தென்னிந்திய மாநிலங்களில் ஒன்றான கேரளா, நம் நாட்டின் மிக அழகான இடங்களில் ஒன்றாகும் என்பதில் சந்தேகமில்லை. எப்பொழுது வேண்டுமானாலும், இந்த மாநிலத்துக்கு சென்று கடவுளின் தேசத்தில் வசிக்கும் இயற்கை எனும் பேரழகியை பார்த்து விட்டு வரலாம். அவள் எப்போதும் தன்னை பார்க்க வருகை தருபவர்களை கட்டி அரவணைத்து கொள்வாள். அதுமட்டுமின்றி, தன் அழகை பார்க்க வருபவர்களின் விழுகளுக்குள் இருந்து மறையா வண்ணம் பார்த்து கொள்ளுவாள் தன் பாவணைகளால்...!
அப்படிப்பட்ட பேரழகியை பார்க்க போகிறீர்கள் என்றால், முதலில் உங்கள் பட்டியலில் குதிரைமாலிகா அரண்மனையையும் கட்டாயம் பார்க்க வேண்டிய பட்டியலில் சேர்த்து கொள்ளுங்கள்.
கடவுளின் தேசத்தில் பார்க்க வேண்டிய இடங்களுக்கு பஞ்சமிருக்காது. ஆனால், அந்த பட்டியலில், 18 ஆம் நூற்றாண்டின் பாரம்பரிய கேரள கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு விளங்கும் குதிரைமாலிகா அரண்மனையை பார்க்காமல் திருப்பி விடக்கூடாது அல்லவா. இது, தற்போது ஒரு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த கம்பீரமான இடத்தைப் பற்றிய அனைத்து விவரங்களையும் உங்களுக்கு வழங்குவோம் என்ற நம்பிக்கையில் கட்டுரையை தொகுக்கிறோம். வரலாற்று பிழை இருந்தால் கொஞ்சம் மன்னிச்சூடுங்க... நீங்களும் உங்கள் வரலாற்று அறிவை கொஞ்சம் பின்னுாட்டமாக எங்களுக்கு தெரியப்படுத்தவும் மறக்காமல்.
குதிரைமாலிகா அரண்மனை திருவனந்தபுரத்தில் பத்மநாபசுவாமி கோயிலுக்கு அருகில் உள்ளது. இது, 1840 களில் சுவாதி திருநாள் ராமவர்மாவால் கட்டப்பட்டது. தகவலின்படி, இது நான்கு ஆண்டுகளில் 5000 விஸ்வகர்மாக்களால் கட்டப்பட்டது. கடந்த 1846 இல் திருநாள் இறந்த பிறகு, ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இது பயன்படுத்தப்படாமல் இருந்தது.
பாரம்பரிய கட்டிடக்கலை
குதிரைமாலிகா, பாரம்பரிய கேரள கட்டிடக்கலையைப் பெருமைப்படுத்துகிறது. சாய்வான கூரைகள், தூண்களுடன் கூடிய வராண்டாக்கள், முற்றங்களில் மூடப்பட்டிருக்கும். தேக்கு, ரோஸ்வுட், பளிங்கு, கிரானைட் போன்ற பொருட்கள், அந்த மாளிகை கட்டுமானத்தில் பிரதானமாக பயன்படுத்தப்பட்டுள்ளன.
அரண்மனையின் பதினாறு முக்கிய அறைகள், பதினாறு விதமான வடிவமைப்புகளைக் கொண்டுள்ளன. மொத்தத்தில் அரண்மனை 80 அறைகளைக் கொண்டுள்ளது. அவற்றில் 20 அறைகள் பார்வையாளர்களுக்காக 1995 இல் திறக்கப்பட்டது.
அரண்மனையின் தரையானது முட்டையின் வெள்ளைக்கரு, கரி மற்றும் சுண்ணாம்புக் கற்களால் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இது, வெப்பமான காலநிலையில் குளிர்ச்சியாகவும் மென்மையாகவும் இருக்கும்.
அருங்காட்சியகம்
கடந்த 1995 ஆம் ஆண்டில், அரண்மனையின் ஒரு பகுதி அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. அருங்காட்சியகத்தில் திருவிதாங்கூர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்திய பொருட்களைக் காணலாம்.
இந்த அருங்காட்சியகத்தில், பெல்ஜியம் மற்றும் இத்தாலிய கண்ணாடிகள், கதகளி நடனக் கலைஞர்கள் பற்றி அறியும் 14 கதகளி நடன மேனிக்வின்கள், இசைக்கருவிகள், பெல்ஜிய ஹார்பூன், ஆயுதங்கள், பத்தாம் மற்றும் பதினான்காம் நூற்றாண்டு சோழர் பாணி வெண்கல சிற்பங்கள், கிரேக்க சிலைகள், பாரம்பரிய மரச்சாமான்கள், கிருஷ்ணர், ராமர் மற்றும் ஆஞ்சநேயா சிலைகள் என பல சிலைகள் உள்ளன. அங்கிருந்த மற்ற ஆட்சியாளர்கள் அரசருக்கு வழங்கிய சில பரிசுகளும், அருங்காட்சியகத்தில் காணக்கிடைக்கும்.
இந்த அரண்மனை இரண்டு சிம்மாசனங்களைக் காட்டுகிறது. ஒன்று 24 யானை தந்தங்களால் உருவாக்கப்பட்டது. மற்றொன்று போஹேமியன் படிகத்தால் ஆனது. அதன் பின்புறத்தின் மேற்புறத்தில் இணைக்கப்பட்டிருக்கும் திருவாங்கூர் சின்னம், சங்கு ஆகியவற்றைக் காணலாம்.
பாரம்பரிய கட்டிடக்கலை பற்றிய உங்கள் பார்வை விசாலமானதாக இல்லை என்று நீங்கள் கருதுகிறீர்கள் எனில், உடனே குதிரைமாலிகா அரண்மனைக்கு உங்கள் பயணத்திட்டதை இப்போதே திட்டமிடுங்கள். பார்வை விசாலமாகும்.



Click it and Unblock the Notifications








