» »ஆந்திர மாநிலத்தின் அதிசய குகைகள் காணலாம் வாருங்கள்

ஆந்திர மாநிலத்தின் அதிசய குகைகள் காணலாம் வாருங்கள்

Written By: Udhaya

விஜயநகர மன்னர்கள் ஆட்சி செய்த பூமியான ஆந்திரப் பிரதேசம் பகுதியில் கலாச்சாரத்தின் செழுமை பற்றி கூற வேண்டியதில்லை. குமரகிரி வேமனா ரெட்டி, பொட்லூரி வீரபிரம்மேந்திர சுவாமி போன்ற தெலுங்கு மொழி கவிகளும், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி போன்ற தத்துவ அறிஞர்களும் பிறந்த அற்புத பூமி ஆந்திரப் பிரதேசம். விசாகப்பட்டணம், கபில தீர்த்தம், ராஜமுந்திரி, விஜயவாடா, கர்னூல், பழவேற்காடு ஏரி, அரக்கு பள்ளத்தாக்கு உள்ளிட்ட எண்ணற்ற ஆந்திரப் பிரதேசம் பகுதியில் அமைந்துள்ளன. இங்கு ஆதிகாலத்திலேயே கட்டப்பட்ட இந்த குகைகளைப் பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

போரா குகைகள்

போரா குகைகள்

போரா குஹாலு என்று உள்ளூர் மொழியில் அழைக்கப்படும் போரா குகைகள் அனந்தகிரி குன்றின் ஒரு பகுதியாக இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் அமைந்திருக்கிறது. இந்த குகைகள் கடல் மட்டத்திலிருந்து 2313 அடி உயரத்தில் அமைந்திருப்பதோடு, இந்தியாவின் மிகப்பெரிய குகைகளில் ஒன்றாகவும் திகழ்ந்து வருகிறது. போரா குகைகளின் உள்ளே ஸ்பீலியோதெம் என்று அறியப்படும் கனிம படிவங்கள் அதிக அளவில் சிறிய மற்றும் பெரிய அளவுகளில் காணப்படுகின்றன. இதுதவிர இந்த குகைகளில் அழகிய வடிவங்களில் ஸ்டலக்மைட்ஸ் எனப்படும் கசிதுளிப்படிவுகள் சிலவற்றையும் நீங்கள் பார்க்கலாம். மேலும் பெரும்பாலும் சுண்ணாம்புக் கற்களாலேயே உருவாகியிருக்கும் போரா குகைகள் 80 மீட்டர் ஆழம் கொண்டதால், இந்தியாவின் ஆழம் மிகுந்த குகையாக கருதப்படுகிறது. இதன் காரணமாக போரா குகைகள் வரலாற்று ஆய்வாளர்கள், அறிவியல் மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தை அதிக அளவில் ஈர்த்து வருகிறது.

PC: Robbygrine

மொகலாராஜபுரம் குடைவறைக்கோயில்கள்

மொகலாராஜபுரம் குடைவறைக்கோயில்கள்

இந்த மொகலாராஜபுரம் குடைவறைக்கோயில்கள் 5ம் நூற்றாண்டை சேர்ந்தவையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. புராதன தோற்றத்துடன் அற்புதமான சிற்ப வடிப்புகளை இவை கொண்டுள்ளன. 10 அடி உயரம் கொண்டவையாக 5 குகைக்கோயில்கள் இந்த தொகுப்பில் காணப்படுகின்றன. தூண்களுடன் கூடிய நுணுக்கமான வாசல் அமைப்புகள் மற்றும் சிற்பங்களுடன் இவை காட்சியளிக்கின்றன. தற்போது சிதிலமடைந்த நிலையில் சரியான பராமரிப்பின்றி இவை காணப்படுவது ஒரு துரதிர்ஷ்டமேயாகும். இந்த குகைக்கோயில்களில் நடராஜர், அர்த்த நாரீஸ்வரர் மற்றும் விநாயகர் சிலைகள் காணப்படுவதால் பக்தர்களும் இந்த குகைக்கோயில்களை தரிசிக்க வருகை தருகின்றனர். ஆன்மீகத்துக்கு அப்பாற்பட்டு ஒரு காலப்பொக்கிஷமாக இந்த குடைவறைக்கோயில்கள் வீற்றிருக்கின்றன.

Kalli navya

அக்கணா மற்றும் மடண்ணா குகைகள்

அக்கணா மற்றும் மடண்ணா குகைகள்

விஜயவாடா பகுதியில் இந்த அக்கணா மற்றும் மடண்ணா குகைகள் எனப்படும் பாறைக்குடைவு குகைக்கோயில்கள் உள்ளன. 17ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த அப்துல் ஹசன் தனாஷா என்பவரின் அவைப்பிரதானிகளான அக்கணா மற்றும் மடண்ணா ஆகியோரின் பெயர்களால் இவை அழைக்கப்படுகின்றன.

