» »பார்மேர் – ராஜஸ்தானிய நாட்டுப்புற கலையம்சங்களின் பூமி

பார்மேர் – ராஜஸ்தானிய நாட்டுப்புற கலையம்சங்களின் பூமி

Posted By: Udhaya

பார்மேர் எனும் இந்த புராதன நகரம் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பார்மேர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது 13ம் நூற்றாண்டில் பஹதா ராவ் அல்லது பர் ராவ் என்பவரால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இவர் நினைவாகவே துவக்க காலத்தில் இந்நகரம் பஹதாமேர் என்று அழைக்கப்பட்டது. அதாவது 'பஹதாவின் மலைக்கோட்டை' என்பது அதன் பொருளாகும். காலப்போக்கில் அப்பெயர் பார்மேர் என்று மாறி அதுவே நிலை பெற்றுவிட்டது. ராஜஸ்தான் மாநிலத்தின் இப்பகுதி செழுமையான கைவினைப்பொருட்கள் மற்றும் பாரம்பரிய கலையம்சங்களுக்கு புகழ்பெற்று விளங்குகிறது. இங்குள்ள பல வரலாற்றுத்தலங்களும் பார்மேர் நகரத்தை முக்கியமான சுற்றுலாத்தலமாக மாற்றியுள்ளன.

பார்மேர் நகரின் வரலாற்றுப்பின்னணி

பார்மேர் நகரின் வரலாற்றுப்பின்னணி

புராதன காலத்தில் பார்மேர் மாவட்டம் ஒரு முக்கியமான அந்தஸ்தை வகித்துள்ளது. பல ராஜவம்சங்கள் இந்த மண்ணில் தோன்றி, செழித்து அழிந்தும் போயிருக்கின்றன. புராதன பார்மேர் ராஜ்ஜியமானது கேத், கிரடு, பச்பத்ரா, ஜசோல், தில்வாரா, ஷியோ, பலோதரா மற்றும் மல்லணி போன்ற பகுதிகளில் பரந்து காணப்பட்டிருக்கிறது.

ஆங்கிலேயர் இப்பகுதிக்கு வந்தபிறகு 1836ம் ஆண்டில் பார்மேர் மாவட்டம் ‘சூப்பிரென்டெண்ட்' ஆட்சியில் கீழ் வந்துள்ளது. பின்னர் 1891ம் ஆண்டு இது ஜோத்பூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்திய சுதந்திரம் பெற்றபிறகு ஜோத்பூர் மற்றும் பார்மேர் மாவட்டம் இரண்டுமே ராஜஸ்தான் மாநிலத்தின் முக்கிய அங்கமாக மாறின. தற்போது பார்மேர் மாவட்டம் மல்லணி ஷிவி, பச்பத்ரா, சிவானா மற்றும் சோஹத்தன் பகுதி ஆகிய முக்கிய வரலாற்று சிறப்புமிக்க இடங்களை தன்னுள் கொண்டுள்ளது.

Last Emperor

 கலை, கைவினை மற்றும் இசை

கலை, கைவினை மற்றும் இசை


கலை, கைவினை மற்றும் இசை ஆகியவற்றில் பொதிந்திருக்கும் படைப்பாக்கம்

பார்மேர் மாவட்டம் கைவினைப்பொருட்கள், கைத்தையல் பூ அலங்கார வேலைப்பாடுகள் மற்றும் பலவகை பாரம்பரிய கலை வடிவங்களுக்கு பிரசித்தி பெற்றுள்ளது. நாட்டுப்புற இசை மற்றும் நடனம் ஆகியவற்றுக்கும் பார்மேர் ஆழமான பின்னணியைக் கொண்டுள்ளது. இங்குள்ள நாட்டுப்புற இசைக்கலைஞர்கள் ஒரு குறிப்பிட்ட இனத்தவரை சேர்ந்தவர்களாக அல்லாமல் பல இனங்களை சேர்ந்தவர்களாக இருப்பது ஒரு சிறப்பம்சமாகும். இருப்பினும் போபா மற்றும் தோலி இனத்தவர் இந்த நாட்டுப்புற இசையில் தேர்ந்தவர்களாக உள்ளனர். பூசாரிப்பாடகர்கள் போன்ற போபா இசைக்கலைஞர்கள் கடவுளரையும் மாவீரர்களையும் போற்றி பாடுகின்றனர். அதே சமயம் தோலி இனத்தவர் முஸ்லிம் மதத்தை பின்பற்றுவர்களாக இருந்தாலும் நாட்டுப்புற இசை என்பது இவர்களின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.

துணி மற்றும் மரச்சாமான்கள் மீது கையச்சு வண்ணப்பதிப்பு செய்யும் தொழிலுக்கும் பார்மேர் பிரசித்தமாக அறியப்படுகிறது. இங்குள்ள கிராமங்களில் மண் குடிசை சுவர்களில் கூட செய்யப்பட்டிருக்கும் நாட்டுப்புற அலங்காரத்தின் மூலம் இந்த மக்களின் கலாரசனையை புரிந்துகொள்ளலாம்.

Bhaskaranaidu

 ராஜஸ்தான் மாநிலத்தின் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டின் அடையாளச்சின்னம்

ராஜஸ்தான் மாநிலத்தின் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டின் அடையாளச்சின்னம்

பார்மேர் பகுதிக்கு சுற்றுலா மேற்கொள்வதன் மூலம் கிராமப்புற அழகு, ராஜஸ்தானிய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் போன்றவற்றை ஒருவர் மிக எளிதாக அறிந்துகொள்ளலாம். இங்கு பார்மேர் கோட்டை, ராணி படியானி கோயில், விஷ்ணு கோயில், தேவ்கா சூரியக்கோயில், ஜுனா ஜெயின் கோயில் மற்றும் சஃபேத் அக்காரா போன்ற முக்கியமான சுற்றுலா ஸ்தலங்கள் அடங்கியுள்ளன.

பலவகையான திருவிழாக்கள் இங்கு விமரிசையாக கேளிக்கைகளுடன் கொண்டாடப்படுகின்றன. தில்வாரா எனும் இடத்தில் நடத்தப்படும் கால்நடைச்சந்தை வருடாவருடம் ரவால் மல்லிநாத் நினைவாக நடத்தப்படுகிறது. வீரதாரா மேளா மற்றும் பார்மேர் தார் திருவிழா போன்றவை இங்கு கொண்டாடப்படும் முக்கியமான திருவிழாக்களாகும்.

Prakash Kumar Singh

 எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

பார்மேர் நகரம் முக்கியமான இந்திய நகரங்களுடன் விமான, ரயில் மற்றும் சாலை மார்க்கமாக எளிதில் சென்றடையலாம். பார்மேர் ரயில் நிலையம் மீட்டர்கேஜ் இருப்புப்பாதை மூலம் ஜோத்பூர் நகரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மற்ற ராஜஸ்தானிய நகரங்களிலிருந்து பேருந்துகள் மற்றும் டாக்சி சேவைகளும் பார்மேர் நகரத்திற்கு கிடைக்கின்றன. இங்கிருந்து 220 கி.மீ தூரத்தில் ஜோத்பூர் விமான நிலையம் அமைந்துள்ளது.

அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான இடைப்பட்ட பருவம் பார்மேர் நகரத்துக்கு சுற்றுலா மேற்கொள்ள உகந்ததாக உள்ளது.

Read more about: travel rajasthan

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்