கடல் மட்டத்திலிருந்து 2155 அடி உயரத்தில் கர்நாடக மாநிலத்தின் மைசூர் மாவட்டத்தில் உள்ள நஞ்சன்கூடு தன் சிறப்பான பண்பாட்டு மற்றும் பாரம்பரிய பின்னணிக்கு புகழ் பெற்றுள்ளது. ஆதியில் கங்க வம்சத்தினரால் ஆளப்பட்ட இந்த நகரம் பின்னர் ஹொய்சள வம்சத்தினராலும் அவர்களைத் தொடர்ந்து மைசூர் உடையார்களாலும் ஆளப்பட்டுள்ளது. ஷீரங்கப்பட்டணாவை ஆண்ட மன்னர்களான ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோர் இந்த நகரத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்துள்ளனர்.

இந்த நகரத்தின் முக்கிய தெய்வமாகிய நஞ்சுண்டேஸ்வரரின் பெயரிலேயே இது நஞ்சன்கூடு என்றழைக்கப்படுகிறது. பூலோகத்திலுள்ள உயிர்களைக் காப்பதற்காக ஆலாகால விஷத்தை (திருப்பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்தபோது வெளிப்பட்டது இந்த விஷம்) அருந்திய சிவபெருமான் இங்கு நஞ்சுண்டேஸ்வர அவதாரமாக குடிகொண்டுள்ளார். மேலும் இந்த நஞ்சன்கூடு ஸ்தலம் தக்ஷிண காசி என்றும் அறியப்படுகிறது. இங்குள்ள நஞ்சுண்டேஸ்வரருக்கு பிணிகளை தீர்க்கும் சக்தி இருப்பதாக ஐதீகம். இது தவிர ஸ்ரீ ராகவேந்திரஸ்வாமி மடம் மற்றும் பரசுராம க்ஷேத்திரம் என்ற இரண்டு ஆன்மிக ஸ்தலங்களும் நஞ்சன்கூடு நகரத்தில் முக்கிய அம்சங்களாக உள்ளன.
ஸ்ரீ ராகவேந்திரஸ்வாமியின் பிரசித்தமான சிலையை இங்கு நஞ்சன்கூடு மடத்தில் காணலாம். பெங்களூரிலிருந்து 163 கி.மீ தூரத்திலும் மைசூரிலிருந்து 30 கி.மீ தூரத்திலும் உள்ள இந்த நஞ்சன்கூடு நகரம் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து மூலம் எளிதில் அடையும்படியாக அமைந்துள்ளது. கோயில் நகரமாக மட்டுமல்லாமல் வேகமாக வளர்ந்து வரும் ஒரு பொருளாதார மையமாகவும் இது மாறியுள்ளது.
நஞ்சன்கூடு நகருக்கு விஜயம் செய்யும் பயணிகள் இங்குள்ள முக்கிய அம்சமான நஞ்சுண்டேஸ்வர் கோயிலை தரிசிப்பது முக்கியமாகும். இது ஸ்ரீகண்டேஸ்வர் என்றும் அறியப்படுகிறது. சிவபெருமானுக்கான கோயிலான இது திராவிட சிற்பக்கலை பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது.புராணக்கதைகளின்படி யுகம் யுகமாக சிவபெருமான் இந்த திருத்தலத்தில் உறைவதாக நம்பப்படுகிறது.

கங்க மன்னர்களால் கட்டப்பட்ட இந்த கோயில் ஹொய்சள வம்சத்தினரால் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. ஹைதர் அலி, திப்பு சுல்தான் போன்ற மன்னர்களும் இந்த கோயிலுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளனர். திப்பு சுல்தானின் யானை ஒன்று நோய்வாய்ப்பட்டபோது இந்த நஞ்சன்கூடு ஸ்தலத்தில் பிராத்தித்ததன் மூலம் குணமடைந்ததாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.உள்ளூர் மக்கள் இன்றும் இந்த கோயில் தெய்வத்தின் பிணி தீர்க்கும் சக்தியின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.
நஞ்சுண்டேஸ்வர் கோயில் தேர்த்திருவிழாவின்போது பெருமளவில் பக்தர்கள் வருகை தருகின்றனர். வருடத்தில் இரண்டு முறை நடத்தப்படும் இந்த தொட்ட ஜாத்ரே திருவிழாவின் போது கணபதி, பார்வதி தேவி, ஸ்ரீகண்டேஷ்வர், சுப்ரமண்யர், சண்டிகேஷ்வரர் ஆகிய கடவுளரின் சிலைகள் ஐந்து வெவ்வேறு தேர்களில் வைக்கப்பட்டு விசேஷ பூஜைக்குப்பின் ஊர்வலமாக எடுத்துவரப்படுகின்றன.