Search
  • Follow NativePlanet
Share
» »தமிழ்நாட்டின் கடற்கரைகளுக்கு ஒரு பயணம்!

தமிழ்நாட்டின் கடற்கரைகளுக்கு ஒரு பயணம்!

By

இந்தியாவின் 7517 கி.மீ கடலோரப் பகுதியில், 1076 கி.மீ கடலோரப் பகுதியை உள்ளடக்கிய தமிழ்நாடு, குஜராத்துக்கு அடுத்து 2-வது நீளமான கடலோரப் பகுதியை கொண்ட மாநிலமாக அறியப்படுகிறது.

இந்த பரந்து விரிந்து கிடக்கும் கடலோரப் பகுதியில் அமையப்பெற்றுள்ள எண்ணற்ற அழகிய கடற்கரைகள் பிரசித்திபெற்ற சுற்றுலாத் தலங்களாக திகழ்ந்து வருகின்றன.

இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் முக்கியத்துவத்தை பெற்றிருக்கின்றன. அதாவது சென்னையின் மெரினா கடற்கரை உலகின் 2-வது கடற்கரை என்றால், 3 கடல்களின் முக்கூடலாய் கன்னியாகுமரி கடற்கரை விளங்குகிறது.

இப்படி பல்வேறு சிறப்புகள் கொண்ட தமிழ்நாட்டின் பிரபலமான கடற்கரைகளுக்கு ஒரு பயணம் செல்வோம் வாருங்கள்!!!

மெரினா பீச்

மெரினா பீச்

சென்னையின் முக்கிய அடையாளமாக மெரினா பீச் வீற்றுள்ளது. வட முனையில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து தென்முனையில் அடையாறு ஆற்றின் கழிமுகம் வரை இந்த கடற்கரை நீண்டுள்ளது. 13 கி.மீ நீளமுள்ள இந்த கடற்கரைப்பகுதி உலகிலேயே 2-வது மிக நீண்ட கடற்கரையாக புகழ்பெற்றுள்ளது.
மெரினா கடற்கரைப்பகுதியில் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் ஆகிய இரண்டு முன்னாள் தமிழக முதல்வர்களின் நினைவுத்தலங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கடற்கரையை ஒட்டிய சாலையில் பல்வேறு முக்கிய தலைவர்கள் மற்றும் ஆளுமைகளின் சிலைகளை வரிசையாக பார்க்கலாம். பாரம்பரியம் மிக்க சில கல்லூரிகளும் இந்த கடற்கரையை ஒட்டி அமைந்திருக்கின்றன.

படம் : B. Sandman

தனுஷ்கோடி கடற்கரை

தனுஷ்கோடி கடற்கரை

இந்திய இலங்கை நாடுகளுக்கு இடையே அமையப்பெற்றுள்ள தனுஷ்கோடி கடற்கரைதான் இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையேயான நில எல்லையாக இருக்கிறது. இந்தக் கடற்கரை பகுதியில் நீங்கள் ஆக்ரோஷம் மிகுந்த இந்தியப்பெருங்கடல், ஆழமற்ற அமைதியான வங்காள விரிகுடாவுடன் கலக்கும் அற்புதக் காட்சியை பார்த்து ரசிக்கலாம்.

படம்

மாமல்லபுரம் கடற்கரை

மாமல்லபுரம் கடற்கரை

பாண்டிச்சேரி-சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சென்னையிலிருந்து 50 கி.மீ தொலைவிலும், பாண்டிச்சேரியிலிருந்து 95 கி.மீ தூரத்திலும் மாமல்லபுரம் கடற்கரை அமைந்துள்ளது. இந்தக் கடற்கரையை ஒட்டியே மாமல்லபுரம் கலை நகரம் பல்லவ மன்னர்களால் எழுப்பப்பட்டிருப்பது சிறப்பானது ஆகும். பஞ்ச பாண்டவ ரதங்கள், வராக மண்டபம் மற்றும் கடற்கரை கோயில் ஆகியவை இங்குள்ள குறிப்பிடத்தக்க அம்சங்களாகும். மேலும், மாமல்லபுரத்திலிருந்து 30 கி.மீ தூரத்தில் சோழமண்டல் கலைக்கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஓவியங்கள், கைவினைப்பொருட்கள் மற்றும் சிற்பங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

படம் : epidemiks

திருச்செந்தூர் கடற்கரை

திருச்செந்தூர் கடற்கரை

'திருச்செந்தூரில் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்..' என்ற பாடலில் வருவது போல இந்த கடற்கரையிலிருந்து சூரிய அஸ்த்தமனத்தை ரசிப்பதற்காகவே முருகப்பெருமான் இங்கு குடிகொண்டுள்ளாரோ என்னவோ?! இங்கு வரும் பக்தர்கள் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு செல்வதற்கு முன் இந்த கடலில் நீராடிச் செல்வது வழக்கமாக உள்ளது.

