» »அழகிற்கு சிகரமாய் இருக்கும் இமய மலையில் இந்த ஏரிக்கு போயிருக்கீங்களா? போகலைன்னா ஒரு எட்டு போய் பாத்

அழகிற்கு சிகரமாய் இருக்கும் இமய மலையில் இந்த ஏரிக்கு போயிருக்கீங்களா? போகலைன்னா ஒரு எட்டு போய் பாத்

Written By: Balakarthik Balasubramanian

கடல் மட்டத்திலிருந்து 3300 அடி உயரத்திலுள்ள இமயமலையின் பனி மூடிய அந்த அழகியப் பகுதியினைப் பார்க்கும் நம் கண்கள், அங்கும் இங்கும் அசைந்து ஆரவாரம் செய்கிறது என்று தான் கூற வேண்டும்.
ஆம், ஹிமாச்சலப் பகுதியில் காணப்படும் கரேரி ஏரியினை நோக்கி வாங்க ஒரு அழகியப் பயணம் போகலாம்.

கரேரி ஏரியினைக் "குமர்வாஹ் ஏரி" என்றும் அழைப்பர். ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள நல்லதொரு நீர்த் தன்மைக் கொண்ட ஏரிகளுள் இதுவும் ஒன்றாகும். தௌலத்தூர் தொடர்ச்சியிலிருந்து உருகும் பனிக்கட்டிகள், இந்த ஏரிக்கு நீர் ஆதாரத்தினைத் தர, இந்த ஏரி எப்பொழுதும் நீரோட்டங்களின் அழகினை நமக்கு அன்பளிப்பாக தந்துக் கொண்டே இருக்கிறது. இதன் விளைவாக, நீரினை நாம் அதிக அளவில் காணமுடிகிறது. அதுமட்டுமல்லாமல், ஏரியில் உள்ள நீர் நிலையின் அடிப்பகுதியினையும் நம்மால் பல இடங்களில் காண முடிகிறது.

கடல் மட்டத்திலிருந்து 3300 மீட்டர்கள் உயரத்தில் நாம் செல்ல, கரேரி ஏரி நம்மிடம் பல சாகசங்களை செய்துக் காட்டுவதற்காகக் காத்திருந்து, நம்முடைய உடம்பில் உள்ள அட்ரீனலினை அதிகமாக்கி, அடிமையாக்கி அதன் இஷ்டத்திற்கு ஏற்ப, மகிழ்ச்சியால் சுரக்க வைக்கிறது. இந்தப் பயணத்தில் நம் கண்களைப் பனி நிறைந்தப் பகுதிகள் மட்டுமேக் குளிரூட்டும் என நாம் நினைக்கப் பசுமையான இடங்களும், அடர்த்தியான வனங்களின் அழகும் நம்மை வெகுவாகக் கவர்ந்துக் கண்களைக் கொள்ளைக் கொள்ளச் செய்கிறது. அவற்றின் அழகினை ரசித்துக்கொண்டே நாம் முன் செல்ல, புல்வெளிகள் காலில் பட்டு கூசத்தொடங்க, "நானும் இருக்கிறேன்" என்பதனை நமக்கு அவை உணர்த்தி கீழ் குனிந்து நம்மைப் பார்க்க வைக்கிறது.

அழகிற்கு சிகரமாய் இருக்கும் இமய மலையில் இந்த ஏரிக்கு போயிருக்கீங்களா? போகலைன்னா ஒரு எட்டு போய் பாத்துடுங்க!!

Shailenguleria3

எப்படி நாம் செல்வது?

