» »தெலுங்கானாவின் கோட்டைகளுக்கு கெத்தா ஒரு டிராவல் போலாமா?

தெலுங்கானாவின் கோட்டைகளுக்கு கெத்தா ஒரு டிராவல் போலாமா?

Written By:

கோட்டை என்றால் பாதுகாப்பு காரணங்களுக்காக கட்டப்படும் கட்டிடங்கள் அடங்கிய அமைப்பு எனலாம். பண்டைய அரசர்கள் உள்ளிட்ட முக்கிய மனிதர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக கட்டிய அமைப்பு கோட்டை என்பதாகும். அவற்றில் சில மிக முக்கியமானவர்கள் தங்கும் இடமாகும். போர்வீரர்களுக்கான வசதிகளையும், அரண்மனைகளைச் சுற்றிய கோட்டைகளையும் நிறைய இந்தியாவில் காண முடியும். அப்படி கோட்டைகளுக்கு பெயர் பெற்றது என்றால் அது ஹைதராபாத் தான். வாருங்கள் தெலங்கானாவில் இருக்கும் முக்கிய கோட்டைகளைப் பற்றி இந்த பதிவில் காண்போம்.

வாரங்கல் கோட்டை

வாரங்கல் கோட்டை


வாரங்கல் நகரத்தின் பிரதான சுற்றுலா அம்சமாக இந்த வாரங்கல் கோட்டை புகழுடன் அறியப்படுகிறது. தென்னிந்திய கட்டிடக்கலை மேன்மைக்கான சிறந்த உதாரணமாக இந்த கோட்டை வீற்றிருக்கிறது. 1199ம் ஆண்டில் காகதீய வம்ச அரசரான கணபதிதேவ் என்பவரால் துவங்கப்பட்ட இதன் கட்டுமானம் அவரது புத்திரியான ராண் ருத்ரம்மா தேவியின் காலத்தில் 1261ம் ஆண்டு முடிக்கப்பட்டிருக்கிறது.

அக்கால தென்னிந்திய கலைஞர்களின் கற்பனையில் இப்படியெல்லாம் கூட தோன்றியிருக்கின்றனவா, இப்படிப்பட்ட கைவினைத்திறனும் அறிவும் கொண்டவர்களா நம் முன்னோர்கள், இப்படிப்பட்ட கலைத்திறமைகள் முடியாட்சி நடத்திய மன்னர்களால் ஆதரிக்கப்பட்டனவா, என்றெல்லாம் நம்மை திகைக்க வைத்து, மெய் சிலிர்க்க வைக்கும் ஒரு மஹோன்னத ஸ்தலம்தான் இந்த வாரங்கல் கோட்டைஸ்தலம்.

தற்சமயம் சிதிலங்களின் மிச்சமாகவே காணப்பட்டாலும் இங்கு வீற்றிருக்கும் கலையம்சங்கள் நம்மை நமது மஹோன்னத வரலாற்று நாகரிகத்துக்கு இழுத்து சென்று கண் கலங்க வைப்பவை. அழகிய ஆபரணங்கள் போன்று வெகு நுணுக்கமான சிற்பச்செதுக்கு அமைப்புகளுடனும், வெகு சிக்கலான அலங்கார படைப்புகளுடனும் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கல் படைப்புகளுக்கு இணையானவை உலகில் வேறெங்குமே இல்லையென்று சொல்லலாம்.

இங்குள்ள ஒரு அலங்கார தோரண வாயிலை பார்க்கும் போது ‘கல்லிலே கலை வண்ணம் கண்டான்' எனும் வரிகள் போதாதோ என்ற சந்தேகம் நம் மனதில் தோன்றும். ரசனை மிகுந்த ஒவ்வொரு தென்னிந்திய திராவிட மனமும் வாழ்வில் ஒரு முறையாவது விஜயம் செய்து தரிசிக்க வேண்டிய உன்னத வரலாற்று ஸ்தலம் இது. தற்சமயம் சிதிலங்களின் மிச்சமாக இந்த கோட்டை ஸ்தலம் காணப்பட்டாலும் இதன் கம்பீரம் பார்வையாளர்களை திணறடிக்க தவறுவதில்லை.