இராமேஸ்வரம் கடற்கரை

இராமேஸ்வரம் கடற்கரை

இராமேஸ்வரம் கடற்கரை அழகிய கடல் நிலத்தோற்றங்களுக்கும், அலைகளற்ற கடற்பரப்பிற்கும் புகழ்பெற்றதாகும். இங்கு அலைகள் 3 செ.மீ அளவுக்கும் குறைவாகவே எழும்புவதால் இது பார்ப்பதற்கு மிகப்பெரிய ஓர் ஆறு போன்ற தோற்றத்தை அளிக்கின்றது. இந்தக் கடற்கரைக்கு அருகிலேயே ஸ்ரீ இராமநாதசுவாமி கோயில் உள்ளிட்ட இராமேஸ்வரத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்கள் அமையப்பெற்றுள்ளன.

படம் : Tamil1510

கோவளம் கடற்கரை

கோவளம் கடற்கரை

தமிழ்நாட்டின் பிரபலமான மீன்பிடி கிராமமான கோவளம், கடற்கரையை நேசிப்பவர்களுக்கு அற்புதமான அனுபவத்தை அளிக்கக்கூடிய சுற்றுலாத் தலம். இந்த ஸ்தலம் சென்னைக்கு அருகாமையில் இருப்பதால் வார இறுதியை குடும்பத்துடன் சந்தோஷமாக கழிப்பதற்காக ஏராளமான சென்னை வாசிகள் கோவளத்திற்கு வருகின்றனர். இங்கு அமைந்துள்ள 5-ஆம் நூற்றாண்டு முதல் 8-ஆம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவர் காலத்து கோயில்களை சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக தவற விட்டுவிடக் கூடாது.

படம் : Kmanoj

சில்வர் பீச்

சில்வர் பீச்

தமிழ் நாட்டின் 2-வது நீளமான கடற்கரையாக கருதப்படும் சில்வர் பீச் ஆசியாவின் நீளமான கடற்கரைகளில் ஒன்றாகவும் திகழ்ந்து வருகிறது. நகரத்தின் கிழக்கு பகுதியில் இருக்கும் இந்த கடற்கரை மிகவும் புகழ் பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இங்கு குதிரையேற்றம் மற்றும் படகுச் சவாரி உட்பட பல பொழுதுபோக்குகளில் பயணிகள் ஈடுபடலாம். மேலும் சிறார்களின மனதை கவரும் வகையில் ஒரு படகு கூடமும், பூங்காவும் இந்த கடற்கரையில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

பெசண்ட் நகர் கடற்கரை

பெசண்ட் நகர் கடற்கரை

எலியட்ஸ் பீச் என்று அழைக்கப்படும் பெசன்ட் நகர் கடற்கரையானது தென்சென்னை பகுதியை சேர்ந்த மக்கள் பொழுதுபோக்க பயன்படும் ஒரு முக்கியமான இடமாகும். டாக்டர் அன்னி பெசன்ட் இப்பகுதியில் வசித்த காரணத்தால் பெசண்ட் நகர் என்ற பெயர் இப்பகுதிக்கு ஏற்பட்டுள்ளது. மெரீனா கடற்கரையின் நீட்சியானது அடையாறு ஆறு கழிமுகம் வரை முடிந்த பின்னர் ஆற்றுக்கு இக்கரையிலிருந்து பெசன்ட் நகர் பீச் துவங்குகிறது. இந்த கடற்கரைக்கு அருகிலேயே வேளாங்கன்னி மாதா கோயில் மற்றும் அஷ்டலட்சுமி கோயில் ஆகிய முக்கிய ஆன்மீகத்தலங்களும் அமைந்திருக்கின்றன. பெசண்ட் நகர் கடற்கரையில் கார்ல் ஷ்மிட் எனும் டச்சு மாலுமிக்காக 1930ம் ஆண்டில் அமைக்கப்பட்ட நினைவுச்சின்னத்தை பார்க்கலாம். நீச்சல் தெரியாத ஒருவரை காப்பாற்ற முயன்று இவர் உயிர் துறந்துள்ளார். இந்த சின்னம் பல தமிழ்ப்படக்காட்சிகளில் இடம் பெற்றுள்ளது. தற்போது சற்றே சேதமடைந்து காணப்படும் இதனை பாதுகாக்க பல ஆர்வலர்கள் முயற்சி எடுத்து வருகின்றனர்.