சாலை வழிப் பயணம்:

தர்மசாலா., தில்லி உட்பட அனைத்து வட இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைத்துக் காணப்படுகிறது. தில்லியிலிருந்து இந்தப் பகுதி சுமார் 500 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது. நாம் பயணத்திற்குச் சிறந்த ஒருப் போக்குவரத்தாக அரசுப் பேருந்துகளையோ, தனியார் டாக்சிகளையோப் பயன்படுத்தலாம். இல்லை என்றால், இந்த 500 கிலோமீட்டர் பயணத்தினை நானே ராஜா என்பதற்கு ஏற்ப, சொந்தக் காரில் பயணம் செய்துப் பல இடங்களில் நிறுத்தி சிறிது ஓய்வெடுத்து நம் நேரத்திற்கு ஏதுவாக இந்தப் பகுதியினை அடையலாம்.

இரயில் வழிப் பயணம்:

தர்மசாலாவிலிருந்து 85 கிலோமீட்டர் தொலைவில் உள்ளப் பத்தன்கோட் இரயில் நிலையம் தான் மிக அருகில் காணும் ஒரு இரயில் நிலையமாகும். நாம் இந்த தர்மசாலாவை அடைவதற்கு இங்கிருந்து டாக்சிக் கூட எடுத்துச் செல்வது உகந்த ஒரு யோசனையாகும்.

ஆகாய வழிப் பயணம்:

கக்கல் விமான நிலையம் தர்மசாலாவிலிருந்து மிக அருகில் அமைந்திருக்கும் ஒரு விமான நிலையமாகும். இந்த விமான நிலையத்திலிருந்துப் பேருந்துகளும், கார்களும் தர்மசாலாவை நோக்கி வந்த வண்ணமாகவும் போன வண்ணமாகவும் இருந்துக் கொண்டிருக்கிறது.

அழகிற்கு சிகரமாய் இருக்கும் இமய மலையில் இந்த ஏரிக்கு போயிருக்கீங்களா? போகலைன்னா ஒரு எட்டு போய் பாத்துடுங்க!!

Ashish Gupta

இந்த இனிமையானதொருப் பயணம் கரேரிக் கிராமத்தில் தொடங்குகிறது என்பதனை என் இதழ்கள் உச்சரிக்கும் பொழுது, அந்த இயற்கையின் அழகினைக் காண மிகவும் அவசரம் கொள்கிறது என்றேக் கூறவேண்டும். கரேரி ஏரி அழகானக் காட்சிகளை இந்த ஊருக்கு அருகில் சமர்ப்பிக்க, கரேரி கிராமம் என்றதொருப் பெயரே இந்தக் கிராமத்திற்கு இங்குள்ள மக்கள் சூட்டி, தங்களுக்கும் இயற்கைக்கும் இருக்கும் ஈடு இணையற்ற அன்பினை வெளிப்படுத்துகின்றனர்.

கரேரி ஏரியினைக் காண்பதற்கு ஏதுவான மாதங்கள்:

இந்த அழகிய ஏரியினைக் காண்பதற்கு ஏதுவான மாதங்களாக மே - ஜூன் மற்றும் செப்டம்பர் - அக்டோபர் இருக்கிறது. இந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில், பனிப் பொழிவின் அளவு இப்பகுதியினைக் குறைவாகவேத் தாக்குகிறது. மேலும் இந்தக் கால நிலைகளின் வானிலை, கதிரவனின் கதிர்களின் தாக்கத்தினால் கடும் வெப்பத்துடன் காணப்படுகிறது. அதனால், நம் பயணத்திற்குத் தேவையான அத்தியவாசியப் பொருட்களின் அளவும் இந்தக் கால நிலைகளில் நமக்குக் குறைவாகவேத் தேவைப்படுகிறது.

பயணத்திற்கு நாம் கொண்டு செல்ல வேண்டிய அத்தியவாசியப் பொருட்கள்:

கட்டு மஸ்தானக் கைத்தடி, டார்ச் லைட், முதலுதவிக்குத் தேவைப்படும் மருந்துகள் அடங்கியப் பெட்டி, திசைக்காட்டும் கருவி, பயணத்திற்கு ஏதுவானக் காலணிகள், தூங்குவதற்கு வசதியான கூடாரம் போன்ற அமைப்பினைக் கொண்டப் பைகள், தூரத்தில் நாம் பார்ப்பதனை அருகில் காண்பிக்கும் தொலைநோக்கிகள், புகைப்படக்கருவி, தண்ணீர் பாட்டில்கள், ஒளி வீசக்கூடியப் பொருள், சாக்லேட்டுகள் ஆகியவை நம் பயணத்திற்கு நமக்குத் தேவைப்படும் அத்தியவாசியப் பொருட்களாகும்.

