» »ஹேவ்லாக் தீவு - சொர்க்கம் பூமியிலும் இருக்கிறது

ஹேவ்லாக் தீவு - சொர்க்கம் பூமியிலும் இருக்கிறது

Posted By: Staff

வங்காள விரிகுடாவில் அமைந்திருக்கும் அந்தமான் தீவுகள் அற்புதங்களை கொண்டிருக்கிறது. இரைச்சலும், நெருக்கடியும் மிக்க நகர வாழ்க்கைக்கு மாற்றாக இயற்கையுடன் பின்னிப்பிணைத்து அமைதியுடன் மகிழ்ச்சியாக சிலநாட்களை கொண்டாட அந்தமான் மிகச்சிறந்த இடம்.  

ஹேவ்லாக் தீவு - சொர்க்கம் பூமியிலும் இருக்கிறது

அந்தமான் தீவுக்கூட்டங்களில் மிக முக்கியமான தீவாக புகழ்பெற்றுள்ள இந்த சொர்க்கத்தீவை நாடி ஏராளமான சுற்றுலாப்பயணிகள் உலகில் பல பகுதிகளிலிருந்தும் விஜயம் செய்கின்றனர். போர்ட் பிளேர் நகரத்திலிருந்து வடகிழக்கே 55 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த ஹேவ்லாக் தீவுக்கு ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை 'ஃபெர்ரி' சொகுசு படகுகள் (போர்ட் பிளேரிலிருந்து) இயக்கப்படுகின்றன. 

ஹேவ்லாக் தீவுக்கு சென்றடைந்தபின் கால்நடையாகவே சுற்றித்திரிந்து தீவின் அழகம்சங்களையும், கடற்கரைகளையும், குடில்களையும், கடைகளையும் நிதானமாக பார்த்து ரசிப்பது நல்லது.ராதாநகர் கடற்கரைப்பகுதியில் ஸ்படிகம் போன்று மரகதப்பச்சை ஜொலிப்புடன் மின்னும் கடல்நீருக்கு அடியில் காட்சியளிக்கும் பவளப்பாறை வளர்ச்சிகளை விதவிதமான வடிவங்களில் கண்டு மகிழலாம்.

இந்த தீவில் உள்ள ராதா நகர் பீச் தேனிலவு வரும் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமாகும். வெள்ளை மணல் கடற்கரையில் காதல் துணையுடன் உலா வருவது ஏகாந்தமாக இருக்கும். 

ஹேவ்லாக் தீவு - சொர்க்கம் பூமியிலும் இருக்கிறது

அந்தமான் தீவுகளின் சிறப்பம்சமான 'ஸ்கூபா டைவிங்' இந்த ஹேவ்லாக் தீவிலும் பிரதான சுற்றுலா அம்சமாக விளங்குகிறது. பொதுவாக, முதல் முறை டைவிங் செய்பவர்கள், கொஞ்சம் அனுபவம் மிக்கவர்கள் மற்றும் நிறைய அனுபவம் உள்ள சாகசவிரும்பிகள் என்று மூன்று தரப்பினருக்கான 'ஸ்கூபா டைவிங்' கடல் மூழ்கு பயண வசதிகள் இந்த தீவில் வழங்கப்படுகின்றன. 

ஹேவ்லாக் தீவை எப்படி அடைவது? 

ஹேவ்லாக் தீவு - சொர்க்கம் பூமியிலும் இருக்கிறது

அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு பயணம் மேற்கொள்வது மிக எளிமையான ஒன்றாகவே உள்ளது. இந்தியாவின் கல்கத்தா, சென்னை, புவனேஸ்வர் போன்ற நகரங்களிலிருந்து எல்லா விமானச்சேவை நிறுவனங்களும் 'போர்ட் பிளேர்'க்கு விமான சேவைகளை இயக்குகின்றன. இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான எம். வி. நான்கௌரி எனும் கப்பலுக்கு அந்தமான் தீவுகளில் ஒன்றான 'நான்கௌரி' எனும் தீவின் பெயரே சூட்டப்பட்டுள்ளது.

இந்த கப்பல் சென்னை துறைமுகத்திலிருந்து மாதம் இருமுறையும், விசாப்பட்டிணம் துறைமுகத்திலிருந்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும் போர்ட் பிளேர் துறைமுகத்துக்கு இயக்கப்படுகிறது. இந்த கப்பல் பயணம் சிக்கனமானது என்றாலும் பயண நேரம் கூடுதலாக இருக்கும்.

Read more about: andaman, havelock