» »சத்தீஸ்கர் காட்டுக்குள் ஒரு சாகசப்பயணம் போலாமா? #காட்டுயிர்வாழ்க்கை 8

சத்தீஸ்கர் காட்டுக்குள் ஒரு சாகசப்பயணம் போலாமா? #காட்டுயிர்வாழ்க்கை 8

Written By: Udhaya

இயற்கை எழில் அம்சங்களை பொறுத்தவரை இம்மாநிலத்தில் இல்லாததே இல்லை எனும் அளவுக்கு அனைத்தும் நிரம்பியுள்ளன. காட்டுயிர்வளம், வனப்பகுதி, மலைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் என்று இயற்கை ரசிகர்களை வசப்படுத்தும் சுற்றுலா அம்சங்களை இம்மாநிலம் தன்னுள் கொண்டிருக்கிறது. இங்குள்ள சில முக்கியமான நீர்வீழ்ச்சிகளாக சிதிரகொடே நீர்வீழ்ச்சி, திரத்கர் நீர்வீழ்ச்சி, தம்ரா கூமர் நீர்வீழ்ச்சி, மண்டவா நீர்வீழ்ச்சி, கங்கேர் தாரா, அகுரி நலா, கவர் காட் நீர்வீழ்ச்சி மற்றும் ராம்தாஹா நீர்வீழ்ச்சி போன்றவற்றை சொல்லலாம். புராதன சின்னங்கள் மற்றும் பாரம்பரிய பின்னணி கொண்ட கோயில்கள் போன்றவற்றையும் சட்டிஸ்கர் மாநிலம் உள்ளடக்கியுள்ளது.

நாகலாந்து காட்டுக்குள்ள ஒரு அழகிய பயணம் போலாமா? #காட்டுயிர்வாழ்க்கை 7

அவ்வளவாக வெளியுலகிற்கு தெரியவராத பல்வேறு இடங்கள் இந்த மாநிலத்தில் சுற்றுலாப்பயணிகளுக்காக காத்திருக்கின்றன. மல்ஹார், ரத்தன்பூர், சிர்பூர் மற்றும் சர்குஜா போன்ற ஸ்தலங்கள் இங்கு முக்கியமான புராதன தொல்லியல் ஸ்தலங்களாக அமைந்திருக்கின்றன. மேலும் இங்கு இருக்கும் பல காடுகளில் மிகவும் அரிய பொக்கிஷங்கள் மறைந்துள்ளன.

மண்டவா நீர்வீழ்ச்சி

மண்டவா நீர்வீழ்ச்சி

ஜக்தல்பூரிலிருந்து 31 கி.மீ தூரத்தில் NH-16 நெடுஞ்சாலையில் மண்டவா எனும் இடத்தில் இந்த மண்டவா நீர்வீழ்ச்சி அமைந்திருக்கிறது. 70 அடி உயரத்திலிருந்து செங்குத்தாக விழும் இந்த நீர்வீழ்ச்சி பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் அழகுடன் காட்சியளிக்கிறது. இந்த நீர்வீழ்ச்சியிலிருந்து விழும் நீர் ஒரு குளம் போன்ற நீர்த்தேக்கத்தில் சேகரமாகி பின்னர் கீழ்நோக்கி பாய்ந்து கங்கேர் ஆற்றில் கலந்தபிறகு மற்றும் இரண்டு நீர்வீழ்ச்சிகளை உருவாக்குகிறது. இவை திரத்கர் மற்றும் கங்கேர்தாரா என்று அழைக்கப்படுகின்றன. தட்டையான காட்சித்தளம் மற்றும் சமமான பாறை அமைப்புகள் இந்த நீர்வீழ்ச்சிக்கருகில் அமைந்திருப்பதால் சுற்றிலும் காணப்படும் இயற்கைக்காட்சிகளை பார்த்து ரசிக்க வசதியாக உள்ளது.