அழகிற்கு சிகரமாய் இருக்கும் இமய மலையில் இந்த ஏரிக்கு போயிருக்கீங்களா? போகலைன்னா ஒரு எட்டு போய் பாத்துடுங்க!!

Ashish Gupta

நாம் பயணத்தினைப் பற்றிய சிறியதோர் விளக்கம்:

நாம் மாய உலகில் அடர்ந்துக் காணப்படும் ஊசியிலைக் காடுகளின் வழியாகவும், அழகியப் பள்ளத்தாக்குகளின் வழியாகவும், தூய தன்மைக் கொண்ட நியூன்ட் ஓடையின் வழியாகவும் 13 கிலோமீட்டர்கள் பயணம் செய்ய, அந்த அழகியக் கண் கொள்ளாக் காட்சி நம்மை வெகுவாகக் கவர்ந்து மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. இந்தப் பயணத்தில் பயிற்சிகள், மேலே ஏறுவது, கீழ் இறங்குவது எனப் பலவற்றினைக் கடந்து நாம் செல்ல இறுதியாகக் கரேரி ஏரியினை அடைகிறோம்.

இதனைப் பற்றி நாம் பார்த்தச் சுருக்கமானப் பத்தியினால் இது மிகவும் எளிது என்று மட்டும், இப்பயணத்தினைப் பற்றி குறைவாக எடைப் போட்டுவிடக் கூடாது. ஆம், நாம் மேல் நோக்கி ஏற, நம்முள் சிலருக்கு மூச்சுத் திணறல் கூட ஏற்படுகிறது என்பதனை நான் தெரியப்படுத்த விரும்புகிறேன். அதனால், நீங்கள் பயந்துப் பயணத்தினை தவிர்ப்பதனை விடத் தேவையான மருந்துகளை முன் கூட்டியே எடுத்துச் செல்வதும், நாசியினைச் சுத்தமாக வைத்து மூச்சுப் பயிற்சி செய்வதும் இந்தப் பயணத்துக்கு ஒரு இன்றிமையாத இன்ப உணர்வினை நம் மனதிற்குத் தருகிறது.

நம்மால் முடியும் என்றால், மூச்சுப் பிரச்சனைகளிலிருந்து நாம் விடுபட, நமக்கு ஆக்ஷிஜன் சிலிண்டர் உதவி செய்வதன் மூலம், அதனை கையோடு எடுத்துச் செல்வது நம் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வாய் அமைகிறது. நாம் செல்லக் கூடிய இந்தப் பயணம், நீண்ட நெடியதோர் பயணமாகும். நாம் செல்லும் வழியில் படிகளும், பாலங்களும் நிறையவே இருக்க, அவற்றைத் தாண்டி தான் நம்மால் இந்த கரேரி ஏரியினை அடைய முடிகிறது. நம் ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட ஒரு ஏரியினை நாம் கடக்க, இறுதியாகச் செயற்கையைத் தாண்டிய ஒரு இயற்கை அன்னை வாழ்வதனைத் தூரத்திலிருந்துக் கண்ட நம் மனம், அந்த ஏரியின் அழகினை வியப்புடனே நோக்கிக் கொண்டு அதன் அருகில் செல்ல ஆசைக்கொள்கிறது.

அழகிற்கு சிகரமாய் இருக்கும் இமய மலையில் இந்த ஏரிக்கு போயிருக்கீங்களா? போகலைன்னா ஒரு எட்டு போய் பாத்துடுங்க!!

