ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல பெரும்பாலான பயணிகள் பேருந்துகளை விட ரயில்களையே தேர்வு செய்கின்றனர். எழுந்து நடக்கலாம், டாய்லெட்களுக்கு செல்லலாம், நிம்மதியாக கால் நீட்டி உறங்கலாம் இது போன்ற பல்வேறு காரணங்களுக்காக பெருவாரியான பயணிகள் ரயில்களில் பயணிக்கின்றனர். ஆனாலும் இறங்குமிடம் வந்துவிடுமோ என்று இரண்டு மணி நேரத்திற்கு முன்பே எழுந்து உக்காந்து விடுகிறோம். இனி அப்படி செய்ய அவசியம் இல்லை. நீங்கள் இறங்குமிடம் வருவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பாக இந்திய ரயில்வேயில் இருந்து உங்களுக்கு அலெர்ட் வந்துவிடும்! எப்படி அதனை ஆக்டிவேட் செய்வது என்பது குறித்து கீழே படியுங்கள்!

இறங்குமிடங்களை தவறவிடும் பயணிகள்
பேருந்துகளில் செல்லும்போது கூட நாம் வெளியே தெரியும் கடைகளில் அல்லது பலகைகளில் இருக்கும் ஊர்களின் பெயரை படித்து இருக்குமிடம் தெரிந்து கொள்ளலாம். அல்லது உங்களது போன்களில் கூகிள் லொக்கேஷன் செக் செய்து பார்க்கலாம். ஆனால் ரயில் பயணத்தில் நீங்கள் அவ்வாறு செய்ய முடியாது. ஜன்னல் வெளியே கடைகளையும் பார்க்க முடியாது. எதிர்பார்த்த நேரத்தில் நமது போன்களில் சிக்னலும் கிடைப்பது இல்லை. ஆனால் நீங்கள் இந்த "இலக்கு எச்சரிக்கை எழுப்பும் அலாரம்" என்ற வசதியை ஆக்டிவேட் செய்தால் போதும். போன் கால் உங்களை எழுப்பிவிடும் பயணிகளே.

இலக்கு எச்சரிக்கை சேவைகளின் அம்சங்கள்
· இந்திய ரயில்வே இரவு 11 மணி முதல் காலை 7 மணி வரை இலக்கு எச்சரிக்கை சேவைகளை வழங்குகிறது.
· நீங்கள் இறங்க வேண்டிய ரயில் நிலையம் வருவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பு இது உங்களை எழுப்புகிறது.
· இலக்கு எச்சரிக்கை இரண்டு வகைகளாக இருக்கலாம்: இலக்கு எச்சரிக்கை அழைப்பு மற்றும் எழுந்திருத்தல் அலாரம்.
· இந்த வசதி நீண்ட தூர ரயில்களுக்கு மட்டுமே பொருந்தும்.
· இந்த சேவையை பெற நீங்கள் RAC அல்லது உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளை வைத்திருப்பது மிக அவசியம்

ஓடும் ரயில்களில் இலக்கு எச்சரிக்கை அழைப்பை எவ்வாறு அமைப்பது?
இது மிகவும் எளிதான செயலாகும். பயணிகள் மூன்று வழிகளில் ஓடும் ரயில்களில் இலக்கு எச்சரிக்கையை அமைக்கலாம்: குறுகிய செய்தி சேவை (SMS), வாடிக்கையாளர் சேவை நிர்வாகிகளின் உதவியுடன் ரயில்வே விசாரணை சேவை மற்றும் IVR வழியே அலெர்ட்டை பெறுவது ஆகும்.

போன் கால் மூலம் அலெர்ட்டை பெற பின்வருமாறு செய்யுங்கள்
· உங்களது மொபைல் ஃபோனில் இருந்து 139 ஐ டயல் செய்யவும்.
· வாடிக்கையாளர் நிர்வாகியுடன் நீங்கள் பேச விரும்பும் உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.
· ரயில்வே விசாரணை சேவையுடன் பேசத் தேர்வு செய்யவும். உங்களது PNR எண்ணை ரயில்வே விசாரணை சேவை நிர்வாகியுடன் பகிரவும்.
· உங்கள் மொபைல் எண்ணை மீண்டும் உறுதிப்படுத்தி, உங்களுக்கான எச்சரிக்கை அழைப்பை அமைக்கும்படி அவர்களிடம் கேளுங்கள். உங்கள் எச்சரிக்கை அழைப்பு குறித்து நிர்வாகி உங்களுக்கு உறுதியளிப்பார்.
நீங்கள் இறங்குமிடம் வருவதற்கு முன் உங்களுக்கு போன் கால் நிச்சயம் வரும்.

IVR மூலம் அலெர்ட்டை பெற பின்வருமாறு செய்யுங்கள்
· உங்கள் மொபைல் ஃபோனில் இருந்து 139 ஐ டயல் செய்யுங்கள்.
· உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.
· IVR மெனுவிலிருந்து 7ஐ அழுத்தவும்.
· இலக்கு விழிப்பூட்டலுக்கு 2ஐ அழுத்தவும். உங்களிடம் 10 இலக்க PNR எண் கேட்கப்படும்.
· டிக்கெட்டின் PNR எண்ணை உள்ளிடவும்.
· நீங்கள் எச்சரிக்கை அழைப்பைப் பெற விரும்புகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த 1ஐ அழுத்தவும்.
அதே போல எஸ்எம்எஸ் மூலம் அலெர்ட்டை பெற ALERT என டைப் செய்து 139க்கு SMS அனுப்பவும்.
இதே போல நீங்கள் வேக்-அப் அலாரம் சேவையையும் ஆக்டிவேட் செய்து கொள்ளலாம். இது பயனுள்ள தகவல் தானே, இனி நீங்கள் பயமின்றி இரவு நேரத்தில் ரயில் பயணத்தில் உறங்கலாமே!