PC:Kumar Chitrang

கங்கேர் தாரா நீர்வீழ்ச்சி

கங்கேர் தாரா நீர்வீழ்ச்சி

கங்கேர் தாரா எனும் இந்த நீர்வீழ்ச்சி ஸ்தலம் கங்கேர்காடி தேசியப்பூங்காவின் உள்ளே ஜக்தல்பூர் நகரத்திலிருந்து 36 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது. பூங்காவின் நுழைவாயிலில் வனக்காவல் அதிகாரியின் அனுமதி மற்றும் சீட்டுகளை பெற்ற பிறகே இந்த ஸ்தலத்திற்கு விஜயம் செய்ய முடியும். குளிர்காலத்திலிருந்து கோடைக்காலம் வரை இப்பகுதிக்கு விஜயம் செய்யலாம். ஜூலையில் தொடங்கும் மழைக்காலத்தில் இந்த பூங்கா மூடப்படுவது குறிப்பிடத்தக்கது. கங்கேர் பள்ளத்தாக்கு பகுதிகளில் அமைந்திருக்கும் கங்கேர் தாரா எனும் இந்த நீர்வீழ்ச்சி கங்கேர் ஆற்றில் உருவாகிறது. மடிப்பு மடிப்பான பாறை அமைப்புகளோடு இந்த நீர்வீழ்ச்சிப்பகுதி காட்சியளிக்கிறது. இந்த பாறை மடிப்புகள் எரிமலைப்பாறை துருத்தல்களால் உருவாகியிருக்கலாம் என்று புவியியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.


Photo Courtesy:Kumar Chitrang

 கவர் காட் நீர்வீழ்ச்சி

கவர் காட் நீர்வீழ்ச்சி

கவர் காட் நீர்வீழ்ச்சி என்றழைக்கப்படும் இந்த இயற்கை நீர்வீழ்ச்சி ஹஸ்தோ ஆற்றில் உருவாகிறது. இது பைகுந்த்பூர் நகரத்திலிருந்து 40 கி.மீ தூரத்தில், தர்ரா எனும் கிராமத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது. 50-60 அடி உயரத்திலிருந்து விழும் இந்த நீர்வீழ்ச்சியை சுற்றிலும் பாறைகளும் காடுகளும் சூழ்ந்து காணப்படுகின்றன.

Photo Courtesy:Kumar Chitrang

பிலாஸ்பூர்

பிலாஸ்பூர்

தொல்பொருள் இடங்களும், கோவில்களும் இங்கு ஏராளமாக உள்ளன. அசனாக்மர் வனவுயிர் சரணாலயம் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் சுற்றுலா இடமாக இருக்கிறது. ஹஸ்தேவ் பங்கோ அணை, மல்ஹார் மற்றும் ரதன்பூர் தொல்பொருள் மையங்கள், தலாகிராம் எனப்படும் தியோரானி-ஜெதானி கோவில், பபிள் ஐலாண்ட் எனப்படும் கேளிக்கை பூங்கா என இங்கு ஏராளமான சுற்றுலாதளங்கள் இருக்கின்றன. பெரிய குளம் ஒன்றும், சமாதி ஒன்றும் பெல்பான் என்ற இடத்தில் உள்ளது. குடாகட் என்ற இயற்கை காட்சி நிரம்பிய இடமும், துறவிகள் நிறைந்த கபீர் சோபுதாரா என்ற இடங்களும் கூட புகழ்பெற்று விளங்குகின்றன. ஆப்ரா நதிக்கரையில் உள்ள இந்த மாவட்டத்தில் சொன்முடா என்ற மற்றொரு மலை சார்ந்த சுற்றுலா தளமும் உள்ளது.
Rajesh Tripathi

