Search
  • Follow NativePlanet
Share
» »நார்த்தாமலை - சஞ்சீவி மலையின் சிதறல்கள்?!

நார்த்தாமலை - சஞ்சீவி மலையின் சிதறல்கள்?!

By

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நார்த்தாமலையில் மேல மலை, கோட்டை மலை, கடம்பர் மலை, பறையன் மலை, உவச்சன் மலை, ஆளுருட்டி மலை, பொம்மை மலை, மண் மலை, பொன்மலை ஆகிய 9 மலைகள் இருக்கின்றன.

இவற்றோடு பல சிறிய மலைகளும், சிலைகள் நிறைந்த குகைகளும், கற்றளிகளும், மூலிகை செடிகளும், தொண்டைமான் மூலிகைக் காடு என்ற மூலிகைப் பண்ணை ஒன்றும் நார்த்தாமலையில் காணப்படுகின்றன.

இந்த மலைப்பகுதி திருச்சிராப்பள்ளி-புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் திருச்சிராப்பள்ளியிலிருந்து 36 கிலோமீட்டர் தொலைவிலும், புதுக்கோட்டையிலிருந்து 17 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது.

பெயர்க் காரணம்

பெயர்க் காரணம்

நார்த்தாமலை பெயர்க் காரணம் குறித்து பல புராண, வரலாற்றுக் கதைகள் சொல்லப்படுகின்றன. அதில் ஒரு கதையில், இராமாயணத்தில் ஆஞ்சநேயர் இலங்கைக்கு தூக்கிச் சென்ற சஞ்சீவ பர்வதம் என்ற மலையின் சிறிய சிதறல்களே நார்த்தாமலை என்றும், அதன் காரணமாகவே இக்குன்றுகளில் அதிக அளவில் மூலிகைகள் காணப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல் மற்றொரு கதைப்படி மாமுனி நாரதர் பெயரால் 'நாரதர் மலை' என்று அழைக்கப்பட்டதாகவும், அப்பெயர் திரிந்து நார்த்தாமலை என்று மாறியதாகவும் கூறப்படுகிறது. மேலும் நகரத்தார் அல்லது நாட்டுக்கோட்டை செட்டியார்களின் செல்வம் கொழிக்கும், வாணிபம் பெருகும் தலைமையகமாக நார்த்தாமலை இருந்த காரணத்தால் 'நகரத்தார் மலை' என்று அழைக்கப்பட்டு பின்னர் நார்த்தாமலை ஆனதாகவும் வரலாற்றோடு தொடர்புபடுத்தி ஒரு கருத்து நிலவுகிறது.

படம் : Narayanaperumal

வரலாறு

வரலாறு

நார்த்தாமலை சோழர் மற்றும் பாண்டியர் காலத்தில் செல்வம் கொழிக்கும், வாணிபம் பெருகும் பகுதியாக, வணிகர்களின் தலைமையகமாக இருந்திருக்கிறது. இதற்கு முதலாம் இராஜராஜ சோழன் (10-ஆம் நூற்றாண்டு) மற்றும் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (13-ஆம் நூற்றாண்டு) காலத்துக் கற்றளிகள் நார்த்தாமலையில் அமைந்திருப்பதே சான்றுகள். பின்னர் நிறைய ஆட்சி மாற்றத்தை கண்டு வந்த நார்த்தாமலை, 1948-ஆம் ஆண்டு புதுக்கோட்டை சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்கும் வரை புதுக்கோட்டை தொண்டைமான் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது.

படம் : Thangamani

தஞ்சை பெரிய கோயில் சிற்பங்கள்!

தஞ்சை பெரிய கோயில் சிற்பங்கள்!

தஞ்சை பெரிய கோயிலில் உள்ள சோழர் கால சிற்பங்கள் பெரும்பான்மையானவை நார்த்தாமலையிலிருந்து எடுக்கப்பட்ட கற்களைக்கொண்டே உருவாக்கப்பட்டவையாகும்.மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் காணப்படும் ஒரு சில அம்மன் கோயில்களுக்கும் கற்கள் இங்கிருந்தே எடுக்கப்பட்டுள்ளன.