இருவருமே இந்த குகைக்கோயில்களோடு சம்பந்தப்பட்டிருந்ததாக அறியப்படுகிறது. 6ம் மற்றும் 7ம் நூற்றாண்டில் இவை உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

கனதுர்க்கா கோயிலுக்கு செல்லும் வழியிலேயே மலையடிவாரத்தில் இந்த குகைக்கோயில்கள் காணப்படுகின்றன. இந்த இரண்டு குடைவறைக்குகைகளில் மேற்பகுதியில் அமைந்திருப்பது பிரம்மா, விஷ்ணு மற்றும் மஹேஸ்வரர் ஆகிய மும்மூர்த்திகள் சித்தரிக்கப்பட்டுள்ள கோயிலாக காட்சியளிக்கிறது.

Adityamadhav83

உன்டவலி குகைகள்

உன்டவலி குகைகள்

விஜயவாடா நகரத்திலிருந்து தென்மேற்கே 6 கி.மீ தூரத்தில் இந்த உன்டவலி குகைகள் அமைந்துள்ளன. மணற்பாறாங்கற்களில் இந்த குடைவறைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

இவை 4ம் அல்லது 5ம் நூற்றாண்டினை சேர்ந்தவையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. நான்கு அடுக்குகளை கொண்டதாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த குடைவறை கோயில் தொகுப்புகளில் பிரதானமாக மஹா விஷ்ணுவின் சிலை காணப்படுகிறது.

ஒற்றை பளிங்கு கல்லில் இந்த சிலை வடிக்கப்பட்டுள்ள்து. இந்த தொகுதியிலுள்ள ஏனைய குடைவறைகளில் இதர கடவுள்களின் சிலைகளும் காணப்படுகின்றன. புத்த மடாலயங்கள் போன்றும் இவை நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

மழைக்காலங்களில் தங்குவதற்கு இந்த குடைவறைகளை பௌத்த மதகுருக்கள் பயன்படுத்தியிருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. இந்த பாறைக்குடைவறைகள் கிருஷ்ணா ஆற்றை நோக்கியவாறு அமைந்துள்ளன.

Ramireddy

 நல்லமலை

நல்லமலை


ஸ்ரீசைலம் நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் நல்லமலை குன்றில் அமைந்திருக்கும் அக்கமாதேவி குகைகள், ஸ்ரீசைலம் நகரத்தின் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கிறது. இந்த குகைகள் வரலாற்றுக்கு முந்தைய காலங்களிலிருந்து இருந்து வருவதாக நம்பப்படுகிறது.

12-ஆம் நூற்றாண்டு கர்நாடக தத்துவ ஞானியான அக்கமாதேவி இந்த கோகியின் அடி ஆழத்தில் உள்ள சிவலிங்கத்தை நோக்கி கடுந்தவம் புரிந்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த குகைகள் அவருடைய பெயரிலேயே அக்கமாதேவி குகைகள் என்று அழைக்கப்படுகிறது.

அக்கமாதேவி குகைகள் கிருஷ்ணா நதிக்கு எதிர் நீச்சாக அதற்கு வெகு அருகிலேயே அமைந்திருக்கிறது. இந்த குகைகள் அனைத்தும் இயற்கையாக உருவாகியவைகள் ஆகும். அதிலும் குறிப்பாக பிராதான குகையில் உள்ள இயற்கையாக உருவான பாறை வளைவு புவியியல் அற்புதமாக கருதப்படுகிறது.

இந்த வளைவு 200x 16x 4 அளவுகளில் அமைந்திருப்பதோடு, எந்த வகையான ஆதரவும் இல்லாமல் உறுதியாக நிற்பது மற்றொரு அதிசயம். எனவே சுற்றுலாப் பயணிகள் குகைகளுக்கு உள்ளே என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதை மறந்துவிட்டு இந்த வளைவின் அழகிலேயே மூக்கித் திளைப்பது இயல்பே.

அக்கமாதேவி குகைகளில் காணப்படும் பாறைகள் அனைத்தும் பூமி தோன்றிய நாள் முதலாக இருப்பதாக நம்பப்படுவதால் வரலாற்று ஆர்வலர்களும், பயணிகளும் இங்கு அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

ஆதலால் 150 அடி ஆழம் கொண்ட சரித்திர சிறப்பு வாய்ந்த குகையை நீங்கள் ஸ்ரீசைலம் நகருக்கு சுற்றுலா வரும் போது கண்டிப்பாக தவற விட்டுவிடக் கூடாது.

Krishna Chaitanya Velaga

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்