Search
  • Follow NativePlanet
Share
» »முருகனின் அறுபடை வீடுகள் ஒரு தரிசனம்!!!

முருகனின் அறுபடை வீடுகள் ஒரு தரிசனம்!!!

By

தமிழகத்தில் முருகனுக்கு பல ஸ்தலங்கள் இருந்தாலும் குறிப்பிட்ட ஆறு தலங்கள் மட்டும் படைவீடாக கருதி வழிபடப்படுகின்றன.

அதாவது வறுமையில் வாடும் ஒருவரிடம், வறுமையை வென்ற ஒருவர், வள்ளல்கள் இருக்குமிடத்தைச் சுட்டிக்காட்டி, அங்கு சென்றால் அவரது வறுமை தீரும் என்று சொல்லி அவரை ஆற்றுப்படுத்துவார்.

இந்த வகையில் அமைந்த நூல்கள் சங்க காலத்தில், "ஆற்றுப்படை' எனப்பட்டது. இவ்வாறு மக்களின் குறைகளைப் போக்கி, அருள் செய்யும் முருகன் இந்த ஆறு இடங்களில் உறைவதாக நம்பப்படுகிறது.

மேலும் முருகனிடம் சென்று சரணடைந்தால் அவரது அருள் கிடைக்கும் என்ற பொருளில் நக்கீரர், முருகனின் பெருமைகளைச் சொல்லும் "திருமுருகாற்றுப்படை' எனும் நூலை இயற்றினார். அதில் குறிப்பிடப்பட்ட ஆற்றுப்படை தலங்களே பிற்காலத்தில் மருவி ஆறுபடை என்றானது.

பழனி தண்டாயுதபாணி ஆலயம்

பழனி தண்டாயுதபாணி ஆலயம்

மதுரையிலிருந்து 115 கி.மீ தொலைவில் உள்ள பழனி தண்டாயுதபாணி ஆலயம் முருகனின் அறுபடை வீடுகளில் முதலாவதாகும். இந்த ஸ்தலம் ஞானப்பழம் கிடைக்காத காரணத்தால் தன் பெற்றோர்களிடம் கோபம்கொண்டு முருகன் ஆண்டியாக நிற்கின்ற இடம் என்று புராணக் கதை சொல்கிறது. இங்குள்ள நவபாஷாணத்தால் ஆன முருகனின் சிலையை போகர் சித்தர் உருவாக்கியதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் பால், பஞ்சாமிர்தம், விபூதி ஆகியவற்றை உட்கொண்டால் உடல் நலம் பெறும் என்று நம்பப்படுகிறது.

படம் : Rejeesh Irinave

திருச்செந்தூர் முருகன் கோவில்

திருச்செந்தூர் முருகன் கோவில்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகனுக்குரிய அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடு எனப் போற்றப்படுகிறது. அதோடு மற்ற ஆறுபடைவீடுகளோடு ஒப்பிடுகையில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோயிலாகவும் அமைந்துள்ளன. இந்த இடத்தில்தான் முருகப்பெருமான் சூரபத்மன் எனும் அரக்கனை வதம் செய்ததாக சொல்லப்படுகிறது.

படம் : Aravind Sivaraj

திருப்பரங்குன்றம் முருகன் கோயில்

திருப்பரங்குன்றம் முருகன் கோயில்

மதுரையிலிருந்து 8 கி.மீ தொலைவில் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அமைந்துள்ளது. திருச்செந்தூரில் சூரபத்மனை வென்று அவனால் சிறை வைக்கப்பட்ட இந்திரனையும், மற்ற தேவர்களையும் முருகன் மீட்கிறார். அதன் பின்னர் அதற்கு நன்றிக்கடனாக இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மனம் முடித்த வைத்த இடமாக திருப்பரங்குன்றம் புராணத்தில் போற்றப்படுகிறது. இதன் காரணமாக திருமண சுபதினங்களில் இங்கு ஏராளமான திருமணசடங்கு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

படம் : Kramasundar

சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோவில்

சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோவில்

தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திலிருந்து 9 கி.மீ தொலைவில் சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. முருகப்பெருமான் தன் தந்தையாகிய சிவபெருமானுக்கு உபதேசம் செய்த இடமாக சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோவில் ஸ்தலம் புராணங்களில் குறிப்பிடப்படுகிறது. இந்தக் கோயில் ஒரு மலையின் மீது அமைந்திருப்பதோடு, தரையிலிருந்து கோயிலுக்குச் செல்ல 60 படிக்கட்டுகள் கொண்ட பாதை அமைக்கப்பட்டுள்ளது.

படம் : UnreachableHost

திருத்தணி முருகன் கோயில்

திருத்தணி முருகன் கோயில்

சென்னையிலிருந்து 87 கி.மீ தொலைவில் திருத்தணி முருகன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் ஒரு குன்றின் மீது அமைந்திருப்பதோடு, தமிழ் ஆண்டின் 365 நாட்களை குறிக்கும் விதமாக தரையிலிருந்து கோயிலுக்குச் செல்ல 365 படிக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளன. இங்குதான் முருகனுக்கும் வேடர் குலத்தில் பிறந்த வள்ளிக்கும் திருமணம் நடைபெற்றதாக புராணம் கூறுகிறது.

பழமுதிர்ச்சோலை

பழமுதிர்ச்சோலை

முருகனின் ஆறாவது படைவீடாக கருதப்படும் பழமுதிர்ச்சோலை தமிழ்நாட்டின் கோயில் நகரமான மதுரையில், அழகர் கோயிலுக்கு அருகில் சோலைமலை உச்சியில் அமையப்பெற்றுள்ளது. இந்த இடத்தில்தான் முருகன் ஒளவையாரிடம் "சுட்டப் பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? " என்று கேட்டு அவரின் அகங்காரத்தை அகற்றியதாக புராணக் கதை சொல்கிறது. அந்த சம்பவம் நடைபெற்றபோது இருந்த நாவல் மரம் இன்றும் சோலைமலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

படம் : Ssriram mt

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X