படம் : Nikhilb239

கன்னியாகுமரி கடற்கரை

கன்னியாகுமரி கடற்கரை

கன்னியாகுமரி கடற்கரை அரபிக்கடல், வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல் ஆகிய மூன்று சமுத்திரங்கள் சங்கமிக்கும் இடம் என்பதால் உலகம் முழுவதுமிருந்து எண்ணற்ற சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது. அதிலும் இந்த 3 சமுத்திரங்கள் சங்கமமாகும் இடத்தில் நின்று சூர்ய அஸ்த்தமனத்தையும், சூர்யோதத்தையும் கண்டு ரசிக்கும் அனுபவத்தை எப்படி வார்த்தைகளால் விவரிக்க முடியும்?! அதுமட்டுமல்லாமல் முருகன் குன்றத்தின் மீதிருந்து பார்க்கும்போது திருவள்ளுவர் சிலையும், விவேகானந்தர் பாறையும் தெய்வீக ஒலியுடன் ஜொலிக்கின்ற காட்சி நம்மை மெய் சிலிர்க்க வைத்துவிடும்!

பூம்புகார் கடற்கரை

பூம்புகார் கடற்கரை

தமிழ்நாட்டின் முதல் துறைமுகமாக காவிரிப்பூம்பட்டினம் என்ற பெயரில் சங்க இலக்கியங்களில் போற்றப்பட்ட சிறப்பு வாய்ந்த கடற்கரை பூம்புகார் கடற்கரை. தலைக்காவேரியில் பிறப்பெடுத்த காவிரித்தாய் கடலில் கலக்கும் இடமாக பூம்புகார் நகரம் அறியப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் 'காவிரி ஆறு கடலில் புகும் இடம்' என்ற பொருளில் 'புகும் ஆறு' என்பதே காலப்போக்கில் புகார் என்று ஆனதாக சொல்லப்படுகிறது.

கோல்டன் பீச்

கோல்டன் பீச்

சென்னையிலிருந்து மாமல்லபுரம் செல்லும் ரம்மியமான கிழக்கு கடற்கரைச்சாலையில் ஈஞ்சம்பாக்கத்தில் அமைந்துள்ளது கோல்டன் பீச். இங்கு உள்ள வி.ஜி.பி யுனிவர்சல் கிங்டம் எனும் தனியார் பொழுதுபோக்கு பூங்கா சென்னை மாநகரத்தில் முதல் முதலாக உருவாக்கப்பட்ட தீம் பார்க் ஆகும். ஒரு நாள் முழுதும் குடும்பத்துடன் இந்த பொழுதுபோக்கு வளாகத்திலேயே கழிக்கும் வகையில் மிக பிரம்மாண்டமாகவும் பல்வேறு அம்சங்களை கொண்டதாகவும் வி.ஜி.பி யுனிவர்சல் கிங்டம் பூங்கா பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது. குழந்தைகளுக்காக அலாடின், டெலிகம்பாட், டாஷிங் கார், கோ கார்ட், வாட்டர் சூட் போன்ற விளையாட்டு அம்சங்கள் மற்றும் சவாரிகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. பெரியவர்களுக்காக ஃபெர்ரிஸ் வீல், ரோலர் கோஸ்டர், பலூன் ரேசர், டால் கிங்டம், ஃப்ளையிங் மெஷின் மற்றும் ஜங்கிள் கார் போன்ற சவாரி அமைப்புகள் தகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமல்லாமல் வார இறுதி நாட்களில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், நவீன நடன நிகழ்ச்சிகள், லேசர் ஷோ இசை நிகழ்ச்சிகள் போன்றவையும் இந்த வளாகத்தில் நடத்தப்படுகின்றன.

படம் : L.vivian.richard

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X