» »என்ட கேரளத்தில் அர்த்தமுள்ள திரிசூர்! அப்படி என்னதான் இங்க இருக்கு ?

என்ட கேரளத்தில் அர்த்தமுள்ள திரிசூர்! அப்படி என்னதான் இங்க இருக்கு ?

Written By: Sabarish

கேரள மாநிலத்தில் உள்ள மாநகரமாகட்டும், சிறிய கிராமங்கள் ஆகட்டும் அது கடவுளின் சொந்த நாடு என்ற மணிமகுடத்தை சுமந்துகொண்டு மிடுக்குடன் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன. கேரளாவின் பதினான்கு மாவட்டங்களான காசர்கோட், கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், பாலக்காடு, திரிசூர், எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம் என்று அனைத்துமே தன்னளவிலே அற்புதமான சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகின்றன. இதில், திரிசூர் முழுக்க முழுக்க அர்த்தமுள்ள சுற்றுலாத் தலங்களை தன்னகத்தே கொண்டுள்ளது என்றால் அது மிகையாகாது. அப்படி என்னதான் இங்க இருக்கு என தெரியுமா ?. திரிசூரில் பல மியூசியங்கள் அமைந்துள்ளன. இவை ஒவ்வொன்றுமே அதற்கெ தனிச் சிறப்புகளையும் கொண்டுள்ளது. சரி வாருங்கள் அந்த அருங்காட்சியகங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.

ஸ்டேட் மியூசியம்

ஸ்டேட் மியூசியம்


திரிசூர் ஸ்டேட் மியூசியம் என்று அழைக்கப்படும் இந்த அரசு அருங்காட்சியகம் 1885-ஆம் ஆண்டிலேயே உருவாக்கப்பட்டதாகும். 13.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அருங்காட்சிக வளாகம் ஓய்வாக நடை பயிலுவதற்குக்கூட ஏற்ற தலமாகும். அருங்காட்சியகக் கட்டிடம் அவ்வளவு பெரியதாக இல்லாவிட்டாலும் இங்கு பல்வேறு காலகட்டங்களை சேர்ந்த வரலாற்று பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. கதகளி நடனச்சிலைகள், உலோகச்சிற்பங்கள் மற்றும் பாரம்பரிய கேரள விளக்குகள் போன்றவற்றை இங்கு பார்த்து ரசிக்கலாம். மேலும், பலவிதமான கேரள பாரம்பரிய ஆபரணங்கள், விசேஷமான கற்கள் மற்றும் பதனம் செய்யப்பட்ட அழகிய பட்டாம்பூச்சி வகைகள் போன்றவையும் இங்கு அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அன்றும் இன்றும் கேரளாவின் அடையாளங்களாக திகழும் பல பாரம்பரிய அம்சங்களை இந்த அருங்காட்சியகத்தில் ஒரு சுற்று வருவதன் மூலமே தரிசித்து விடலாம். நகரின் மையத்திலேயே உள்ள இந்த அரசு அருங்காட்சியகத்துக்கு எளிதில் சென்றடையலாம்.

Akhilan

ஷக்தன் தம்புரான் அரண்மனை

ஷக்தன் தம்புரான் அரண்மனை


ஒரு காலத்தில் வடகேச்சிர கோவிலாகம் என்று அழைக்கப்பட்ட இந்த ஷக்தன் தம்புரான் அரண்மனையானது திரிசூர் நகரத்தை உருவாக்கிய அப்பன் தம்புரான் வாழ்ந்த அரண்மனையாகும். கொச்சி ராஜவம்சத்துக்கு சொந்தமாக இருந்த இந்த அரண்மனையை 1795-ஆம் ஆண்டில் ஷக்தன் தம்புரான் கேரள-டச்சு பாணியில் புதுப்பித்துள்ளார். 2005ம் ஆண்டில் இந்த அரண்மனையானது ஒரு அருங்காட்சியகம் போன்று மாற்றப்பட்டுள்ளது. இங்கு தம்புரான் காலத்திய பல நினைவுப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. திப்பு சுல்தான் போன்ற பிரபல வரலாற்று ஆளுமைகள் இந்த அரண்மனைக்கு பயணம் செய்ததற்கான ஆதாரங்களும் இங்கு காணப்படுகின்றன. இங்குள்ள காட்சிக்கூடத்தில் பல செப்புச்சிலைகள், பளிங்குச்சிலைகள், புராதன நாணயங்கள் மற்றும் கொச்சி ராஜவம்சத்தை சேர்ந்த சில அரிய ஆவணங்கள் போன்றவற்றைப்பார்க்கலாம்.

