» »ஆஞ்சநேயர் சஞ்சீவி மலைய மட்டும் தூக்கிட்டு வரலைங்க, இதையும் சேத்துதா தூக்கிட்டு வந்திருக்காரு...

ஆஞ்சநேயர் சஞ்சீவி மலைய மட்டும் தூக்கிட்டு வரலைங்க, இதையும் சேத்துதா தூக்கிட்டு வந்திருக்காரு...

By: Sabarish

சஞ்சீவி மூலிகையைப் பெறுவதற்காக, இமயத்தில் இருந்து சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்து வந்தார் ஆஞ்சநேயர்-ன்னு காலங்காலமா நம்ம வீட்டு பெரியவங்களும், பாடபுத்தகத்தில் சொல்லியும் நாம கேட்டிருக்கிறோம். ஆனால், இந்த ஆஞ்சநேயரு நேபாளத்தில் இருந்து இன்னொரு பாறையும் சேத்து எடுத்துட்டு வந்து ஒரு இடத்துல வச்சுருக்காரு. அந்த பாறைமேலயும் ஒருத்தரு கோட்டை கட்டி, அடுத்து வந்தவங்க கோவில் கட்டி இப்ப அந்த இடமே ஜோஜோன்னு இருக்கு, அது உங்களுக்கு தெரியுமா ?

ஆமாங்க, இப்படிப்பட்ட ஒரு சுவாரசியமான பல கதைகளைக் கொண்ட மலைக் கோட்டைய பத்திதா இன்னைக்கு, இந்த கட்டுரைல நாம பாக்கப்போறோம். கூடவே, இங்க எப்படி போறது, என்னென்ன சிறப்புகள் இருக்குதுன்னு சேத்தியே பாக்கலாம்ங்க. வாங்க போலாம்.

 எங்க இருந்து எங்க ?

எங்க இருந்து எங்க ?

சென்னையில இருந்து 391 கிலோ மீட்டர் தூரத்திலும், கோவையில இருந்து 160 கிலோ மீட்டர் தூரத்துலயும் உள்ளது நாமக்கல் மாவட்டம். ஒருபக்கம் கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரோடு இணைந்த கொல்லி மலை, அருகே, காவிரி ஆறு என பல்வேறு சிறப்புகளைப் பெற்ற இந்த ஊரில் இன்னும் ஒரு பிரசிதிபெற்ற சுற்றுலாத் தலமும் இருக்குங்க. அது என்ன தெரியுமா ?. நாமக்கல் மலைக் கோட்டை.

மலைக் கோட்டை

மலைக் கோட்டை

நாமக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டாருக்கு உட்பட்ட தூரத்தில் உள்ளது இந்த மலைக் கோட்டை. நாமக்கல்லில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக்கோட்டை 246 அடி உயரம் கொண்ட ஒரே கல்லாலான மலையின் உச்சியில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோட்டையில் ஒரு கோவிலும், மசூதியும் உள்ளன. இவை இரண்டும் இந்நகரின் பிரபல சுற்றுலா தலங்களாக உள்ளன. தற்சமயம் இந்தக் கோட்டை தமிழக அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இதனருகே உள்ள கமலாலயம் நீர்த் தேக்கம், ஆஞ்சநேயர் கோவில்னு பல சுற்றுலா வாசிகளை ஈர்க்கும் வல்லமைகளை இந்த மலைக் கோட்டை கொண்டுள்ளது. சரி, அந்த கோட்டை மேல என்ன இருக்குதுன்னு பார்க்கலாமா ?.

