» »தமிழகத்தின் புகழ்பெற்ற நினைவிடங்கள்!

தமிழகத்தின் புகழ்பெற்ற நினைவிடங்கள்!

Written By: Staff

தமிழ்நாடு, 2000 வருடங்களுக்கு மேலான நாகரீகம், பழமையான கோவில்கள், பாரம்பரியம் ஆகியவைக்கு பெயர் பெற்றவை. கோவில்களுக்கு நிகராக இங்கு பல விதமான நினைவு மண்டபங்களும் இருக்கின்றன.

அப்படி சில புகழ்பெற்ற நினைவு மண்டபங்களைப் பார்க்கலாம்.

விவேகானந்தர் நினைவு மண்டபம், கன்யாகுமரி

Vivekananda

Photo Courtesy : Nomad Tales

விவேகானந்தர் பாறை, கன்யாகுமரியில் மிக‌ முக்கியமான‌ சுற்றுலா தலம். விவேகானந்தர், கடலுக்குள் இருக்கும் இந்த பாறைக்கு நீந்திச் சென்று, மூன்று நாட்கள் தியானம் செய்ததன் நினைவாக கட்டப்பட்டதுதான் விவேகானந்தர் நினைவு மண்டபம்.

விவேகானந்தர் நினைவு மண்டபம், கடற்கரையிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பெரிய பாறையின்மீது அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரையிலிருந்து இங்கு செல்வதற்கு விசைப்படகுகள் இயக்கப்படுகின்றன.

இந்த நினைவு மண்டபத்தில், ஸ்ரீபாத மண்டபம், சபா மண்டபம், தியான மண்டபம் என்று மூன்று பகுதிகள் உள்ளன.

மேலும், இங்கு விவேகானந்தர் தொடர்பான‌ பல மொழிகளின் புத்தகங்கள், படங்கள் மற்றும் விவேகானந்தர் படத்துடனான கைவினைப் பொருட்கள் விற்கும் கடைகளும் இருக்கின்றன‌.

அண்ணா சமாதி, சென்னை

Anna

Photo Courtesy : Aravind Sivaraj

மெரினாவில் இருக்கும் அண்ணா சமாதி அன்றாடம் மக்களை ஈர்க்கும் முக்கிய நினைவிடம்.

பேரறிஞரும், திமுகவின் முதலாவது முதலமைச்சருமான‌ அண்ணாதுரை காலமடைந்தபோது திரண்ட மக்கள் கூட்டம் வரலாற்றில் என்றும் அழியாதது. 1969'இல், அண்ணா ஆட்சியில் ஏறி இரண்டே ஆண்டுகளில் இயற்கை எய்திய போது, மெரினாவில்தான் அடக்கம் செய்யப்பட்டார்.இதன் நினைவாக, இங்கு நினைவிடம் அமைக்கப்பட்டு, அண்ணா சமாதி என்று அழைக்கப்படுகிறது.

பளிங்கு கற்களால் அழகாக கட்டப்பட்டிருக்கும் இந்த சமாதியில் அண்ணாவின் மார்பளவு சிலை வைக்கப்பட்டிருக்கிறது. சிலையருகே, பசுமையான‌ புல்வெளியின் நடுவில் ஒரு பெண் சங்கு முழங்கும் சிலையும் நிறுவப்பட்டிருக்கிறது.

சமாதியில், அண்ணா பயன்படுத்திய பொருட்கள், முக்கிய நிகழ்வுகளின் புகைப்படங்கள் மக்கள் பார்வைக்காக வைத்திருக்கிறார்கள். நேரு, ராஜாஜி, பெரியார், இவர்களுடன், அண்ணா இணைந்திருக்கும் புகைப்படங்கள், அண்ணாவின் இறுதி ஊர்வல புகைப்படங்களும் இருக்கின்றன.

ராஜீவ்காந்தி நினைவிடம், ஸ்ரீபெரும்புதூர்

rajiv

Photo Courtesy : PlaneMad

ராஜீவ் படுகொலை செய்யப்பட்ட மொத்த இடத்தையும், ஒரு அடையாளமாக, ஏழு உயரமான தூண்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன. நினைவகத்தில் ராஜீவ் காந்தி செய்த சாதனைகள் - லைசன்ஸ் ராஜை ஒழித்தது, பொதுத்தொலைபேசிகளை பிரபலப்படுத்தியது - போன்றவை இங்கே சுவர்சித்திரமாக வடிக்கப்பட்டுள்ளது.

மேலும், ராஜிவ் காந்தி கொலையான இடத்தை சுட்டிக்காட்டும் வகையில், ராஜிவ் காந்தி முகம் பதித்த‌ சுவர் ஒன்று நினைவாக வைக்கப்பட்டிருக்கிறது.

எம்.ஜி.ஆர் சமாதி, சென்னை

mgr

Photo Courtesy : Balasubramanian G Velu

8 ஏக்கர்களைத் தாண்டி விரிந்திருக்கிறது அண்ணா சமாதி அருகில் அமைந்திருக்கும் எம்.ஜி.ஆர் சமாதி; 1988'இல் கட்டப்பட்டு, 1990'இல் எம்.ஜி.ஆரின் மனைவி, ஜானகி ராமச்சந்திரனால் திறக்கப்பட்டது இந்த சமாதி. சமாதியருகே, எம்.ஜி.ஆர் நினைவாக அருங்காட்சியகம் ஒன்றும் இருக்கிறது.

மெட்ராஸ் போர் நினைவிடம், நந்தம்பாக்கம்.

madras

Photo CourtesySilvarius Celso

சென்னையில் மிக முக்கியமான போர் நினைவிடம் இது. இரண்டாம் உலகப் போரின் போது வீர மரணமடைந்தவர்களின் கல்லறைகள் இங்கிருக்கிறது. கிண்டி கத்திப்பாரா சந்திப்பிலிருந்து பூந்தமல்லி செல்லும் சாலையில் உள்ள நந்தம்பாக்கத்தில் இருக்கிறது.