன்று தான் இந்த தையூர் அணைக்கட்டு.

பருவமழையால் நிரம்பி வழியும் ஏரி
சென்னை கேளம்பாக்கத்தை அடுத்த தையூரில் இந்த அழகான ஏரி அமைந்துள்ளது. பருவமழை இது பருவமழை காலம் என்பதால் ஏரி முழுவதுமாக நிரம்பியுள்ளது. சுற்றிலும் பசுமை, ஏரி முழுக்க நீர், சிறிய நீர்வீழ்ச்சி என இந்த இடமே மிகவும் ரம்மியமாக இருக்கிறது. இது ஒரு எட்டு அடி நீர்வீழ்ச்சி தான். அதனால் பெண்களும் குழந்தைகளும் எந்த பயமும் இன்றி இங்கு வருகை தரலாம். ஆனந்தமாக குளிக்கலாம். இது நீர்வீழ்ச்சியில் குளிப்பது போன்ற ஒரு உணர்வை கொடுக்கும், அதுதான் இந்த ஏரியின் சிறப்பம்சம் ஆகும்.
குழந்தைகளை அழைத்துச் செல்ல சரியான ஸ்பாட்
எப்பொழுதும் நகரத்திற்கு உள்ளேயே சுற்றி கொண்டிருக்கும் நீங்கள், இயற்கை சார்ந்த ஒரு இடத்தை தேடுகிறீர்கள் என்றால் இந்த இடம் சரியான சாய்ஸ். அதே போல செலவே இல்லாமல் உங்கள் குழந்தைகளை பிக்னிக் அழைத்து செல்வது போலவும் இருக்கும். காலையில் இந்த இடத்துக்கு வந்தாலும் கூட குழந்தைகளுடன் குளித்து முடித்துவிட்டு மதிய உணவுக்கு வீட்டுக்கே வந்து விடலாம். நீங்கள் அங்கு சென்றாலே பலர் குடும்பம் குடும்பமாக தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து இருப்பதை நீங்களே காணலாம்.
கூட்டம் கூட்டமாக வந்து செல்லும் மக்கள்
சென்னையை வெளுத்து வாங்கிய கன மழையால் ஏரி முழு கொள்ளளவை இப்பொழுது அடைந்துள்ளது. முழுதாக நிரம்பி வழியும் ஏரியை காண மக்கள் திரள் திராளாக வருகை தருகின்றனர். ஏரியும் கூட அதிகம் ஆழம் இல்லாதது என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். ஏரியின் முழு காட்சியையும் காண அருகே உள்ள படிக்கட்டின் மீது ஏறி பார்க்கலாம். ஆனால் பாறைகளின் மீது ஏற வேண்டாம். பாசி அதிகமாக இருப்பதால், வழுக்கி விட்டு அடிபட வாய்ப்புகள் அதிகம், அதனால் கூடுதல் கவனத்துடன் இருக்கவும்.
எப்படி செல்வது?
சென்னையில் நீங்கள் எங்கு இருந்தாலும் சோழிங்கநல்லூரை அடைந்து, OMR சாலையில் கேளம்பாக்கத்தை அடையவும். கேளம்பாக்கத்தில் இருந்து 2 கிமீ தூரத்தில் தையூர் அமைந்துள்ளது. தையூரின் மையத்தில் உள்ள ஒரு கோவிலின் அருகே உங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு நடந்து சென்றால் இருந்து 100 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள ஏரியை அடைந்திடலாம். நீங்கள் சொந்த வாகனங்களிலும் வரலாம், ஒரு லாங் ரைடு போவது போல இருக்கும். அல்லது சென்னை மாநகர பேருந்தில் கேளம்பாக்கத்தை அடைந்து, அங்கிருந்து ஆட்டோ மூலமாகவும் இந்த இடத்தை அடையலாம்.
இங்கு வந்தால் நேரம் போவதே தெரியாது. உங்களுக்குள் இருக்கும் குழந்தைத்தனம் வெளிப்படுவதை நீங்கள் உணருவீர்கள். முக்கியமாக உங்கள் வீட்டு குட்டிஸ்களுக்கு இந்த இடம் மிகவும் பிடிக்கும். இப்பொழுது தான் கன மழை பெய்து முடிந்திருக்கிறது. ஆகவே இப்போதே செல்லுங்கள்!



Click it and Unblock the Notifications



