நீங்கள் சென்னையில் உள்ள பலவிதமான உணவகங்களுக்கும் சென்று இருக்கலாம். ஆனால், சென்னையில் முதன்முதலாக துவங்கவிருக்கும் மிதக்கும் உணவகத்திற்கு எப்போது செல்லலாம் என்று பிளான் பண்ணி இருக்கிறீர்கள்? ஆம்! சென்னையை அடுத்த பொழுதுபோக்கு சுற்றுலாத் தலமான முட்டுக்காடு படகு கழம் அருகே இரண்டடுக்கு மிதக்கும் உணவகம் கூடிய விரைவில் துவங்கப்படவிருக்கிறது!
சென்னையில் நம்மை வியக்க வைக்கும் பலவித உணவகங்கள்
நமது சென்னையில் வித விதமான பல உணவகங்களை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். குழந்தைகளுக்கு ஏற்ற, ஆண்களுக்கு ஏற்ற, பெண்களுக்கு என பல பல தீம்களில் உணவகங்கள் உண்டு. கொரியன் BTS ரெஸ்டாரன்ட் முதல், சைனீஸ், பிரெஞ்சு, இத்தாலியன், பர்மீஸ் வரை பல வகையான ரெஸ்டாரன்ட்கள் உண்டு. ஆனால் இப்போது சென்னைக்கு அருகில் உள்ள முட்டுக்காடு படகு குழாமில் சென்னையிலேயே முதன் முதலாக இரண்டு அடுக்கு மிதக்கும் உணவகம் துவங்கப்படவிருக்கிறது. இனி நீங்கள் உப்பங்கழிகளில் இனிமையாக பயணத்தை முடித்த உடன் இந்த அழகிய சூழலில் இருக்கும் மிதக்கும் உணவகத்தில் சுவையான உணவுகளை ருசிக்கலாம் மக்களே!

சென்னையில் முதன்முறையாக மிதக்கும் உணவகம்
சென்னை ECRல் உள்ள முட்டுகாடு படகு இல்லத்தில், தமிழ்நாடு சுற்றுலாத் துறை 5 கோடி ரூபாய் செலவில் "மிதக்கும் உணவகம்" என்ற கான்செப்ட்டில் கட்டியுள்ள கப்பலின் கட்டுமான பணிகள் முடிவடைந்து, திறப்பு விழாவுக்குத் தயாராக உள்ளது. இது சென்னை மக்களின் முக்கிய ஹாட்ஸ்பாட் ஆக இருக்கப்போகிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (TTDC) மற்றும் கேரள மாநிலம் கொச்சி-யை அடிப்படையாக கொண்ட கிராண்டியர் மரைன் இன்டர்நேஷனல் நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் PPP கூட்டமைப்பின் கீழ் இந்த "மிதக்கும் உணவகம்" கப்பல் கட்டப்பட்டது. இந்த கப்பல் குறித்து அதிகாரப்பூர்வ வீடியோ தற்போது வெளியாகி சென்னை மக்கள் மத்தியில் டிரெண்டாகி வருகிறது.
இனி முட்டுக்காடு படகு குழாமில் மக்கள் முற்றுகை
சென்னையின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக இருப்பது கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள முட்டுக்காடு. இங்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள படகு குழாமில் படகு சவாரி, வாட்டர் ஸ்கூட்டர் என குடும்பத்துடனும் நண்பர்களுடன் பொழுதுபோக்க ஏராளமான விஷயங்கள் உள்ளன. மேலும் இங்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்காக மிதவை படகுகள் இயந்திர படகுகள் சாகச முறையில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இங்கே மிதக்கும் உணவகம் திறக்கப்படவிருக்கிறது.

இரண்டு அடுக்கில் பிராமாண்டமாக தயாராகும் ரெஸ்டாரன்ட்
செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மிதக்கும் உணவகத்தில் ஒரே நேரத்தில் 100 பேர் வரை எளிதாக உணவருந்த முடியும். படகின் கீழ்த்தளத்தில் குளிரூட்டப்பட்ட டைனிங் ஹாலும், சிறு சிறு தனி அறைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேல் தளத்தில் திறந்தவெளி ரெஸ்டாரன்ட் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மாலை வேலையில் மேல் தளத்தில் அமர்ந்துக் கொண்டு இயற்கை அழகை ரசித்தப்படியே உணவருந்தினால் எவ்வளவு உற்சாகமாக இருக்கும் அல்லவா!
உற்சாகத்தில் இருக்கும் பொதுமக்கள்
இந்த மிதக்கும் உணவகம் தமிழகத்திலேயே முதன்மையானது. இன்னும் மூன்று மாதங்களில் இந்தபுது வகையான மிதக்கும் உணவகத்தில் பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் உணவருந்தலாம். இந்த மிதக்கும் உணவகத்தை மக்கள் வெகுவாக விரும்புவார்கள் என்று எதிர்பார்க்க்கப்படுகிறது. கூடிய விரைவில், நீங்கள் இங்கே உணவருந்தலாம், படகோட்டி செல்லலாம் மற்றும் மற்ற சாகசச் செயல்களில் ஈடுபடலாம், அதே நேரத்தில் ஏரியிலிருந்து சுற்றியுள்ள பகுதியின் பரந்த காட்சியைப் பார்த்து ரசிக்கலாம்.
முட்டுக்காட்டில் நீங்கள் செய்ய வேண்டியவை
சென்னைக்கும் பாண்டிச்சேரிக்கும் இடையே அமைந்திருக்கும் முட்டுக்காடு ஒரு அழகிய கிராமமாகும். உப்பங்கழிகள், பனை பள்ளங்கள், பசுமையான சூழலுக்கு மிகவும் பிரபலமான முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ஒரு படகு குழாம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த இடத்திற்கு செல்லும் போது நீங்கள் கீழக்கண்ட செயல்களில் ஈடுபடலாம்.
1. படகு சவாரி
2. கயாக்கிங்
3. கேனோயிங்
4. தக்ஷின் சித்ரா
5. MGM Dizee வேர்ல்ட்
6. VGP கோல்டன் பீச் ரிசார்ட்ஸ்
விரைவில் திறப்புவிழா
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் கொச்சியை சேர்ந்த க்ராண்டியூர் மறைன் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலமாக தனியார் மற்றும் பொது பங்களிப்பு திட்டத்தின் மூலமாக மிதவை உணவகம் செயல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது முட்டுக்காடு மிதவை உணவகம் தற்போது திறப்பு விழாவிற்காக தயாராகியுள்ளதால் விரைவில் திறக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.



Click it and Unblock the Notifications



