» »கழுகுமலை - 1000 வருட வரலாற்றுச் சின்னம்.

கழுகுமலை - 1000 வருட வரலாற்றுச் சின்னம்.

Written By: Staff

கோவில்பட்டியிலிருந்து சங்கரன்கோவில் செல்லும் வழியில் இருக்கும் ஒரு சிற்றூர் கழுகுமலை. இந்த சிற்றூரில் இருக்கிறது ஆயிரம் வருடம் பழமையான கோவில், சமண படுகைகள்; அக்கால பாண்டியர்கள் மற்றும் சமண மதத்தின் அடையாளமாக இக்கோவில்கள் இருக்கின்றன.

Vettuvan

PC : Balajijagadesh

வெட்டுவான்கோயில்

இக்கோவில், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கலைநயம் மிக்க கோயிலாகும். பாண்டிய மன்னர்களால் 8ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அழகிய சிற்பங்களைக் கொண்ட இக்கோயில் முழுவதுமாக முடிக்கப்படவில்லை. சிற்பங்களும், செதுக்கல்களும் பாண்டியர்களின் காலத்தை அழகாய் பிரதிபலிக்கிறது. இக்கோவிலின் தனித்தன்மை தட்சிணாமூர்த்தி கடவுள் மிருதங்கத்தோடு நமக்கு காட்சி தருவது. இதில் என்ன தனித்தன்மை ? தட்சிணாமூர்த்தி எப்போதும் வீணையோடுதான் காட்சி தருவார். இந்தியாவிலேயே, இந்தக் கோவிலில் மட்டும்தான் தட்சிணாமூர்த்தி ஒரு தாள வாத்தியத்தோடு வீற்றிருக்கிறார்.

வரலாற்று ஆய்வாளார்கள், இக்கோவிலின் வடிவமைப்பை, கட்டுமானத்தைப் புகழ்பெற்ற எல்லோரா கோவிலோடும், காஞ்சி கைலாசநாதர் கோவிலோடும் ஒப்பிடுகிறார்கள்.

kazhugumalai

PC : Booradleyp

கழுகாசலமூர்த்தி திருக்கோயில்

இக்கோவிலின் பிரதான கடவுள் முருகன். திராவிடிய கட்டுமானத்தின் எடுத்துகாட்டாக விளங்கும் இக்கோவில் 18'ஆம் நூற்றாண்டில் விரிவுபடுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. கோவிலின் கருவறைக்குத் தூண்கள் கொண்ட மண்டபம் வழியாக செல்ல வேண்டும். தெப்பக்குளம் கோவிலின் வெளியே உள்ளது. பெரும் பாறையில் செதுக்கப்பட்ட இக்கோவிலில் முருகன் ஆறு கைகளுடன், மயிலின் மீது அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இதுதவிர, வள்ளி மற்றும் தெய்வானை தெய்வங்களுக்குத் தனிக்கோவில்கள் இருக்கின்றன. பொதுவாக, முருகன் கோவிலில், மயில் வலப்புறம் நோக்கி இருக்கும் இங்கு மட்டும்தான் இடப்புறம் நோக்கி காட்சியளிக்கிறது.

Jaina aboda

PC : Balajijagadesh

சமணப் படுகைகள்

கழுகுமலையின் பொக்கிஷம் எனப்படுவது இங்குள்ள சமணப் படுகைகள். சமணர்களின் முக்கியப்பள்ளிகளுள் ஒன்றாக விளங்கும் இவ்விடம், மலையின் சரிவில், சமண தீர்த்தங்கரர் பலரின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 150க்கும் மேற்பட்ட சிற்பங்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ச‌மணர்கள் தங்கள் குரு, தாய், தந்தை, மகள் ஆகியோரின் நினைவாக இங்கு தீர்த்தங்கரர் சிற்பங்களை உருவாக்கியுள்ளனர். இச்சிற்பங்களின் கீழே அவற்றை உருவாக்கியவரின் பெயரும் பொரிக்கப்பட்டுள்ளது. இச்சிற்பங்கள் பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் தோற்றுவிக்கபட்டவை என்று நம்பப்படுகிறது.

இந்த சமணப் படுகைகளை தமிழ் நாடு தொல்லியல் துறை கண்காணித்தும் பராமரித்தும் வருகின்றது. சமீபகாலமாக இந்த இடம் சுற்றுலா பயணிகள் மத்தியில் புகழ்பெற்று, ஆர்வமாய் வருகின்றனர்.

தமிழ் நாட்டில் இருந்து கொண்டு இப்பேற்பட்ட அரிய வரலாற்து சின்னத்தை நாம் பார்க்காமல் இருக்கலாமா ?

இப்போதே பெட்டியைக் கட்டுங்கள் கோவில்பட்டிக்கு.

கோவில்பட்டியில் தங்கும் விடுதிகள் இருக்கின்றன. இல்லை திருநெல்வேலியிலிருந்தும் செல்லலாம். அதிகபட்சம் ஒரு நாள் அல்லது 4-5 மணி நேரத்தில் ஒரு குட்டி சுற்றுலாவிற்கு ஏற்ற இடம் கழுகுமலை.