Search
  • Follow NativePlanet
Share
» »நவான்ஷாஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

நவான்ஷாஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

நவான்ஷாஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள நவான்ஷாஹர் நகரம் மற்றும் மாவட்டப்பகுதி ஒரு பிரசித்தமான சுற்றுலாத்தலமாக அறியப்படுகிறது. இங்குள்ள இயற்கைக்காட்சிகள் மற்றும் வருடமுழுதும் நிலவும் இனிமையான பருவநிலை போன்றவற்றுக்காக இது சுற்றுலாப்பயணிகளால் விரும்பப்படும் ஸ்தலமாக விளங்குகிறது. இப்பகுதியில் பாயும் சட்லெஜ் ஆறு இந்த பிரதேசத்தின் எழிலுக்கும் மண் வளத்துக்கும் காரணமாகவுள்ளது. ஆதியில் நௌஸர் என்ற பெயரால் அழைக்கப்பட்ட இந்த நவான்ஷாஹர் நகரம் ஆப்கன் படைத்தளபதியான நௌஸர் கான் என்பவரால் அலாவுதீன் கில்ஜி காலத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. 2008-ம் ஆண்டில் பஞ்சாப் முதலமைச்சரான பிரகாஷ் சிங் பாதல் இந்த நகரத்தின் பெயரை 'ஷாஹித் பகத் சிங் நகர்' என்று அதிகாரபூர்வமாக மாற்றியுள்ளார்.

நவான்ஷாஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

pardeepsethi170

நவான்ஷாஹர் நகரத்திலுள்ள முக்கிய சுற்றுலா அம்சங்கள்

நவான்ஷாஹர் சுற்றுலா அம்சங்கள் யாவுமே இங்கு விஜயம் செய்து விட்டு திரும்பும் பயணிகளின் மனதில் இனிப்பான ஞாபகங்களாக பதிந்து போகும் அளவுக்கு விசேஷமானவையாக அமைந்துள்ளன. இவற்றில் ஐந்து ஹவேலிகள் எனப்படும் கோட்டை மாளிகைகள் முக்கியமானவையாகும். இவை நௌஸர் கான் என்பவரால் கட்டப்பட்டிருக்கின்றன. நாட்டிலுள்ள மிகச்சிறந்த குருத்வாராக்களில் சிலவற்றையும் இந்த நகரம் தன்னுள் கொண்டுள்ளது. குருத்வாரா நானக்சர், குருத்வாரா குர்பர்தாப், நவான்ஷாஹர் சனேஹி கோயில், நப் கன்வல், கிர்பால் சாஹர் மற்றும் குருத்வாரா குர்பலா (சொத்ரன்) ஆகியவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை. இந்நகரத்திற்கு அருகிலெயே அமைந்துள்ள ஜலந்தர், லுதியானா, ஹோஷியார்பூர் மற்றும் சிம்லா போன்ற இதர முக்கியமான சுற்றுலாத்தலங்களுக்கும் பயணிகள் தங்கள் விருப்பம் மற்றும் வசதிக்கேற்றாற்போன்று விஜயம் செய்யலாம்.

எப்படி செல்வது நவான்ஷாஹர் நகருக்கு?

அருகிலுள்ள எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் போதுமான அளவுக்கு போக்குவரத்து வசதிகள் நிரம்பியிருப்பது இந்த நகரத்தின் சுற்றுலா வளர்ச்சிக்கு பெருமளவு உதவியாக உள்ளது. லூதியானாவில் உள்ள சஹ்னேவால் விமான நிலையம் நவான்ஷாஹருக்கு அருகில் அமைந்திருக்கிறது. அங்கிருந்து ஒரு மணி நேர பயணத்தில் நவான்ஷாஹர் நகருக்கு வந்து விடலாம். சுற்றுலா மேற்கொள்ள உகந்த பருவம் நவான்ஷாஹர் நகரத்தின் பருவநிலையானது கடுமையான கோடைக்காலம், குளுமை மற்றும் ஈரப்பதம் நிரம்பிய மழைக்காலம் மற்றும் அதிக குளிர் நிலவும் குளிர்காலம் ஆகியவற்றை கொண்டுள்ளது. பொதுவாக அக்டோபர் முதல் மார்ச் வரையுள்ள மாதங்கள் இந்நகரத்துக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்ள ஏற்றவையாக உள்ளன.

