என்ன தான் இந்தியா தொழிநுட்பம், கல்வி, அறிவியல் என அசதி வந்தாலும் பற்பல பெரு நகரங்கள் உருவாகி வந்தாலும், எப்பொழுதும் பரபரப்பாக சுழன்று கொண்டிருக்கும் நம் மனது சுற்றுலா என்றால் முதலில் தேடுவது அழகிய கிராமப் புறங்களை தான்! மர நிழலிலும், புல்வெளிகளிலும் சாய்ந்து காற்று வாங்குவதும், கிராமப்புற உணவுகளை உட்கொள்ளுவதும், பாரம்பரியம் நிறைந்த கிராம மக்களுடன் உரையாடுவதும் ஒரு தனி சுகம் தானே! அதை மனதில் வைத்துக் கொண்டு தான் மத்திய அரசும் 'கிராமப்புற சுற்றுலா'விற்கு முக்கியத்துவம் கொடுத்து பல அழகிய கிராமங்களை தேர்ந்தெடுத்து மேம்படுத்தி வருகிறது. அந்த 'துடிப்பான கிராமம் திட்டத்தின்' (Vibrant Village Programme) கீழ் இப்பொழுது சீனாவின் எல்லையில் உள்ள 17 கிராமங்கள் அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு, சுற்றுலா தளங்களாக மேம்படுத்தப்படவுள்ளன. இந்த கிராமங்கள் யாவும் அழகிய இமாலய மாநிலங்களின் கீழ் வருவதால் அதன் அழகைப் பற்றி சொல்லவே வேண்டாமே! இந்த கிராமங்களுக்கு சுற்றுலா செல்ல பயண விரும்பிகளான உங்களுக்கு ஆசையாக உள்ளதா?

அழகான இந்திய எல்லையோர கிராமங்களுக்கு படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்
இந்தியாவில் சுற்றுலா என்பது கோட்டைகள், அரண்மனைகள், மலைப்பிரதேசங்கள் மற்றும் மத ஸ்தலங்கள் மட்டுமே அல்ல. நாட்டின் எல்லைகளில் பல ஆராயப்படாத அழகுகள் உள்ளன என்று உங்களுக்கு தெரியுமா. பசுமை போர்த்திய புல்வெளிகளுடன், இதமான வானிலையுடன், வித்தியாசமான கலாச்சாரத்துடன் இருக்கும் இந்தியாவின் எல்லையோர கிராமங்கள் பார்வையிடத் தகுந்தவை. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இந்தியாவின் எல்லையோர கிராமங்களுக்கு வருகை தருகின்றனர். இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு, இந்திய அரசாங்கம் துடிப்பான கிராமத் திட்டத்தை (VVP) தொடங்கியுள்ளது. சமீபத்தில், சீன எல்லையில் உள்ள 17 கிராமங்கள் எல்லை சுற்றுலாவுக்கு பயனளிக்கும் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

துடிப்பான கிராமப்புற திட்டம்
நாட்டின் உள்ளே நிலப்பரப்பில் வாழும் நமக்கு எல்லையோர வாழ்வு தெரியாது. அதேபோல, கிராமப்புற வாழ்க்கையைப் பற்றி நாம் அறிந்த சில விஷயங்கள் மட்டுமே உள்ளன. கிராமப்புறங்களில் சுற்றுலாவை அதிகரிக்கும் முயற்சியாக துடிப்பான கிராமம் திட்டம் அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக சீன எல்லையில் உள்ள 17 சமூகங்களை சுற்றுலா தலங்களாக மாற்ற அரசு தேர்வு செய்துள்ளது. இந்த 17 எல்லை கிராமங்கள் 663 கிராமங்களின் ஒரு பகுதியாகும், அவை முதல் கட்டத்தில் புதுப்பிக்கப்படும், அதேசமயம் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள் மற்றும் சிறந்த இணைப்பு ஆகியவற்றில் முதன்மை கவனம் செலுத்தப்படும்.

சாகச விளையாட்டுகளுடன் தயாராகும் கிராமங்கள்
இமாச்சலப் பிரதேசம், லடாக், சிக்கிம், உத்தரகண்ட் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து எல்லையோர அழகிய கிராமங்கள் 17 தேர்வு செய்யப்பட்டுள்ளன. மத்திய சுற்றுலா அமைச்சகம் சாகச சுற்றுலா மற்றும் ஹோம்ஸ்டேகளை மையமாக வைத்து இந்த கிராமங்கள் யாவும் மேம்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக 120 தங்கும் விடுதிகள் கட்டப்படும். இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் வழியாக மலையேற்ற பாதைகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரிவர் ராஃப்டிங், ஐஸ் ஸ்கேட்டிங், பனிச்சறுக்கு போன்ற சாகச விளையாட்டுகளை ஆதரிக்கும் வகையில் அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிமில் வளர்ச்சி இருக்கும்.

அட்டகாசமாக ரெடியாகும் எல்லையோர 17 கிராமங்கள்
இந்த திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் கிராமங்களில் லடாக்கில் உள்ள சுஷுல் மற்றும் கோர்சோக் ஆகியவை அடங்கும். ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள கிபு, லாலுங் மற்றும் சரங் காஸ்; உத்தரகாண்டில் நிதி, மனா, மலரி மற்றும் குஞ்சி; சிக்கிமில் லாச்சென், க்னாதாங், லாச்சுங்; அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஜெமிதாங், டுட்டிங், டாக்சிங், சயாங்தாஜோ மற்றும் கிபித்தூ ஆகிய கிராமங்கள் அடங்கும். இந்த லட்சிய திட்டம் மேலும் சுற்றுலா மையங்களின் வளர்ச்சியுடன் சுத்தமான குடிநீர், அனைத்து வானிலை சாலை அணுகல், மொபைல் நெட்வொர்க், மின்சாரம், இணைய இணைப்பு ஆகியவற்றை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த இடங்கள் விரைவில் மேம்படுத்தப்பட்டு சுற்றுலா அணுகலுக்கு வழி விடப்படும்! இந்த இடங்களில் எவையெல்லாம் உங்கள் பாக்கெட் லிஸ்டில் உள்ளன?



Click it and Unblock the Notifications



