Search
  • Follow NativePlanet
Share
» »ஏனுங்க, கொஞ்சம் கேளுங்க, இது கோயம்புத்தூர் டூருங்க...!

ஏனுங்க, கொஞ்சம் கேளுங்க, இது கோயம்புத்தூர் டூருங்க...!

நம்ம தமிழ்நாட்டு மக்கள் பேசுரது என்னமோ தமிழ் மொழி தான். ஆனா, அது ஒவ்வொரு ஊருக்கும் டிசைன் டிசைன்னா வேறுபடும். உதாரணத்துக்கு சென்னை தமிழுக்கும், நெல்லை தமிழுக்கும் வித்யாசம் இருக்குறதில்லையா, அந்த மாறித்தான். இங்க எத்தன வித்யாசமா பேசினானும், அனைத்தையும் கடந்து மரியாதையும், கொஞ்சும் தமிழும் பேசுரது கோவைத் தமிழ் தானே. கொங்கு நாட்டுத் தமிழ் பத்தி உங்களுக்குச் சொல்லவா வேணும். "கொங்கு தமிழ் பொண்ண பாத்த பூக்களுக்கும் மீச வரும், சிறுவாணி தண்ணி குடிச்சா செந்தமிழும் நாவில் புரளும் டா"ன்னு கோயம்புத்தூரோட பெருமைகள்ல சொல்லுவாங்க. இந்த கோயம்புத்தூருக்கு எத்தனையோ முறை நீங்க வந்திருப்பீங்க. வெள்ளியங்கிரி, மருதமலைன்னு சுத்தி பாத்துட்டு அப்படியே கிளம்பிருவீங்க. ஆனா, கோயம்புத்தூருல நீங்க பாக்க வேண்டிய முக்கியமான இடங்கள மறந்துடுரீங்க. மறுபடியும் கோவைக்கு போறக்கூடிய வாய்ப்பு கிடைச்சா தவறாம எங்கவெல்லாம் சுற்றி முழு அலகையும் ரசிச்சுட்டு வரலாம்னு பாக்கலாம் வாங்க.

வைதேகி அருவி

வைதேகி அருவி

கோவை தொண்டாமுத்தூர் அருகேயுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதியில் உள்ளது இந்த வைதேகி அருவி. தொள்ளாயிரம் மூர்த்தி கண்டி என்பதுதான் இதோட உண்மையான பெயர். 1984-ல வெளிவந்த வைதேகி காத்திருந்தாள் படக் காட்சிகள் இங்க எடுக்கப்பட்டதுல இருந்து வைதேகி அருவின்னே இதுக்கு பேரு வச்சுட்டாங்க நம்ம மக்கள். இந்த அருவிக்கு செல்ல கோயம்புத்தூர், காந்திபுரத்துல இருந்து நரசீபுரம் வரைக்கும் பேருந்து வசதி இருக்கு. அங்கிருந்து 5 கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதியில் நடக்க வேண்டும். அங்க, போளுவாம்பட்டி வனத்துறையினர் கிட்ட அனுமதி வாங்குன பின்பே அருவிக்கு செல்ல முடியும்.

VasuVR

பட்டீஸ்வரர் கோவில்

பட்டீஸ்வரர் கோவில்

கோவையில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பேரூர் பட்டீஸ்வரர் கோவில். நொய்யல் ஆற்றங்கரையில் உள்ள இக்கோவில் கரிகால சோழனால் கட்டப்பட்டது என்பது வரலாற்று சிறப்பு மிக்கது. இங்குள்ள நடன மண்டபம் சுற்றுலா பயணிகளை கவரக்கூடிய வகையில் அன்றைய காலகட்டத்திலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது. மண்டபத்தில் உள்ள எட்டு தூண்களிலும் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்கள் மற்றும் கல் சங்கிலி, சுழலும் தாமரை ஆகியவை வரலாற்று சிறப்புடையவையாக உள்ளன.