Raja1111

மலையின் வரலாறு

மலையின் வரலாறு

புராண இலக்கியங்களின் படி, திரேதா யுகத்தின் போது ராமவதாரத்தில் ராவணனால் வானர சேனைகளும், ராமரும் பாதிக்கப்பட்டனர். அப்பொழுது அவர்களுக்கான வலிமையைக் கொடுப்பதற்காக சஞ்சீவி மூலிகையினை பெற ஆஞ்சநேயர் இமயத்தில் இருந்து சஞ்சீவி மலையை எடுத்து வரும்போது, நேபாளத்தில் உள்ள கண்டகி நதிக் கரையில் இருந்து சாளக்கிராமம் கிடைத்துள்ளது. அதனையும் எடுத்து வந்த ஆஞ்சநேயர் அந்தக் கல்லை நாமக்கல்லில் வைக்க அதுவே வளர்ந்து மிகப் பெரிய மலையாக மாறியதாக நம்பிக்கை நிலவுகிறது. இந்த மலை தற்போது நாமகிரி மலை, சாலக்கிராமம் என்றும் அழைக்கப்படுகிறது.

Vijayganesh.s1996

கட்டிடக்கலை நிறைந்த மலைக் கோட்டை

கட்டிடக்கலை நிறைந்த மலைக் கோட்டை

நாமகிரி மலையின் உச்சியில் ராமச்சந்திர நாயக்கரால் நாமக்கல் துர்கம் கோட்டை கட்டமைக்கப்பட்டுள்ளது. 16-வது நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோட்டைக்குள் ஒரு பழைய அழிந்து போன விஷ்ணு கோவிலும் உள்ளது. கோட்டையின் தென் மேற்கு பகுதியில் உள்ள குறுகலான படிக்கட்டுகளின் வழியே சென்றால் இந்த கோட்டையை அடையலாம். மேலும், இங்கு ஒரு மசூதியும் அமைந்துள்ளது. நாமகிரி மலையின் இரு புறத்திலும் நரசிம்ம சுவாமி கோவில் மற்றும் ரங்கநாத சுவாமி கோவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Vijayganesh.s1996

மலைக்கோட்டை சிறப்புகள்

மலைக்கோட்டை சிறப்புகள்

கோட்டையில் காணப்படும் பல இடிபாடுகள் இது கட்டப்பட்ட காலத்திலிருந்து அதைக் கைப்பற்ற நடைபெற்ற போர்களையும், போராட்டங்களையும் நினைவுகூறுகிறது. கோட்டையின் வாயில் கதவின் அருகில் ஒரு யாழியின் உருவம் வெளிசுவற்றில் செதுக்கப்பட்டுள்ளது. பெரிய கோட்டை கொத்தளமும், அதன் உள் சுற்று பிரகாரமும் கொண்டுள்ளது. உள்ளே ஒரு பாசி படிந்த குளம், சிறு நுழைவாயிலைக் கொண்ட பெரிய கற்சுவற்றுடன் ஆயுத கிடங்கு, கோட்டையிலுள்ள கர்ப்பகிரகத்தில் சிலையற்று ஒரு கோவில் என பல சிறப்புகளை நாமக்கல் மலைக் கோட்டை கொண்டுள்ளது.


Vijayganesh.s1996

அருகில் உள்ள கோவில்கள்

அருகில் உள்ள கோவில்கள்

நரசிம்மர் - நாமகிரி தாயார் கோவிலுக்கு எதிரில் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் ஆஞ்சநேயர் காட்சி அளிக்கிறார். நாமகிரி தாயார் கோவிலுக்கு பின்னால் உள்ள குடைவரைக் கோவில்தான் நரசிம்மர் கோவில். மலையின் மேற்கு புறம் உள்ள மலைக்கோவிலில் இந்த நரசிம்மர் - நாமகிரி தாயார் கோவில் உள்ளது.

பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோவிலில் நரசிம்மரின் சிலை மலையைக் குடைந்து வடிக்கப்பட்டு உள்ளது. நாமகிரி தாயாரின் கோவில் மலையைக் குடைந்து செய்யப்படாமல் தனியாக உள்ளது. மலையின் கிழக்கே அரங்கநாதன் கோவில் உள்ளது. இங்கு 5 தலையுடைய பாம்பரசன் கார்கோடகன் மீது படுத்தவாறு திருவரங்கன் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

Urban Kalbermatter

கோவிலின் சிறப்புகள்

கோவிலின் சிறப்புகள்

தமிழகத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களிலேயே மிகவும் பிரசித்தி பெற்றது நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில். லட்சுமி நரசிம்மர் கோவிலின் உப கோவில்தான் இந்த ஆஞ்சநேயர் சன்னதி என்றாலும் இந்த சன்னதியில் தான் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பீடத்தில் இருந்து 22 அடியும், பாதத்தில் இருந்து 18 அடியும் உயரம் கொண்டதாக உள்ள இந்த ஆஞ்சநேயர் 18 அடி உயரமுள்ள ஒற்றை கல் என்பது மேலும் சிறப்பூட்டுகிறது.