படம் : Anandrm1

கடம்பர் மலை கோயில்கள்

கடம்பர் மலை கோயில்கள்

நார்த்தாமலை பேருந்து நிலையத்துக்கு அருகில், ஊர் நுழைவாயிலுக்கு வலது பக்கத்தில் கடம்பர் மலைக்குன்று அமைந்துள்ளது. இங்கு முதலாம் இராஜராஜ சோழன் (10-ஆம் நூற்றாண்டு) காலத்திய சிவன் கோயில் ஒன்று பிரதானமாக உள்ளது. இதற்கருகில் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (13-ஆம் நூற்றாண்டு) காலத்தில் கட்டப்பட்ட நகரீஸ்வரம் என்ற சிவன் கோயிலும் மங்களாம்பிகை அம்மன் கோயிலும் அமையப்பெற்றுள்ளன. மேலும் குன்றின் அடிவாரப்பகுதியில் பாறை குழிவாகக் குடையப்பட்டு வெட்டப்பட்டுள்ள பெரியதொரு கல்வெட்டு சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இவைத்தவிர முதலாம் ராஜராஜன் காலம் முதல் மூன்றாம் ராஜேந்திர சோழன் காலம் வரையிலான கல்வெட்டுக்கள் இங்கு இருக்கின்றன.

படம் : Narayanaperumal

சமணர் குடகு

சமணர் குடகு

பதினெண்பூமி விண்ணகரம் என்ற பெயரிலும் அழைக்கப்படும் மேலமலையில் அமைந்துள்ள பெரிய குகை அல்லது குடைவரைக் கோயில் சமணர் குடகு ஆகும். 7-ஆம் நூற்றாண்டு வரை சமணர் குகையாக இருந்த இந்தக் குடைவரைக் கோயில் பிற்காலத்தில் விஷ்ணு கோயிலாக மாற்றப்பட்டுள்ளது. இதன் அர்த்த மண்டபத்தில் ஒரே போல 12 ஆளுயர விஷ்ணு சிலைகள் காணப்படுகின்றன. இந்த மண்டபத்திற்கு முன்னுள்ள மேடையின் பீடத்தில் யாளி, யானை, சிங்கம் உள்ளிட்ட உருவங்களை வரிசையாகக் கொண்ட சிற்பத் தொகுதி உள்ளது.

படம் : Narayanaperumal

பழியிலி ஈஸ்வரம்

பழியிலி ஈஸ்வரம்

மேலமலையில் அமைந்துள்ள பழியிலி ஈஸ்வரம் என்ற சிறிய குடைவரை சிவன் கோயில் 9-ஆம் நூற்றாண்டில் பல்லவராயர்களின் ஆட்சியின் கீழ் முத்தரையர் தலைவன் சாத்தன் பழியிலி கட்டியது.

படம் : Narayanaperumal

விஜயாலய சோழீஸ்வரம்

விஜயாலய சோழீஸ்வரம்

மேலமலையில் அமைந்திருக்கும் விஜயாலய சோழீஸ்வரம் கோயிலை முத்தரையர் தலைவர் இளங்கோ அடி அரையன் கட்டியுள்ளார். இந்தக் கோயிலின் வாயிலில் கலையழகு மிளிரும் இரு துவாரபாலகர் சிற்பங்கள் காணப்படுகின்றன. அதோடு கோபுரத்தில் நடன மங்கைகள் உள்பட பல அற்புதச் சிலைகள் உள்ளன. மேலும் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள கருவறை வட்ட வடிவில் இருப்பது தனிச்சிறப்பு. இதுபோக அர்த்த மண்டபத்தில் சாந்து பூசப்பட்டு வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இவ்வோவியங்கள் 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று கருதப்படுகிறது.

படம் : Narayanaperumal

நார்த்தாமலை முத்துமாரி அம்மன் கோயில்

நார்த்தாமலை முத்துமாரி அம்மன் கோயில்

புதுக்கோட்டை மாவட்டத்தின் அனைத்து அம்மன் ஆலயங்களின் தலைமை அம்மன் கோயிலாக நார்த்தாமலை முத்துமாரி அம்மன் கோயில் திகழ்ந்து வருகிறது.

படம் : Narayanaperumal

முத்துமாரி அம்மன் கோயில் ஜல்லிக்கட்டு

முத்துமாரி அம்மன் கோயில் ஜல்லிக்கட்டு

முத்துமாரி அம்மன் கோயிலில் வருடந்தோறும் பங்குனி உத்திர திருவிழாவின் போது தேரோட்டமும், அதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டும் நடைபெறுகிறது. இந்த ஜல்லிக்கட்டு தமிழகத்தில் நடைபெறும் முக்கியமான ஜல்லிக்கட்டுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

படம் : Narayanaperumal

நார்த்தாமலையை எப்படி அடைவது?

நார்த்தாமலையை எப்படி அடைவது?

நார்த்தாமலைக்கு புதுக்கோட்டையில் இருந்து நேரடியாகப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதோடு திருச்சிராப்பள்ளியிலிருந்து நார்த்தாமலைக்கு பேருந்தில் வருபவர்கள் பொம்மாடிமலையில் இறங்கி நார்த்தாமலைக்கு வரலாம்.

படம் : Narayanaperumal

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X