குருத்வாரா தாஹ்லி சாஹிப் நவான்ஷாஹர் என்று அழைக்கப்படும் இந்த குருத்வாரா ஷீ குருநானக் தேவ்ஜியின் மகனான பாபா ஷீ சந்த் அவர்களின் நினைவாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இது ரஹோன் ரயில் நிலையத்திலிருந்து 10 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்த ஸ்தலத்தில் தங்கியிருந்த பாபா ஷீ சந்த்ஜி 40 நாட்களுக்கு தியானத்தில் ஈடுபட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. தாஹ்லி எனப்படும் ஷிஷாம் மரம் ஒன்று இந்த இடத்தில் பாபா அவர்களால் நடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. நவான்ஷாஹர் நகரத்திலிருந்து 1 கி.மீ தூரத்தில் கர்ஹ்ஷங்கர் சாலையில் இந்த பழமையான மரத்தை காணலாம்.

குருத்வாரா சிங் சபா நவான்ஷாஹர் எனும் எனும் இந்த குருத்வாரா 1928ம் ஆண்டில் 25 உறுப்பினர்களை கொண்ட ஒரு குழுவின் முயற்சியில் வாங்கப்பட்ட நிலத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்னர் 23 ஆண்டுகள் கழித்து 5 உறுப்பினர்களை கொண்ட மற்றொரு குழு ஒன்று மேலும் அதிகமான நிலப்பகுதியை வாங்கி அதில் தங்கும் அறைகள், அலுவலகம், பள்ளி, லங்கார் சமையலறை மற்றும் 3600 ச.அடி கொண்ட கூடம் ஆகிய கட்டமைப்புகளை எழுப்பியுள்ளது. இங்கு விஜயம் செய்யும் யாத்ரீகர்கள் ஷபாத் கீர்த்தன் மற்றும் பாத் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளலாம்.

கிர்பால் சாஹர் எனும் இந்த தனித்துவமான 'ஆன்மீக மனித நேய வளாகம் மற்றும் மையம்' ரஹோன் நகரத்திற்கு அருகில் உள்ள தரியாபூர் கிராமத்தில் அமைந்துள்ளது. மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் ஒரு உன்னத ஆன்மீக மையமாக இந்த கிர்பால் சாஹர் வளாகம் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. தூய்மையும், அழகும், ஆன்மீக நிசப்தமும் நிலவும் இந்த பிரம்மாண்ட வளாகம் பல்வேறு உயரிய நோக்கங்களுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. மத நல்லிணக்கம், கல்வி, மருத்துவம், சமூக சேவை என்பவையே அந்த அடிப்படை நோக்கங்களாகும்.

ஹிந்துக்கள், முஸ்லிம்கள், கிறித்துவர்கள் மற்றும் சீக்கியர்கள் உள்ளிட்ட அனைத்து சமூக மக்களும் இந்த ஸ்தலத்திற்கு வருகை தருகின்றனர். 'இறைவன் ஒன்றே' எனும் கருத்தை வலியுறுத்தி பரப்பிய 'சந்த் கிர்பால் சிங்ஜி' யின் சீடர்கள் ஆதரவில் 'ஹர்பஜன்சிங்' எனும் மாமனிதரின் முயற்சியில் இந்த மஹோன்னதமான ஆன்மீக வளாகம் உருவாகியுள்ளது. இந்த ஸ்தலத்தின் பிரதான அம்சமாக முட்டை வடிவத்தில் ஒரு தீர்த்தக்குளம் கலையம்சத்துடன் உருவாக்கப்பட்டு காட்சியளிக்கிறது. அதன் நடுநாயகமாக ஹிந்து, முஸ்லிம், சீக்கியம் மற்றும் கிறித்துவம் போன்ற எல்லா மதப்பிரிவுகளின் அடையாளங்களையும் உள்ளடக்கிய ஒரு 'தனித்துவமான புனிதக்கோயில்' கம்பீரமாக காட்சியளிக்கிறது.

உயரிய நோக்குடன் வீற்றிருக்கும் இந்த கோயில் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க செய்கிறது. 'மதங்கள் யாவும் மனித ஒற்றுமைக்கும், மனித சேவைக்கும் அன்றி பிரிவினைக்கும் சுயநலத்துக்கும் அல்ல' எனும் உன்னத கருத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கிர்பால் சாஹர் வளாகம் அவசியம் பயணிகள் விஜயம் செய்ய வேண்டிய ஸ்தலமாகும். இது போன்ற அமைப்புகள் ஏன் நாடு முழுதுமே உருவாகாமல் உள்ளன எனும் கேள்வியும், இனம் தெரியாத பரவச உணர்வும் இந்த ஸ்தலத்திற்கு விஜயம் செய்துவிட்டு திரும்பும்போது உங்களை ஆக்கிரமிக்கக்கூடும்.

Read more about: punjab
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X