சாஞ்சி கட்டிடக்கலை பாணியில் இந்தக் கோட்டைக்கு நான்கு பெரிய வாயில்கள் உள்ளன. இவற்றில் வெளி வாயில் மிகப்பிரம்மாண்டமாக நாட்டில் வேறெங்கும் பார்க்க முடியாத வகையில் காட்சியளிக்கிறது. கட்டிடக்கலை, வரலாறு மற்றும் புராதன நாகரிகங்களில் ஈடுபாடு கொண்டவர்கள் ஏராளமாக இந்த கோட்டைக்கு விஜயம் செய்கின்றனர். பலவிதமான விலங்குகளின் உருவங்கள் இங்கு சுவர்ச்சிற்பங்களில் நுணுக்கமாக சித்தரிக்கப்பட்டுள்ளதை காணலாம்.

PC: Dinesh bhogadi

புவனகிரி கோட்டை

புவனகிரி கோட்டை

திரிபுவனமல்ல விக்ரமாதித்யா எனும் சாளுக்கிய மன்னரால் இந்த புவனகிரி கோட்டை 12ம் நூற்றாண்டு வாக்கில் கட்டப்பட்டுள்ளது. தனது சாம்ராஜ்ஜியத்தின் பாதுகாப்பு கருதி இந்த கோட்டையை அம்மன்னர் நிர்மாணித்துள்ளார் 40 ஏக்கர் பரப்பளவில் ஒரு பிரம்மாண்ட மலைப்பாறையின்மீது 500 மீ உயரத்தில் இந்த கோட்டை எழுப்பப்பட்டிருக்கிறது.

தனித்தன்மையான கட்டிடக்கலை அம்சங்களுடனும் தோற்றத்துடனும் காட்சியளிப்பதால் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் இந்த புவனகிரி கோட்டை பிரசித்தமாக அறியப்படுகிறது. நீள்வட்ட வடிவத்தில் காணப்படும் இந்த கோட்டையின் உள்ளே அதன் இரண்டு வாசல்கள் வழியாக நுழையலாம். கோட்டையைச்சுற்றி ஆழமான அகழியும் அமைக்கப்பட்டுள்ளது.

கோட்டையின் உள்ளே பாதாள அறைகள், நீண்ட கூடங்கள், ரகசியச்சுரங்கப்பாதைகள், ரகசிய ஆயுத அறைகள் மற்றும் குதிரை லாயங்கள் போன்றவை காணப்படுகின்றன. கோட்டையின் மேல் அடுக்கில் இரண்டு குளங்கள் மற்றும் ஆழமான கிணறுகள் போன்றவையும் நீர் தேவைகளுக்காக அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த கோட்டையின் உச்சிக்கு இருண்ட படிப்பாதை மூலமாகவோ அல்லது வளைந்து வளைந்து செல்லும் செங்குத்தான பாதை மூலமாக சென்றடையலாம். சாகச சுற்றுலாப்பிரியர்களுக்கு இந்த கோட்டை ஸ்தலம் மிகவும் பிடித்தமானதாக இருக்கும்.

Moses Manobhilash

ரச்சகொண்டா கோட்டை

ரச்சகொண்டா கோட்டை

ரச்சகொண்டா கோட்டைப்பகுதி 14 மற்றும் 15ம் நூற்றாண்டுகளில் இப்பகுதியை ஆண்ட வேலமா அரசர்கள் தலைநகரமாக விளங்கியதாகும். தென்னிந்தியாவிலேயே அதிகம் மதிக்கப்படாத ஒரு ராஜவம்சம் என்றால் அது இந்த வேலமா வம்சமாகத்தான் இருக்க முடியும்.

இவர்கள் பாமனி முஸ்லிம் அரசர்களோடு கூட்டு சேர்ந்து ‘கொண்டவீட்டு ரெட்டி அரசர்'களுடன் அடிக்கடி சண்டையிட்டுக்கொண்டிருந்ததே அதற்கு காரணம். வாரங்கல் கப்பய்ய நாயக்கர்களுடனும் இந்த வேலமா அரசர்கள் சண்டையில் ஈடுபட்டு வந்தனர். இப்படிப்பட்ட சூழலில் எதிரிகளின் தாக்குதலை சமாளிக்கும் வகையில் வேலமா அரசர்கள் இந்த ரச்சகொண்டா கோட்டையை கட்டினர்.