Ssriram mt

வெள்ளியங்கிரி கோவில்

வெள்ளியங்கிரி கோவில்

கோவையில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவுல மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு அங்கத்தில் உள்ளது வெள்ளியங்கிரி கோவில். அடிவாரத்தில் உள்ள கோயிலில் முருகனை தரிசிக்கலாம். அடிவாரத்தில் இருந்து 6 மலைகளைக் கடந்து 6 ஆயிரம் அடி உயரமுள்ள 7-வது மலையான கிரிமலையில் உள்ள பஞ்சபூத லிங்கத்தை தரிசிப்பது அவ்வளவு பரவசமானது. நண்பர்களுடன் சாகச பயணம் செய்ய விரும்புரவங்க தாராளமா இந்த மலையை தேர்வு செய்யலாம். மலைக் காலம் தவிர மற்ற அனைத்து காலகட்டத்திலயும் பசுமைச் சூழல் மிக்கதா ரம்மியமான காட்சிகளை நம் கண்களுக்கு விருந்தளிக்கும். இரவில் ஏறினால் களைப்பு தெரியாது. மறுநாள் மதியத்துக்குள் அடிவாரம் வந்தடைந்து விடலாம். சில சமயங்களில் யானை, செந்நாய் எல்லாம் பாதையில் குறுக்கிடும். அதற்கு ஏற்றவாறு முன்னெச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்.

Silvershocky

கோவைக் குற்றாலம்

கோவைக் குற்றாலம்

கோவையில் இருந்து 32 கிலோ மீட்டர் தொலைவில் மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது கோயம்புத்தூரின் சிறப்புவாய்ந்த சுற்றுலாத் தலமான கோவைக் குற்றாலம். மலைகளுக்கு இடையே ரம்மியமாக அமைந்த அருவியில், வழிந்தோடும் பாதையில் என நூற்றுக்கும் மேற்பட்டோர் எவ்வித இடையூறும் இன்றி குளிக்கலாம். கண்காணிப்பு கோபுரம், தொங்குபாலம், உயர்ந்த மரத்தில் வீடு, சாடியாறு அருவி, பூண்டி வெள்ளியங்கிரி மலையின் ஏழாவது மலையான கிரிமலை, சிறுவாணி மலைச்சாரலை காணலாம். கோவையில் இருந்து சாடிவயல் வரை அரசு பேருந்து வசதி உள்ளது. அங்கிருந்து வாடகைக் கார்கள் மூலம் எளிதில் கோவை குற்றாலத்தை அடைந்து விடலாம். திங்கட் கிழமையைத் தவிர மற்ற அனைத்து நாட்களுடே கொட்டும் அருவில் கொண்டாடி மகிழாலாம்.

VasuVR

பெதஸ்தா மண்டபம்

பெதஸ்தா மண்டபம்

சிறுவாணி அணை செல்லும் வழியில் கோவை காருண்யா பல்கலைக் கழக வளாகத்தில் பெதஸ்தா மண்டபம் உள்ளது. இங்கு பெதஸ்தா குளம் மற்றும் இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் சிலைகள் உள்ளன. மண்டபத்தில் வழிபாடு நடத்தலாம். குழந்தைகள் விளையாட தனியே பார்க்கும் இருக்கு.

