
தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் அண்டம் காக்கும் கடவுளாகப் போற்றப்படுபவர் ஆழ்வான் என்ற விஷ்ணு. ஆழ்வான் என்ற சொல் சூரியனைக் குறிக்கும் சொல்லாகும். வேத காலத்தில் சூரியனோடு தொடர்புடைய தெய்வமாக விஷ்ணு போற்றப்படுகிறார். இவரை முதற் கடவுளாக வழிபடும் சமயம் வைணவ சமயம் ஆகும். இந்தியா முழுவதிலும் இந்த விஷ்ணு திருத்தலங்கள் உள்ளன. இவற்றை விடுத்து மேலும் பல பகுதிகளில் ஆழ்வார்க்கு பிரசிதிபெற்ற கோவில் உள்ளது. அப்படியொரு கோவில் தான் விரும்பியவரை மணமுடிக்க வைக்கும் நின்ற நாராயணப் பெருமாள் கோவில். வாங்க, எங்கே ? எப்படி உள்ளது என பார்க்கலாம்.

எங்கே உள்ளது ?
விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு நின்ற நாராயணப் பெருமாள் திருக்கோவில். விருதுநகரில் இருந்து ஆமத்தூர், கரிசெரி வழியாக சுமார் 24 கிலோ மீட்டர் பயணித்தாலும், அல்லது சிவகாசியில் இருந்து 4 கிலோ மீட்டர் பயணித்தாலும் இக்கோவிலை அடையலாம்.

கோவில் சிறப்பு
பெருமாளின் மங்களாசாசனம் அடைந்த 108 திவ்ய தேசங்களில் இக்கோவில் 91வது திவ்ய தேசமாகும். தங்காலமலை மேல் அமைந்துள்ள இது குடைவரைக் கோவிலாகும். இக்கோவில் அமைந்துள்ள மலையின் மீதே சிவன் மற்றும் முருகனுக்குக் கோவில்கள் உள்ளன. பெருமாளின் சன்னதியில் ஸ்ரீதேவி, பூமாதேவி, நீளாதேவி, ஜாம்பவதி ஆகிய நான்கு தாயார்கள் உள்ளனர். ஜாம்பவதியை இத்தலத்தில் வைத்தே பெருமாள் திருமணம் செய்தார்.

திருவிழா
பெருமாளுக்கு உகந்த சிறப்பு தினமான வைகுண்ட ஏகாதசியன்று மாபெரும் அளவிலான விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பெருமாளுக்குச் சிறப்பு அலங்காரமும், சிறப்பு பூஜைகளும் செய்யப்படுகிறது.

நடைதிறப்பு
அருள்மிகு நின்ற நாராயணப் பெருமாள் கோவில் நடை காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணியில் இருந்து இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

வழிபாடு
மனதிற்கு விருப்பமானவர்களை திருமணம் செய்ய விரும்புவோர் இக்கோவிலில் வழிபடுவதன் மூலம் நினைத்த காரியம் நிறைவேறும். திருமணத் தடை உள்ளவர்களும் கூட இத்தலத்தில் உள்ள நான்கு தாயார்களையும் வழிபடுவது நல்லது.

நேர்த்திக்கடன்
வேண்டிய காரியம் நிறைவேறியதும் பெருமாள் மற்றும் அம்மையார்களுக்கு புது ஆடைகள் சாற்றி, சிறப்பு அபிஷேகம் செய்கின்றனர். மேலும், கோவில் வரும் பக்தர்களுக்கு அன்னம் படைத்து தங்களுது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.

தோஷம் நீக்கும் தீர்த்தகுளம்
நின்ற பெருமாள் கோவில் தலத்தின் ஒரு பகுதியில் அமைந்துள்ள தீர்த்தக் குளத்தில் நீராடி முருகன் சன்னதியை சுற்றிவர சர்வ தோஷங்களும் நீங்கும் என்பது தொன்நம்பிக்கை.

கோவில் வரலாறு
நாராயணன் மனைவிகளான ஸ்ரீதேவி, பூமாதேவி, நீளாதேவி ஆகிய மூன்று தேவியாருக்கும் இடையே யார் உயர்ந்தவர் என்ற சர்ச்சை ஏற்பட்டது. அப்போது தானே சிறந்தவள் என நிரூபிக்க தங்காலமலை என்னும் பகுதிக்கு வந்த ஸ்ரீதேவி செங்கமல நாச்சியார் என்னும் பெயரில் படும் தவம் இருந்தார். ஸ்ரீதேவியின் தவத்தினால் மகிழ்ச்சியடைந்த பெருமாள், இவளே சிறந்தவள் என ஏற்றுக் கொண்டார். இதனாலேயே இத்தலம் திருத்தங்கல் என பெயர்பெற்றது.

எப்படிச் செல்வது ?
சென்னையில் இருந்து விருதுநகருக்கு திருநெல்வேலி எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் என ஏராளமான ரயில் சேவைகள் உள்ளன. மதுரை விமான நிலையம் விருதுநகரின் அருகில் உள்ள விமான நிலையமாகும். விருதுநகரில் இருந்து பேருந்து அல்லது தனியார் வாகனம் மூலம் புளிச்சகுளத்தில் உள்ள அருள்மிகு பஞ்சமுக விநாயகர் கோவிலை அடையலாம்.