இருப்பினும் முஸ்லிம் அரசர்களின் சதி காரணமாக இவர்கள் செல்வாக்கிழந்து கப்பம் வசூலிக்கும் பாளையக்காரர்கள் போன்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். அதுமட்டுமல்லாமல், இனி ராஜ்ஜியம் ஆளமுடியாது என்ற சாபத்தையும் ஒரு பிராமணரிடமிருந்து அவர்கள் பெற்றுவிட்டனர். இன்றும் அந்த சாபத்தின் காரணமாகத்தான் ரச்சகொண்டா கோட்டை சிதிலமடைந்து கிடப்பதாக மக்கள் நம்புகின்றனர். ஆர்வம் உள்ள பயணிகளும் உள்ளூர் மக்களும் இந்த கோட்டைப்பகுதிக்கு சூரிய அஸ்தமனத்துக்கு முன் விஜயம் செய்கின்றனர்.

Ylnr123

 மேடக் கோட்டை

மேடக் கோட்டை

மேடக் மாவட்டத்தில் அமைந்திருக்கும் மேடக் கோட்டை ஆந்திர தலைநகரம் ஹைதராபாத்திலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோட்டையை 12-ஆம் நூற்றாண்டில் காகதீய பேரரசர் பிரதாப ருத்ரா என்பவர் மேடக் நகரை படையெடுப்பிலிருந்து பாதுகாக்க வேண்டி நகரை சுற்றி ஒரு குன்றின் மீது கட்டியுள்ளார். இதற்கு அவர் இட்ட பெயர் மேதுகுர்துர்காம் என்றாலும் உள்ளூர் மக்கள் இக்கோட்டையை மேதுகுசீமா என்றே அழைத்து வருகின்றனர்.

மேடக் கோட்டை காகதீயர்கள் மற்றும் குதுப் ஷாஹி காலகட்டத்தில் அதிகாரமிக்க பகுதியாக திகழ்ந்து வந்தது. இங்கு 17-ஆம் நூற்றாண்டில் கோட்டை வளாகத்துக்குள்ளேயே குதுப் ஷாஹி ஆட்சியாளர்கள் மசூதி ஒன்றை கட்டியுள்ளனர். இந்தக் கோட்டையில் தற்போது அந்த 17-ஆம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்த மிகப்பெரிய பீரங்கி ஒன்று பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும் வரலாற்றுச் சிறப்பு மட்டுமின்றி தொல்பொருள் முக்கியத்துவத்தையும் மேடக் கோட்டை பெற்றிருப்பதால் இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்தோடு வந்து செல்கின்றனர்.

Fazilsajeer

கோல்கொண்டா கோட்டை

கோல்கொண்டா கோட்டை

ஹைதராபாத் நகரிலிருந்து 11 கி.மீ தூரத்தில் ஒரு மலையின்மீது அமைந்துள்ளது. கொல்ல கொண்டா என்பது மேய்ப்பர் மலை என்ற மலையை குறிப்பிடுகிறது. ஒரு காலத்தில் செழிப்புடன் திகழ்ந்த ஒரு தலைநகரமாக விளங்கிய கோல்கொண்டா தற்போது சிதிலங்களாக மட்டுமே காட்சியளிக்கிறது. இருப்பினும் தனது காலத்தில் இந்த கோல்கொண்டா எந்த அளவுக்கு சிறப்புடன் விளங்கியிருக்கக்கூடும் என்பதை இப்போதும் கண்கூடாக காணலாம்.

கோல்கொண்டா கோட்டை 1512ம் ஆண்டிலிருந்து இப்பகுதியை ஆண்ட குதுப் ஷாஹி ராஜவம்சத்தினரால் கட்டப்பட்டுள்ளது. இந்த கோட்டையின் பெரும்பான்மையான அமைப்புகளை நிர்மாணித்த பெருமைக்குரியவராக இப்ராஹீம் குலி குதுப் ஷா வாலி எனும் மன்னர் குறிப்பிடப்படுகின்றார். முக்கியமாக வடக்கிலிருந்து முகலாயர்களின் தாக்குதல்களை சமாளிக்கும் நோக்கத்துடன் இந்த கோட்டைப்பகுதி எழுப்பப்பட்டுள்ளது.