சிறுவாணி அணை

சிறுவாணி அணை

கோவையில் இருந்து 51 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிறுவாணி அணை நாட்டிலேயே சுவைமிக்க தண்ணிக்கு பெயர்போனதுன்னா பாருங்களேன். மலைப் பகுதியில் அமைந்துள்ள இந்த அணைக்கு அடிவாரம் வரைக்கும் பேருந்து வசதி இருக்கு. அங்கிருந்து அணைக்கு சொந்த வாகனத்திலேயே சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர். கோவைக்கு குடிநீர் வழங்கும் நீரேற்று நிலையம், அடர் பசுமை நிறைந்த வனப்பகுதியில் அமைந்துள்ள அணை, முக்தியாறு, பட்டியாறு, வெள்ளிங்கிரி ஓடை, சிறுவாணி ஓடை ஆகியவற்றை ஒருங்கே கண்டு ரசிக்கலாம். அதுமட்டும் இல்லைங்க, மான்கள், காட்டெருமைகள், யானைகள் கூட்டம் கூட்டமாக அணைக்கு நீர் அருந்த வருவதையும் காணம் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். அணை கேரளாவிலும், அணை வரையிலான வனப்பகுதி தமிழகத்திலும் உள்ளதால, அணைக்கு செல்ல இரு மாநில வனத்துறையினரிடம் முன் அனுமதி பெறுவது கட்டாயம்ங்க. கோவையில் இருந்து கேரளா பாலக்காடு, மன்னார்காடு வழியாக சிறுவாணி அணைக்கு செல்ல அனுமதி பெற அவசியமில்லை.

Basheer Olakara

பரளிக்காடு வனச்சுற்றுலா

பரளிக்காடு வனச்சுற்றுலா

கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள காரமடையில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் உள்ளது காரமடை வனப்பகுதி. இப்பகுதியில் மலைவாழ் மக்களுடன் இணைந்து சுற்றுச்சூழல் சுற்றுலாவை நடத்தி வருகிறது காரமடை வனத்துறை. பரிசல் பயணம், மதிய உணவு, ஆற்று குளியலுக்கு பெரியவர்களுக்கு 300 ரூபாய் வரையிலும், சிறியவர்களுக்கு 200 ரூபாய் வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படும். கோவையில் இருந்து காரமடை வழியாக இரண்டரை மணி நேர பயணத்தில் பரளிக்காடு பரிசல் துறையை அடைந்து விடலாம். காலை 10 மணியளவில் பூச்சிமரத்தூரில் உள்ள பரிசல்துறையில் தயாராக இருக்க வேண்டும். அங்கு செல்ல பேருந்து வசதியெல்லாம் இல்லைங்க. சொந்தமா வாகனம் இருந்தா அதுலயே போகலாம், இல்லைன்னா வாடகைக் கார்கள் மூலமாகவோ செல்லலாம்.

முன்பதிவு

குறுகலான மலைப்பாதையில் பயணித்தால் அணைக்கட்டை ஒட்டி இருக்கும் பரளிக்காடு எனும் மலையோர கிராமத்தை சென்றடையலாம். இங்கு வாழும் பழங்குடியினர் நலனுக்காக வனத்துறையே வடிவமைத்தது தான் பரளிக்காடு பசுமைச் சுற்றுலா. இங்கு செல்ல வனத்துறை அலுவலரிடம் தொலைபேசியில் முன் பதிவு செய்ய வேண்டும். விடுமுறை தினங்கள் என்றால் கூட்டம் அதிகம் இருப்பதால் எண்ணிக்கையைப் பற்றி கவலை இல்லாமல் முன்பதிவு செய்து கொள்ளலாம். வார நாட்களெனில் குறைந்தது 40 நபர்கள் கொண்ட குழுவாக இருந்தால் மட்டுமே முன் பதிவு செய்வார்கள்.

பரிசல் பயணம்

ஆற்றங்கரையோர ஆலமரங்களில் நீண்ட ஊஞ்சல்கள் கட்டப்பட்டுள்ளன. குளிர் தருக்களின் கீழ் கயிற்றுக் கட்டில்கள் போடப்பட்டுள்ளன. சிறார்கள் ஊஞ்சலாடி மகிழ்கிறார்கள். காதலர்களும், தம்பதியர்களும் இதமான சூழலை அனுபவித்த வண்ணம் கயிற்றுக் கட்டில்களில் அமர்ந்து பேசிக் களிக்கிறார்கள். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் பரிசல்கள் வந்து சேர்கின்றன. வழிகாட்டி அனைவரையும் உற்சாகமாக கூவி அழைத்து அனைவருக்கும் 'லைஃப் ஜாக்கெட்டுகளை" அணிவிக்கிறார். சிந்தெடிக் பைபர்களினால் ஆன அகன்ற வட்டுக்களில் பயணம் தொடர்கிறது. கண்ணுக்கெட்டிய தூரம் மட்டும் தண்ணீரன்றி வேறில்லை. பரிசலோட்டி அணைக்கட்டின் வரலாற்றையும், ஆற்று மீன்களின் சுவையையும், மிருகங்கள் தண்ணீர் அருந்தவருவதையும் சொல்லிக்கொண்டே துடுப்பை போடுகிறார். என்னதான் நட்டாற்றில் பயணித்தாலும் வெயில் மண்டையைப் பிளக்கத்தான் செய்கிறது. சுற்றிலும் உயரம் குறைவான மலைகள் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