அசனாக்மர் வனவுயிர் சரணாலயம்

அசனாக்மர் வனவுயிர் சரணாலயம்

அழியக்கூடிய உயிரனிங்களான சிறுத்தைகள், பெங்கால் புலிகள், காட்டெருமைகள் ஆகியவை இங்கு உள்ளன. அதுமட்டுமின்றி சித்தல், வரிக்கழுதைப்புலி, கேனிஸ், கரடி, தோல், சம்பார் மான், நீள்கை, நான்கு கொம்பு மான், சிங்கரா ஆகிய விலங்குகளும் உண்டு. 557.55 சதுர கிமீ பரப்பளவில் உள்ள இந்த சரணாலயத்தில் ஏராளமான உயிரினங்கள் உள்ளன. பிலாஸ்பூருக்கு வடக்கே உள்ள இப்பகுதியில் மழைக்காலத்தில் மக்கள் நுழைய தடை உள்ளது. மத்திய பிரதேசத்தின் கன்ஹா சரணாலயம் கன்ஹா-அசனாம்கருடன் இணைக்கப்பட்டுள்ளது. சால், சாஜா, பிஜா, மூங்கில் ஆகிய தாவரங்களும் இங்கு காணப்படுகின்றன.

Ramanjogi

 சர்குஜா

சர்குஜா

வரலாற்றுப்பின்னணி மற்றும் பழங்குடி பாரம்பரியம் மட்டுமல்லாமல் பல்வேறு அம்சங்களுக்காக இந்த சர்குஜா மாவட்டம் சுற்றுலாப்பயணிகள் விரும்பி தேடிவரும் இடமாக விளங்குகிறது. புராதன சிதிலங்கள் மற்றும் கலைநயம் மிக்க சிற்பங்கள் போன்றவற்றை கொண்டுள்ள சில முக்கியமான ஸ்தலங்கள் இம்மாவட்டத்தில் அமைந்துள்ளன. இவை தவிர பல நீர்வீழ்ச்சிகளும் இங்கு காணப்படுகின்றன. இவற்றில் மைன்பாட் எனும் இடத்தில் உள்ள டைகர் பாயிண்ட் நீர்வீழ்ச்சி ஒன்றாகும். ராம்கர் மற்றும் சீதா பெங்ரா போன்ற இடங்களில் உள்ள குகைகளில் காணப்படும் வரலாற்று காலத்துக்கு முந்தைய ஓவியங்கள் பயணிகளின் ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளன. ராமர் தனது 14 ஆண்டுகால வனவாசத்தின்போது இந்த ராம்கர் பகுதியில் தங்கியிருந்ததாக உள்ளூர் புராணக்கதைகள் கூறுகின்றன.

Theasg sap

கலாச்சாரம்

கலாச்சாரம்


சுவா நடனம் எனும் மற்றொரு நடனக்கலை வடிவம் இளம்பெண்கள் தங்களுக்கு விருப்பமான எதிர்கால கணவர்களை கவர்வதற்காக ஆடுவது போல் நிகழ்த்தப்படுகிறது. மேலும் குபேரக்கடவுளை கவர்வதற்காகவும் இந்த சுவா நடனம் ஆடப்படுவதுண்டு. கர்மா நடனம் எனும் ஒருவகை நடனத்தில் ஆண் மற்றும் பெண் கலைஞர்கள் என இருதரப்பினருமே கலந்துகொண்டு ஆடுகின்றனர். இந்த நடனத்தின்போது கரம் எனும் மரத்தைபோற்றி பாடியபடி ஆடுகின்றனர். புனிதமான மரமாக கருதப்படும் இந்த ‘கரம்' மரத்திற்கு பல்வேறு பூஜைச்சடங்குகளையும் செய்விக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Pankaj Oudhia

கோர்பா

கோர்பா

மடவா ராணி, கன்கி, கொஸாகைகர், கெண்டாய் நீர்வீழ்ச்சி மற்றும் சைதுர்கர் போன்றவை கோர்பா மாவட்டத்தில் உள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களாகும். இங்குள்ள கோயில்கள் மற்றும் கோட்டைகள் போன்றவையும் சுற்றுலாப்பயணிகள் அவசியம் காண வேண்டிய சுவாரசிய அம்சங்களாக அமைந்திருக்கின்றன. இருப்பினும் இப்பகுதியில் பரவியிருக்கும் ரம்மியமான இயற்கை காட்சிகள் மற்ற யாவற்றையும் விட பயணிகளை வெகுவாக கவர்கின்றன. இங்குள்ள சைதுர்கர் கோட்டை ஒரு முக்கியமான வரலாற்று அம்சமாக அமைந்திருக்கிறது. நவராத்திரி திருநாளின்போது இங்கு யாத்ரீகர்கள் அதிகம் வருகைத் தருகின்றனர்.