இந்தக்கோட்டையில் காணப்படும் ஒலியியல் அம்சம் ஒரு விசேஷமான அம்சமாக அறியப்படுகிறது. அதாவது கோட்டை வாயிற்பகுதியில் நின்று நாம் கைகளைத்தட்டினால் அந்த சத்தமானது மிகத்துல்லியமாக 91 மீட்டர் உயரத்திலுள்ள கோட்டையின் மேல் மாடத்தில் எதிரொலிக்கிறது. சார்மினார் விதான வாயிலையும் இந்த கோட்டையையும் இணைக்கும் ஒரு ரகசிய சுரங்கப்பாதை உள்ளதாகவும் உள்ளூர் மக்களால் நம்பப்படுகிறது. ஆனால் அதன் இருப்பை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் ஏதும் இல்லை.

Haseeb1608

 தொம்மகொண்டா கோட்டை

தொம்மகொண்டா கோட்டை


தொம்மகொண்டா எனும் கிராமத்தில் அமைந்துள்ள இந்த தொம்மகொண்டா கோட்டை நிஜாமாபாத் நகரத்திலிருந்து 38கி.மீ தூரத்திலும் தலைநகரமான ஹைதராபாத் நகரிலிருந்து 98 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. தனது வரலாற்றுப்பின்னணி காரணமாக நிஜாமாபாத் மற்றும் தெலங்கானா பகுதியில் இந்த கோட்டை மிகப்பிரசித்தமாக அறியப்படுகிறது.

கம்மா பிரிவை சேர்ந்த கம்மினேணி ராஜவம்சத்தால் கட்டப்பட்ட இந்த கோட்டை 400 வருடங்கள் பழமையானதாகும். இந்த கோட்டைக்கு வெளிப்பகுதியில் காகதீய மன்னர்களால் கட்டப்பட்ட ஒரு சிவன் கோயிலும் உள்ளது. இந்த கோட்டையின் பல பகுதிகள் இடிபாடடைந்த நிலையில் தற்போது காணப்படுகின்றன. இருப்பினும் இதன் உன்னதமான கட்டிடக்கலை அம்சங்கள் இன்றும் பார்த்து ரசிக்கக்கூடியவையாக உள்ளன.

நுணுக்கமான கலையம்சங்களோடு உறுதியான பாதுகாப்பு அம்சங்கள் கலந்து இந்த கோட்டை உருவாக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய இந்து கட்டிடக்கலை பாணியில் இஸ்லாமிய பாணியும் கலந்து வடிவமைக்கப்பட்டிருப்பது இதன் ஒப்பற்ற சிறப்பம்சமாகும்.

telanganatourism.gov.in

நிஜாமாபாத் கோட்டை

நிஜாமாபாத் கோட்டை

கண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் ஹோட்டல்கள் நிஜாமாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த நிஜாமாபாத் கோட்டை வரலாற்றுப்பின்னணியோடு கூடிய ஆன்மீக முக்கியத்துவத்தையும் கொண்டு விளங்குகிறது. மாநிலத்தலைநகரான ஹைதராபாதிலிருந்து 200 கி.மீ தூரத்தில் உள்ளதால் இந்த கோட்டைப்பகுதிக்கு சுற்றுலாப்பயணிகள் எளிதில் பயணிக்கலாம்.

மஹாராஷ்டிரா மாநிலத்தின் எல்லைப்பகுதியில் வீற்றிருப்பதால் அம்மாநிலத்திலிருந்தும் அதிகப்பயணிகள் இந்த கோட்டைக்கு விஜயம் செய்கின்றனர். 10ம் நூற்றாண்டினை சேர்ந்த இந்த கோட்டை ஒரு மலையின்மீது கம்பீரமாக வீற்றுள்ளது. இந்த மலையானது நிஜாமாபாத் நகரத்தின் தென்பகுதியில் காணப்படுகிறது.
நிஜாமாபாத் மக்களால் பெருமையாக கருதப்படும் இந்த கோட்டை ராஷ்டிரகூட வம்ச மன்னர்களால் கட்டப்பட்டிருக்கிறது. 300 மீட்டர் உயரத்தில் கண்கவரும் தோற்றத்துடன் வீற்றுள்ள இந்த கட்டுமானம் அந்நாளைய கட்டிடக்கலை மஹோன்னதத்தின் சாட்சியாகவே காட்சியளிக்கிறது. காலப்போக்கில் பல்வேறு ராஜ வம்சங்களை சேர்ந்த மன்னர்களின் ஆட்சி மாறி மாறி நிகழ்ந்தபோது இதன் ஆதி கட்டமைப்பில் மாற்றங்களும் புதுப்பிப்புகளும் செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Rizwanmahai