கிராமத்து உணவுகள்

பரிசல் மறுகரையை அடைந்ததும் பயணிகளின் ஆட்டமும் பாட்டமும் ஆரம்பமாகிறது. கொஞ்சம் பெரியவர்கள் வழிகாட்டியின் உதவியோடு குறுக்கும் நெடுக்குமாய் விழுந்து கிடக்கும் மரங்களில் ஏறி இறங்கி வனத்திற்குள் நுழைகிறார்கள். சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின் மதிய உணவு தயார் என்ற அறிவிப்பு வருகிறது. மீண்டும் பரிசல் ஏறி மறுகரைக்குச் சென்றால் மலைவாழ் மக்களே தயாரித்த சுவையான உணவு வகைகள் காத்திருக்கின்றன. பஃபே சிஸ்டம். நகர்ப்புறத்துக்காரர்களுக்கு கிராமத்து உணவுகளில் பிரியம் இருக்காது என்பதால் மெனுவில் வெஜ் பிரியாணி, சப்பாத்தி, தயிர்சாதம் என சமதர்மம் கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய மெனுவில் இருந்த கேப்பை களி உருண்டையும், அதற்குத் தொட்டுக்கொள்ள கொடுத்த கீரை கடைசலும் செம விருந்துதான்.

டிரெக்கிங்

சிறிய இளைப்பாறலுக்குப் பின் தொடங்குகிறது டிரெக்கிங். வனத்துறை வழிகாட்டி உதவியுடன் காட்டிற்குள் நடக்கத் துவங்குகிறோம். பரளிக்காடு வனம் அடர் வனம் அல்ல. இலகுவானது. பிரம்மாண்டமான மரங்களோ, முட்புதர்களோ, காட்டுக்கொடிகளோ வழிமறிக்காததால் நடை எளிமையாக இருந்தது. சாகச மனங்களுக்கு சற்று ஏமாற்றம்தான் என்றபோதும் குழந்தை குட்டிகளோடுச் செல்ல மிகவும் ஏற்ற சிக்கல்களில்லாத காட்டுப்பயணம்.

ஆற்றில் குளியல்

பிரயாணத்தின் இறுதிப் பகுதி அத்திக்கடவு ஆற்றில் ஆனந்தக் குளியல். காவியைக் கரைத்த மாதிரி செம்மண் நிறத்தில் கரைபுரண்டு வருகிறது ஆறு. காலம் தப்பி வந்த திடீர் மழையால் ஆற்றில் நல்ல வெள்ளம். படுகை முழுக்க யானை முதுகு போன்ற பிரம்மாண்டமான பாறைகள். நூற்றாண்டு உருளலில் கற்கள் அனைத்தும் தனக்கான தனிப்பொலிவை அடைந்திருக்கின்றன. நீந்திக் குளிக்க முடிகிற அளவிற்கு ஆழமில்லாத ஆறு. பாறைகள் வேறு அதிகம். ஒரு குத்துப்பாறையினைப் பிடித்துக்கொண்டு உடலை நீட்டிக்கொண்டால் நம்மைக் கழுவிக் கரைக்கும் ஆவேசத்துடன் தழுவிக்கொள்கிறது ஆறு.

Basheer Olakara

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more