» »ரஹ்மான் பாடல்களோடு ஒரு பயணம்!

ரஹ்மான் பாடல்களோடு ஒரு பயணம்!

Written By: Staff

ரோஜாவில் ஆரம்பித்த ரஹ்மானின் பயணம் தொடங்கிய சில ஆண்டுகளிலேயே உச்சத்திற்குப் போனது. இருந்தும் ரஹ்மான் அதிகப் படங்கள் பண்ணவில்லை. வருடத்திற்கு 4-10 படங்கள் வரை இசையமைத்தார். இதற்கு இரண்டு காரணங்கள் : ஒன்று, அவரின் தொழில் முறைப் பழக்கம் ஒவ்வொரு படத்திற்கும் சில மாதங்கள் எடுத்துக் கொள்வது; இரண்டு : பட்ஜெட். சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள் அவரை நெருங்குவதற்கு தயங்கினார்கள். ஷங்கர், மணி ரத்னம், கதிர், ராஜிவ் மேனன், ரஜினி, கமல் போன்ற பெரும் கலைஞர்கள்தான் அவரை அணுகினர்.

அவரின் பல ஹிட் பாடல்கள் இந்த பெரிய பட்ஜெட்டின் விளைவாக பல அற்புதமான லொகேஷன்களில் படம்பிடிக்கப்பட்டது. அதில், தென்னகத்தில் இருக்கும் இடங்களைப் பார்ப்போம் :

ஒக்கனேக்கல் அருவி

hogenekkal

சின்ன சின்ன ஆசையில் ஆரம்பித்து நதியே நதியே காதல் நதியே வரை ஒக்கனேக்கல் அருவி ரஹ்மான் பாடல்களுக்கு அருமையான பின்னணியாக இருந்திருக்கிறது.  ஒக்கனேக்கல் அருவி, தர்மபுரியிலிருந்து 46 கி.மீ தொலைவில் காவிரி ஆற்றில் அமைந்துள்ளது.

இந்தியாவின் நயகரா என்றும் அழைக்கப்படுகிறது. ஏன் ? ஒகேனக்கல்லில் இருப்பது ஒற்றை அருவி அல்ல மாறாக பல அருவிகளின் தொகுப்பு. ஹொகேனேகல் என்ற கன்னட சொல்லுக்கு புகையும் கல்\பாறை என்று பொருள். அதாவது, அருவி பிரமாண்டமாய் கீழே விழும்போது ஏற்படும் புகையின் காரணமாக இப்படி அழைக்கப்படுகிறது.

மிரள வைக்கும் பரிசல் பயணம், சுடச் சுட மீனை எண்ணெயில் பொறித்து தருவது ஆகிய காரணங்களுக்காகவே ஒக்கனேக்கல் அருவிக்குப் பலர் வருகின்றனர்.

அதிரப்பள்ளி அருவி, சாலக்குடி, திருச்சூர்

Athirapallay

இந்த அருவி தமிழர்கள் மத்தியில் மிகுந்த பெயர் பெற்றது புன்னகை மன்னன் படம் வந்தபோதுதான். அதன் பிறகு எத்தனயோ தமிழ்ப் படங்களில் வந்துவிட்டது. அதில் குறிப்பிடத்தக்க சில பாடல்கள் :

ஒரு தெய்வம் தந்த பூவே, உசுரே போகுதே, நறுமுகையே நறுமுகையே

கேரளாவின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி இது திருச்சூர் பக்கத்தில் இருக்கிறது. 80 அடி உயரத்தில் இருந்து கீழே பார்க்கும் காட்சியாகட்டும் அல்லது அருவியின் அடிவாரத்தில் இருந்து மேலே பார்ப்பதாகட்டும் மிகச் சிறந்த அனுபவம்.

கல்யாண தீர்த்தம், அகத்தியர் அருவி

Ambasamudram

முதல்வன் படத்தில் வந்த அழகான ராட்சஸியே பாடல் இங்கு படமாக்கப்பட்டது.

அகத்தியர் அருவி, பாபநாசம் அருகில், மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற அருவி; முக்கியமான சுற்றுலா தலமும் ஆகும். இவ்வருவியின் உச்சியில் அதாவது 125 அடியில் இருக்கும் ஒரு நீரூற்றிற்கு கல்யாண‌ தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இங்கிருந்துதான் அருவியாய் நீர் கீழே வருகிறது. புகைப்பட ஆர்வலர்கள் அவசியம் காண வேண்டிய இடமிது.

மாமல்லபுரம்

Mamallapuram

என் மேல் விழுந்த மழைத்துளியே என்ற மென்மையான மெலடி பாடலை இங்குதான் படமாக்கினார்கள். பல்லவர்களின் கோட்டையான மாமல்லபுரம் சிற்பங்கள், கட்டுமானங்களுக்குப் பெயர் பெற்றது. யுனஸ்கோவின் உலகப் பாரம்பரிய சின்னங்களில் ஒன்று. மேலும், கடற்கரையருகே கோவில் இருக்கும் சில இந்திய நகரங்களில் மாமல்லபுரம் முதன்மையானது.

பேக‌ல் கோட்டை, கேரளா

Bekal

ரஹ்மானின் கிளாசிக் பாடலான உயிரே உயிரே வந்து நெஞ்சோடு கலந்து விடு.... எடுக்கப்பட்ட இடம் காசர்கோடு மாவட்டத்தில் பேகல் என்னும் ஊரில் இருக்கும் மிகப்பெரும் கோட்டையான‌ பேக‌ல் கோட்டையில். பலர் இந்தப் பாடல் கோவாவில் எடுக்கப்பட்டது என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தக் கோட்டையின் சிறப்பம்சம் இது கடற்கரையோரம் அமைந்திருப்பது. கண்காணிப்பு கோபுரங்கள், தண்ணீர் தொட்டிகள், குகைகள், தளவாட கிடங்குகள் என்று பல வகை வரலாற்று ஈர்ப்புகள் இங்கு இருக்கின்றன.

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்