கம்மம் கோட்டை

கம்மம் கோட்டை

கம்மம் கோட்டையானது, 950 ம் ஆண்டுகளில் இப்பகுதி காகதீய வம்சத்தினரின் ஆட்சியில் இருந்தபோது கட்டப்பட்டிருக்கிறது. இருப்பினும் அவர்களது ஆட்சியில் இதன் கட்டுமானம் முடிக்கப்படவில்லை. அவர்களுக்கு அடுத்து, முசுனுரி நாயக்கர்கள் மற்றும் வேலமா வம்ச மன்னர்கள் இந்த கோட்டைக் கட்டுமானத்தை முடித்துள்ளனர்.

மேலும், பின்னாளில் 1531ம் ஆண்டில் குதுப் ஷாஹி வம்சத்தினர் இந்த கோட்டை வளாகத்தில் கூடுதலாக புதிய மாளிகைகளையும் இணைப்புகளையும் நிர்மாணித்துள்ளனர். ஹிந்து மற்றும் இஸ்லாமிய பாணி இரண்டும் கலந்த கட்டிடக்கலை அம்சங்களை இந்த கோட்டை அமைப்பில் பார்க்க முடிகிறது. இரண்டு மரபுகளையும் சேர்ந்த மன்னர்களின் ஆட்சியில் இந்த கோட்டையின் கட்டுமானம் உருவாக்கப்பட்டிருப்பதே இதற்கு காரணம். 1000 வருடங்கள் கழிந்தபின்னரும் தன்னுடைய புராதன பொலிவு குன்றாமல் இந்த கோட்டை கம்பீரமாக வீற்றிருக்கிறது.

கம்மம் பகுதியின் வரலாற்று பின்னணியோடு தொடர்புடைய இந்த கோட்டை ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக கம்மம் நகரம் மற்றும் ஒட்டுமொத்த ஆந்திரம் மாநிலத்தையும் பெருமைப்படுத்தும் விதத்தில் வீற்றுள்ளது. இந்த கோட்டை ஸ்தலத்தை ஒரு முக்கிய சுற்றுலாத்தலமாக பராமரிப்பதற்காக ஆந்திர மாநில அரசாங்கமும் அதிக நிதியை செலவிட்டுள்ளது.

Shashank.u

தேவரகொண்டா கோட்டை

தேவரகொண்டா கோட்டை

தேவரகொண்டா கோட்டை நல்கொண்டா மாவட்டத்தில் தேவரகொண்டா எனும் சிறு நகரத்தில் அமைந்துள்ளது. ஏழு மலை சூழ்ந்திருக்கும் ஒரு மலையின்மீது இந்த கோட்டை கட்டப்பட்டிருக்கிறது.

14 ம் நூற்றாண்டில் ரேச்சரல வேலமா அரசர்களால் இந்த கோட்டை கட்டப்பட்டிருக்கிறது. தங்கள் ராஜ்ஜியத்துக்கு வலிமையான கேந்திரமாக இந்த கோட்டையை அவர்கள் நிர்மாணித்துள்ளனர்.

பல நூற்றாண்டுக்காலம் பராமரிப்பின்றி இன்று இந்த கோட்டை சிதிலமடைந்து காட்சியளிக்கிறது. இந்த கோட்டை ஸ்தலத்தில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபடுவதற்காக தொல்லியல் நிபுணர்கள் இங்கு அதிகம் விஜயம் செய்கின்றனர்.

இந்த புராதன கோட்டையை காப்பாற்ற மாநில அரசு எந்த முயற்சியும் எடுக்காததால் இப்பகுதி சமூக விரோதிகளின் செயல்பாடுகளால் மேலும் சேதமடைந்துவருகிறது.இந்த கோட்டைக்கு நல்கொண்டா, ஹைதராபாத், ஷீசைலம் மற்றும் நாகார்ஜுன சாகர் ஆகிய நகரங்களிலிருந்து சாலை மார்க்கமாக பயணிக்கலாம்.

wikipedia.org

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்