Ashish Gupta

நாம் ஏரியின் அழகினை ரசிக்க ஆர்வத்துடன் செல்ல, இடையில் அமைந்திருக்கும் ஒரு சிறு ஆலயம் மீது நம் பார்வை திடீரென்று விழ, அந்த "சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஆலயம் தான் இந்த இயற்கையின் அழகைப் பேணிக்காத்து வருகிறதா!" எனப் பக்தியுடன் ஆச்சரியம் கொண்டு ஆலயத்தினைக் பார்க்கிறது கண்கள். இங்குக் காணப்படும் செங்குத்தான பகுதிகளில் நாம் பயணம் செய்ய, அது மிகவும் எளிதாக நமக்கு இருக்க, நம் மனதினை மீறிக் கால்கள் வேகத்துடன் கட்டுப்பாட்டினை இழந்துச் செல்கிறது.

இந்தப் பகுதியில் அமைந்திருக்கும் மற்றப் பனிச் சூழ்ந்த ஏரிகளைப் போன்று, இந்தக் கரேரி ஏரியும் எங்களுக்கு அற்புதமானதொரு உணர்வினைத் தர, அங்கு மலைப்பகுதியில் மின்னிக் கொண்டிருந்தப் பருத்தி பஞ்சுகளைப் போன்று தெரிந்தப் பனிகளைக் கண்ட எங்கள் மனம், உலகத்தில் உள்ள அனைத்துக் கவலைகளையும் ஒரு நொடியில் மறந்து இன்ப உணர்வினை மட்டுமேக் கொண்டுத் துள்ளிக்குதித்து இயற்கையுடன் விளையாடியது.

அங்குக் காணப்பட்டத் தண்ணீர் மாசுப்படாதத் தூய்மையினால் நிறைந்தவை என்பதனை அதன் வண்ணமே நமக்கு உணர்த்த, அந்த அழகியச் சூழலை விட்டு வெளியில் வரத் தவிக்கும் நம் மனம், எப்படி இத்தகையப் புத்துணர்ச்சிக் கொண்ட நீரினை விடுத்து வீட்டிற்கு மீண்டும் சென்று மாசுப்பட்டத் தண்ணீரைக் குடிக்க, இதழ்கள் மனமுவந்து ஏற்றுக்கொள்ளும் என்னும் கவலையும் மனதின் ஒரு ஓரத்தில் ஏற்படத் தான் செய்கிறது. இருப்பினும், என்னால் ஏதும் செய்ய இயலாது என இயற்கைக் கையை விரிக்க, அந்த ஏரியின் மீது உரிமையுடன் கோபம் கொண்டு நம் மனம் முகம் சுளித்துத் திரும்ப, அந்த ஏரியின் அருகில் காணப்படும் புல்வெளிகள் நம் கோபத்தினைக் கலைத்து நம் மனதினைச் சமாதானம் அடையச் செய்கிறது.

ஒரு வேளை நாம் தூங்குவதற்கு உகந்த அந்தப் பையினை எடுத்துச் செல்லவில்லையென்றால், சிவன் ஆலயத்தில் உள்ளப் பூசாரிகளின் அனுமதியோடு நம்மால் பக்தி நிரம்பிய ஒரு உறைவிடத்தில் தங்க முடிகிறது. ஆம், ஆலயத்தின் வலதுப் புறத்தில் அமைந்திருக்கும் தங்குவதற்கு வசதியான ஒரு இடத்தில் அமர்ந்து ஓய்வெடுக்கப் பூசாரிகள் ஆலோசனைச் சொல்ல, அது நமக்குப் பெரும் உதவியாக இருக்கிறது. ஒருவேளை நாம் உள்ளூர் வழிக்காட்டியாளர்களின் உதவியுடன் செல்வோமானால், "கட்டிக் கோதி" என்னும் இடத்தில் தங்கி ஓய்வெடுக்கவும் முடிகிறது.

Read more about: travel, trip