» »கடற்கரை ஓரத்தில் கண்கவர் கோட்டை... அசத்தும் அழகு பார்க்கப் போலாமா ?

கடற்கரை ஓரத்தில் கண்கவர் கோட்டை... அசத்தும் அழகு பார்க்கப் போலாமா ?

Posted By: Sabarish

PC : Vijay Bhadani

பொதுவாக கடற்கரை ஓரத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள் பெரும்பாலும் கால நிலை மாற்றத்தாலும், காற்றில் இருக்கும் உப்புத் தன்மையினாலும் விரைவில் அழிந்துவிடும். ஆனால், 450 வருடங்களைக் கடந்து இன்றளவும் ஒரு கோட்டை தன் கம்பீரத்தை இழக்காமல் உள்ளது என்றால் அது போர்த்துகேயர்களால் கட்டப்பட்ட கோட்டைதான்.

இந்தியாவில் போர்த்துகேயர்கள்

இந்தியாவில் போர்த்துகேயர்கள்

PC : Ed Sentner

இந்தியாவின் போர்த்துகீசிய காலனி ஆட்சியாளர்களின் காலத்தில் தங்களது நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், ராஜ்ஜியத்தை விரிவுபடுத்துவதற்கும் ஊரின் எல்லைப் பகுதிகளில் கோட்டைகள் கட்டப்பட்டது. குறிப்பாக மேற்கிந்திய கடற்கரைப் பகுதியில் இவர்களால் கட்டமைக்கப்பட்ட கோட்டை இந்தியாவில் வியப்படையச் செய்யும் சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.

தியூ கோட்டை

தியூ கோட்டை

PC : Ed Sentner

தியூ கோட்டை, இந்திய ஒன்றியப் பகுதியான தமன் தியூவுக்கு உட்பட்ட தியூ நகரத்தில் அமந்துள்ளது. போர்த்துகீசிய கோட்டை என்றழைக்கப்படும் இந்த தியூ கோட்டையானது 1535-ம் ஆண்டு முதல் 1541-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டது. இதில் சர்ச்சைக்குரிய விசயம் என்னவென்றால் அராபிய கவர்னரால் 1400-ம் ஆண்டு கட்டப்பட்ட கோட்டையின் சிதிலங்களின் மீது தியூ கோட்டை கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கோட்டை வரலாறு

கோட்டை வரலாறு

PC : Unknown

முகலாய பேரரசர் ஹுமாயுனின் ஆக்கிரமிப்பு முயற்சிகளை தடுக்கும் விதமாக போர்த்துகீசிய காலனி ஆட்சியாளர்கள் மற்றும் குஜராத் சுல்தான் பஹதூர் ஷா ஆகியோர் கூட்டாக இணைந்து இந்தக் கோட்டையை அமைத்துள்ளனர். சுமார், 29 மீட்டர் உயரமுள்ள இந்த கோட்டையானது ஃபோர்ட் ரோட் சாலையின் முடிவில் கடற்கரையை ஒட்டியவாறு கட்டமைக்கப்பட்டுள்ளது. மூன்று புறங்களில் கடல்நீரும், ஒருபுறம் கால்வாயும் எல்லைகளாக இந்தக் கோட்டை அமைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புகள்

பாதுகாப்புகள்

PC : Kumar Raushan

தியூ கோட்டையின் சுற்றுப்புறச் சுவர்களில் பீரங்கிகள் பொருத்துவதற்கான அமைப்புகள் உள்ளன. மேலும், கடல் அகழி மற்றும் இரண்டு சுற்றுச்சுவர்களுக்கு இடையே மணற்பாறைக்கற்களால் அகழி என இரண்டு அகழி அமைப்புகளையும் இந்த கோட்டை கொண்டிருக்கிறது.

சுற்றுலாத் தலமான கோட்டை

சுற்றுலாத் தலமான கோட்டை

PC : PHGCOM

இந்த கோட்டை வளாகத்திற்குள் மலர்த்தோட்டம், பூங்கா, பீரங்கிகள் வரிசையாக அணிவகுத்திருக்கும் நடைபாதை, சிறைச்சாலை மற்றும் கலங்கரை விளக்கம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. அகண்ட அரபிக்கடல் நீர்ப்பரப்பையும் சுற்றியுள்ள நிலப்பகுதிகளையும் இந்த கோட்டையிலிருந்து நன்றாக பார்த்து ரசிக்கலாம். இதனைக் கண்டு ரசிக்கவே ஆண்டுதோரும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் இங்கு சற்று அதிகமாக காணப்படும்.

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?

PC : Map

சென்னையில் இருந்து விமானம் வாயிலாக மும்பையை சென்றடைந்து அங்கிருந்து சாலைப் வழியாக தியூவை அடையலாம். நேரடி விமானச் சேவையும் குறிப்பிட்ட தினத்தில் உள்ளன. மட்கோன் எக்ஸ்பிரஸ், சென்னை எக்ஸ்பிரஸ், மும்பை எக்ஸ்பிரஸ், மும்பை மெயில் உள்ளிட்ட ரயில்கள் மூலமாகவும் சென்னையில் இருந்து மும்பை பெற்று பின் தியூவை அடையலாம்.

Read more about: travel, பயணம்