Meemoprasad

மடவா ராணி மந்திர்

மடவா ராணி மந்திர்

மடவா ராணி மந்திர் என்று அழைக்கப்படும் இந்த கோயில் மடாவாராணி தெய்வத்துக்காக அமைக்கப்பட்டிருக்கிறது. இது கோர்பா சம்பா சாலையில் உள்ளது. ஒரு மலையின் உச்சியில் வீற்றிருக்கும் இந்த கோயிலில் ஒவ்வொரு வருடமும் நவராத்திரி திருவிழா வெகு விமரிசையாக உள்ளூர் மக்களால் கொண்டாடப்படுகிறது. உள்ளூர் கதைகளின்படி இந்த கோயிலுக்கு அருகிலுள்ள கல்மி மரங்களின் கீழே ஒரு வகை சோளம் வளர்ந்திருந்ததாகவும் அதனை விதையாக பயன்படுத்தி விவசாயத்தை துவங்கிய பின்னர் இப்பகுதி மக்கள் இந்த கோயிலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கத்துவங்கினர் என்றும் சொல்லப்படுகிறது. செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் இங்கு வருடாந்திர திருவிழா ஒன்றும் விமரிசையாக நடத்தப்படுகிறது.

கெண்டாய் நீர்வீழ்ச்சி

கெண்டாய் நீர்வீழ்ச்சி

ஒரு முக்கியமான பிக்னிக் ஸ்தலமாக விளங்கும் கெண்டாய் நீர்வீழ்ச்சி பிலாஸ்பூர்-அம்பிகாபூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கிறது. கோர்பாவில் உள்ள முக்கிய இயற்கை எழில் அம்சமாக இந்த நீர்வீழ்ச்சி புகழ் பெற்றுள்ளது. 75 அடி உயரத்திலிருந்து இந்த கெண்டாய் நீர்வீழ்ச்சி விழுகிறது. சுற்றிலும் அற்புதமான எழிற்காட்சிகள் இங்கு நிரம்பியுள்ளன. மெல்லும், புலிசித் புராதன குகைகள் எனும் மற்றொரு சுவாரசிய அம்சமும் இந்த நீரிவீழ்ச்சி ஸ்தலத்துக்கு அருகில் அமைந்துள்ளது.
cgtourism.choice.gov.in

சைதுர்கர் கோட்டை

சைதுர்கர் கோட்டை


இந்தியாவிலுள்ள இயற்கைக்கோட்டை அமைப்புகளில் ஒன்றாக பிரசித்தி பெற்றுள்ள இந்த சைதுர்கர் கோட்டை லஃபார்கர் என்றும் அழைக்கப்படுகிறது. சட்டிஸ்கர் மாநிலத்தில் உள்ள 36 கோட்டைகளில் இதுவும் ஒன்றாகும். பாலி எனும் இடத்திலிருந்து 25 கி.மீ தூரத்தில் இந்த சைதுர்கர் கோட்டை உள்ளது. பிரம்மாண்டமான இயற்கை சுவர்களை கொண்டிருப்பது இந்த கோட்டையின் சிறப்பம்சமாக கருதப்படுகிறது. இணைப்பதற்காக சிறிய அளவில் மட்டுமே ஆங்காங்கு செயற்கை சுவர்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. முதலாம் பிரித்விதேவா எனும் மன்னர் இந்த கோட்டையை கட்டியுள்ளார்.