John Hill

பூங்காக்கள்

பூங்காக்கள்


நாமக்கல் மலைக்கோட்டையின் அருகிலேயே நேரு பூங்கா மற்றும் செலம்ப கவுண்டர் பூங்கா என இரு பூங்காக்கள் உள்ளது. நேரு பூங்காவில் புதியதாகப் படகு சவாரியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவை உங்களது பயணத்தை புத்துணர்ச்சி அடையச் செய்யும். மேலும், குழந்தைகளுக்கு நல் பொழுதுபோக்காகவும் இந்த பூங்காக்கள் உதவும்.

சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோவில், நாமக்கல் அரங்கநாத பெருமாள் கோவில், திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் என நாமக்கல் மலைக் கோட்டையினைச் சுற்றியும் ஆன்மீகத் தலங்களும், மூலிகை நிறைந்த மலைத் தொடர்களும் அதிகளவில் காணப்படுகின்றன. நாமக்கல்லில் இருந்து துறையூர் செல்லும் வழியில் 7 கிலோ மீட்டர் தொலைவில் கூலிப்பட்டி என்னும் இடத்தில் சிறிய குன்றின் மீதுள்ள முருகன் கோவிலும் இப்பகுதியில் பிரசிதிபெற்றதாகவே திகழ்கிறது.

 திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோவில்

திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோவில்


திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோவில் செங்கோட்டு வேலவர், அர்த்தநாரீசுவரர், ஆதிகேசவப் பெருமாள் என மூன்று தெய்வங்களின் சன்னிதிகளைக் கொண்டது. இந்தக் கோவிலின் தூண்கள், மண்டபச் சுவர்கள் என அனைத்துப் பகுதிகளிலும் தமிழக கலைத்துறையின் கைவண்ணத்தைக் காணலாம். கொங்கு நாட்டில் காவிரி நதியின் வடகரையில் அமைந்திருக்கும் இந்தச் சிவதலம் கொங்கேழ் சிவதலங்களில் ஒன்று என்றும் கூறப்படுகிறது.

kurumban

 எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?

நாமக்கல்லில் இருந்து திருசெங்கோடு 37 கிலோ மீட்டர் தொலைவிலும், சேலத்தில் இருந்து 48 கிலோ மீட்டர் தூரத்திலும், கரூரில் இருந்து 61 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. நாமக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து அனைத்து நேரங்களிலும் பேருந்து வசதி மற்றும் வாடகை வாகன வசதிகள் உள்ளது.

நைனா மலை

நைனா மலை

நைனா மலையின் மேல் பகுதியில் அமைந்துள்ளது நைனாமலை வரதராஜப் பெருமாள் கோவில். மலை மீது ஏறியே இக்கோயிவிலுக்கு செல்ல முடியும். இக்கோவில் புதன்சந்தையிலிருந்து சேந்தமங்கலம் செல்லும் வழியில் உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என அனைத்துத் தரப்பினரும் இக்கோவிலுக்கு சென்று வரலாம்.

Ssriram mt

 நைனா மலை எப்படிச் செல்வது

நைனா மலை எப்படிச் செல்வது


சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் நைனா மலை உள்ளது. சேந்தமங்கலத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் பயணித்தும், நாமக்கல்லில் இருந்து 10 கிலோ மீட்டர் பயணித்தும் நைனா மலை வரதராஜப் பெருமாள் கோவிலை வந்தடையலாம்.

Ssriram mt

Read more about: travel, fort