
கேரளம், கடவுளின் சொந்த நாடு என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் இம்மாநிலம் கொண்டுள்ள இயற்கை அழகு அங்கு வரும் யாவரையும் வசீகரிக்கும். பழமையும், பசுமையும் நிறைந்த இங்கு கோயில்களும் நிறையவே உள்ளன. கேரளாவில் உள்ள கோயில்களின் கட்டமைப்பு, வழிபாட்டு முறைகள் மற்றும் வழக்கங்கள் மற்ற மாநிலங்களை காட்டிலும் நிறையவே வித்தியாசமானது. கேரளத்தின் மிகப்புகழ் பெற்ற கோயில்களில் ஒன்று தான் குருவாயூரில் உள்ள கிருஷ்ணர் கோயில். வாருங்கள் பழமையும் தொன்மையும் வாய்ந்த இக்கோயிலைப்பற்றி அறிந்து கொள்வோம்.
குருவாயூர் கோயில்:

புகைப்படம்: Jpullokaran
கேரளாவின் மிகப்புகழ் பெற்ற கோயில்களில் ஒன்றான இந்த குருவாயூர் கோயில் விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணரின் கோயிலாகும். 'பூலோக வைகுண்டம்' என அழைக்கப்படும் இக்கோயில் வைணவர்களின் புனித கோயில்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
கி.மு 3000 ஆண்டில் கட்டப்பட்டதாக சொல்லப்படும் இந்த கோயிலைப்பற்றிய குறிப்புகள் 14ஆம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் இலக்கிய நூலான 'கோக சந்தேசதில்' கிடைக்கப்பெறுகின்றன. இப்போது நாம் பார்க்கும் மூலவர் சிலை 1638இல் கட்டப்பட்டிருக்கிறது. இக்கோயில் மூலவர் சிலை காந்த ஷக்தி வாய்ந்த கல்லால் ஆனதாக நம்பப்படுகிறது. இச்சிலையை அபிஷேகம் செய்த நீரைப்பருகினால் நோய்கள் குணமாகும் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கையாகும்.

புகைப்படம்: Jean-Pierre Dalbéra
இக்கோயிலைப்பற்றி ஏராளமான கதைகள் உலாவுகின்றன. தனது அவதாரத்தை முடித்துக்கொண்டு வைகுண்டம் திரும்புகையில் தன்னால் செய்யப்பட்ட சிலை ஒன்றை தேவர்களின் குருவான பிரஹச்பதியிடமும், வாயு தேவரிடமும் வழங்கியதாகவும் அவர்கள் அதை எடுத்துக்கொண்டு தெற்கு நோக்கி வருகையில் ஒரு இடத்தின் வளமையை கண்டு அவர்கள் ஆச்சர்யம் அடைந்ததாகவும், பின்னர் அங்கு சிவா பெருமான் விஷ்ணுவை பூஜித்த வரலாற்றை அறிந்த அவர்கள் தங்களிடம் உள்ள சிலையை பிரதிர்ஷ்டை செய்ய சரியான இடம் இதுவென முடிவு செய்து விஷ்வ கர்மாவினை கொண்டு ஒரு கோயிலை உருவாக்கியதாக சொல்கின்றனர். குருவும், வாயுவும் சேர்ந்து இக்கோயிலை கட்டியதால் இவ்விடம் 'குருவாயூர்' என பெயர் பெற்றதாம்.

புகைப்படம்: Aruna Radhakrishnan
இக்கோயிலில் சிறப்பு நாட்களில் நடத்தப்படும் 'கிருஷ்ணாட்டம்' என்னும் கதக்களி நிகழ்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். கிருஷ்ணனின் குழந்தைப்பருவ வாழ்க்கையை குறிக்கும் இந்த கதக்களி நடனம் குருவாயூர் கோயிலை தவிர வேறெங்கும் பார்க்க முடியாது.

புகைப்படம்: www.mytemplesindia.com
இக்கோயிலினுள் இந்துக்கள் அல்லாதவர் நுழைய முடியாது. அதே போல இக்கோயிலினுள் செல்ல ஆடைக்கட்டுப்பாடுகளும் உண்டு. ஆண்கள் வெள்ளை நிற வேஷ்டி மற்றும் துண்டு மட்டுமே அணிய வேண்டும். பெண்கள் வெள்ளை நிற சீலை அல்லது தற்போது வெள்ளை நிற சுடிதார் போன்ற ஆடைகளும் அனுமதிக்கப்படுகின்றன. அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜை ஆரம்பிக்கிறது. திருமணம் செய்ய மங்களகரமான இடமாக இது கருதப்படுவதால் முகுர்த்த நாட்களில் சில நூறு திருமணங்கள் வரை இங்கு நடக்கின்றன.
எப்படி அடையலாம்?
தேசிய நெடுஞ்சாலை வழியாக குன்னங்குளம் வந்து அங்கிருந்து 8கி.மீ தொலைவில் உள்ள குருவாயூர் கோயிலை அடையலாம். மதுரை, திருச்சி வழியாக சென்னையை அடையும் குருவாயூர்-சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் குருவாயூர் ரயில் நிலையம் வந்து அங்கிருந்து இக்கோயிலை அடையலாம். இக்கோயிலில் இருந்து 80 கி.மீ தொலைவில் கொச்சி விமான நிலையம் உள்ளது. அங்கிருந்து கார் அல்லது பேருந்து மூலம் கோயிலை அடையலாம்.



Click it and Unblock the Notifications