Shri.ravindrabajpai

ஜஷ்பூர்

ஜஷ்பூர்

ஜஷ்பூர் மாவட்டம் முழுதும் அழகிய நீர்வீழ்ச்சிகள் நிரம்பியுள்ளதால் இயற்கை ரசிகர்களுக்கு பிடித்தமான எழில் அம்சங்களுக்கு இங்கு குறைவே இல்லை. ராஜ்புரி நீர்வீழ்ச்சி, கைலாஷ் குஃபா, தன்புரி நீர்வீழ்ச்சி, ராணி தஹ் நீர்வீழ்ச்சி, பிரிங்ராஜ் நீர்வீழ்ச்சி, கதீட்ரல் குன்குரி, தமேரா நீர்வீழ்ச்சி, குடியாராணி கி குஃபா, ஸ்னேக் பார்க், சொக்ரா அகோர் ஆஷ்ரம், பதல்கோலே அப்யாரண், குல்லு நீர்வீழ்ச்சி, சுரி நீர்வீழ்ச்சி, ராணி ஜூலா, பனே நீர்வீழ்ச்சி, ஹர தீபா, லோரோ காட்டி மற்றும் பேல் மஹாதேவ் போன்றவை இங்குள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களாகும்
cgtourism.choice.gov.in

கோரியா

கோரியா

அமைதி தவழும் அழகுடன் கூடிய ஏரி நீர்ப்பரப்புகள், ஆறுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் போன்றவை நிறைந்துள்ள ஒரு இயற்கை எழிற்பிரதேசமாக இந்த கோரியா மாவட்டம் ஒளிர்கிறது. இயற்கை ரசிகர்களை வெகுவாக கவரும் அம்சங்கள் இந்த பூமியில் அதிகம் வெளி உலகில் அறியப்படாமல் ஒளிந்து கிடக்கின்றன. அம்ரித் தாரா நீர்வீழ்ச்சி, ராம்தாகா நீர்வீழ்ச்சி மற்றும் கவர் காட் நீர்வீழ்ச்சி போன்றவை இம்மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க சுற்றுலா கவர்ச்சி அம்சங்களாகும்.
korea.nic.in

 சிர்பூர்

சிர்பூர்

பல்வேறு புராதன வரலாற்றுச்சின்னங்கள் இந்த சிர்பூர் பகுதியில் நிரம்பியுள்ளன. ‘லக்ஷ்மணா கோயில்' எனும் புராதனமான கோயில் இந்நகரத்தின் முக்கியமான சுற்றுலா அம்சமாக வீற்றிருக்கிறது. இது இந்திய கோயிற்கலை நுணுக்கங்களுக்கான மிகச்சிறந்த உதாரணமாக காட்சியளிக்கிறது. அது தவிர ஆனந்த் பிரபு குடி விஹார், துர்துரியா, புத்த விஹார், ராம் கோயில், பர்ணவபாரா காட்டுயிர் சரணாலயம் மற்றும் கந்தேஷ்வர் கோயில் ஆகியவையும் இந்நகரத்தில் பார்க்க வேண்டிய விசேஷ அம்சங்களாக அமைந்திருக்கின்றன.

Ms Sarah Welch

தம்தரி

தம்தரி

பல்வேறு உயிரினங்கள் வசிக்கும் இயற்கை வளம் நிரம்பிய வனப்பகுதிகளுடன், ரம்மியமாக காட்சியளிக்கும் இந்த தம்தரி மாவட்டம் பாரம்பரிய நாட்டுப்புற கலையம்சங்களுக்கும் புகழ் பெற்றுள்ளது. சுவாரசியமான சுற்றுலா அம்சங்கள் பலவற்றை இங்கு காணலாம்.

பிரசித்தமான ‘ரவிஷங்கர் அணைக்கட்டு' ஒரு முக்கியமான பிக்னிக் ஸ்தலமாக இங்கு பயணிகளை கவர்கிறது. இந்த அணை கங்க்ரேல் அணை என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த ஸ்தலத்தில் சூரிய அஸ்தமனத்தின் அழகு பார்வையாளர்களால் வெகுவாக ரசிக்கப்படுகிறது. சத்திஸ்ஹர் மாநிலத்தில் வசிக்கும் மக்கள் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான ரசிகர்கள் இந்த அணைப்பகுதிக்கு வருகை தருகின்றனர்.

நாகலாந்து காட்டுக்குள்ள ஒரு அழகிய பயணம் போலாமா? #காட்டுயிர்வாழ்க்கை 7

Pankaj Oudhia

Read more about: travel forest

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்