Er.jjoy

ஆர்க்கியாலஜிகல் மியூசியம்

ஆர்க்கியாலஜிகல் மியூசியம்


திரிசூர் ஆர்க்கியாலஜிகல் மியூசியம் என்றழைக்கப்படும் இந்த தொல்லியல் அருங்காட்சியகம் 1938-ம் ஆண்டிலேயே நிறுவப்பட்டு பின்னர் 1975ம் ஆண்டில் நாம் தற்போது பார்க்கும் ஒருங்கிணந்த வளாகமாக மாற்றப்பட்டிருக்கிறது. அச்சமயம் தனியாக இருந்த புகைப்பட காட்சிக்கூடமும் தொல்லியல் காட்சிக்கூடமும் ஒன்றிணைக்கப்பட்டு புதிய ஒழுங்கு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த அருங்காட்சியகத்துக்கு பயணம் செய்வதன் மூலம் வரலாற்றில் பின்னோக்கி பயணிக்கும் அற்புத அனுபவத்தை பார்வையாளர்கள் பெறலாம். 7ம் நூற்றாண்டு வரை நீளும் பல அரிய ஏட்டுப்பிரதிகள், தொல்பொருள் மிச்சங்கள் மற்றும் கற்சிலைகள் இந்த மியூசியத்தில் பாதுகாக்கப்படுகின்றன. பொதுவாக இந்த அரும்பொருட்கள் யாவுமே கேரள பகுதியிலிருந்து திரட்டப்பட்டவையாக இருந்தபோதிலும், பெரும்பாலானவை திரிசூர், வயநாட் மற்றும் பாலக்காட் பகுதிகளிலிருந்து பெறப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Arjuncm3

ஆர்க்கியாலஜிகல் மியூசியம்

ஆர்க்கியாலஜிகல் மியூசியம்


இந்த அருங்காட்சியக கட்டிடத்தின் வடிவமைப்பும்கூட கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய கலையம்சங்கள் கலந்து தோற்றமளிப்பதையும் பார்த்து ரசிக்கலாம். பலவித வரலாற்று அம்சங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முக்கியமான அருங்காட்சியகங்களில் ஒன்று எனும் பெருமையையும் இது பெற்றுள்ளது. திரிசூர் வனவிலங்கு காட்சியகம் அமைந்திருக்கும் வளாகத்திலேயே இந்த ஆர்க்கியாலஜிகல் மியூசியம் இடம் பெற்றுள்ளது.

Arjuncm3

கேரளா கலாமண்டபம்

கேரளா கலாமண்டபம்


கேரளத்து கலையம்சங்களையும் பாரம்பரியத்தையும் வளர்த்து பரப்பும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள கலாச்சார மையமே இந்த கேரளா கலாமண்டபம் ஆகும். நுண்கலை பயிற்சிக்கு என்றே அமைக்கப்பட்டுள்ள இந்த கல்வி மையத்தில் ஆர்வமுள்ள மாணவர்கள் தங்கி பயிலும்படியான கலைக்கல்வி அளிக்கப்படுகிறது. 1930 ம் ஆண்டில் பத்மபூஷன் வல்லத்தோள் நாராயண மேனன் அவர்களால் கட்டமைக்கப்பட்ட இது கலைப்பயிற்சிக்கூடம் எனும் வரையறைக்கும் அப்பாற்பட்ட ஒரு சமூக அடையாளத்தை பெற்றுள்ளது. விருப்பமுள்ள யாவருக்கும் தன் கதவுகளை விரிய திறக்கும் இந்த கலாமண்டபம் கேரள மாநிலத்தின் சுற்றுலாத்துறையோடு இணைந்து செயல்படுவதும் குறிப்பிடத்தக்கது. கேரள பாரம்பரியத்தின் வழக்கொழிந்துபோன பல கலை வடிவங்களை நம் கண் முன்னால் நிறுத்தும் உன்னதமான சாதனையை இந்த கலாச்சார மையம் சாதித்துள்ளது.

Arayilpdas

சங்கர சமாதி

சங்கர சமாதி


அத்வைத ஞானியான ஸ்ரீ ஆதி சங்கரர் சமாதியடைந்த தலமே இந்த சங்கர சமாதி ஆகும். கி.பி 820 ம் ஆண்டில் தன் 32வது வயதில் ஆதிசங்கரர் திரிசூரில் சமாதியடைந்ததாக சொல்லப்படுகிறது. அதே தலத்தில் ஒரு சிறு கோவிலும் பக்தர்கள் வழிபடுவதற்காக ஆதிசங்கரின் அழகான உருவச்சிலையும் நிறுவப்பட்டுள்ளது. இயற்கை எழில் நிரம்பிய சூழலில் அமைந்திருக்கும் இந்த தலம் ஆதி சங்கரரின் ஆன்மீக பிரகாசத்தை வெளிப்படுத்தும் விதத்தில் காட்சியளிக்கிறது. ஆன்மீகத்தில் அதிக நாட்டமில்லாதவராயினும் சுற்றுலாப்பயணிகள் இந்த தலத்தின் எழிலை ரசிப்பதற்காகவாவது இங்கு பயணம் செய்வது அவசியம். உணர்வுகளை சாந்தப்படுத்தும் அசாதாரண சூழல் அதிர்வை இப்பகுதியில் கண்டிப்பாக இப்பகுதியில் உணரமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Prof tpms

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்