கோடைகாலம் வந்து விட்டது. கோடை காலம் துவங்கி விட்டால் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இருந்தே வெயில் சுட்டெரிக்க துவங்கி விடும். அதிலும் இந்தியாவில் சில நகரங்களில் இந்த சமயத்தில் குறிப்பாக மே முதல் ஜூன் வரை மிக கடுமையான வெயில் கொளுத்தும். கோடை காலத்தில் இந்த ஊர்களுக்கு மட்டும் போய் விடாதீர்கள். அப்படி கோடை காலத்தில் செல்லாமல் தவிர்க்க வேண்டிய அந்த நகரங்களைப் பார்ப்போம்.

ஜெய்ப்பூர்
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூரில் மே முதல் ஜூன் வரை சாதாரணமாகவே கிட்டத்தட்ட 48 டிகிரி செல்சியஸ் வரை வெயில் வெளுத்தி எடுக்கும். இதுவே குறைந்த அளவு தான் என சொல்லப்படுகிறது. ஏப்ரல் மாதத்தில் இருந்தே இங்கு பகலில் மிக கடுமையான வெப்ப நிலை இருக்கும்
அகமதாபாத்
குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் மழைக்காலம் தவிர மற்ற காலங்களில் மிகவும் வறட்சியான வானிலை தான் இருக்கும். கோடை காலத்தில் மிகவும் சூடாக இருக்கும். மே - ஜூன் வரையிலான காலகட்டத்தில் 46 டிகிரி செல்சியஸ் வரை வெயில் வறுத்தெடுக்கும்.
டெல்லி
தலைநகரான டெல்லி பனிக்கும், மாசுக்கும் மட்டுமல்ல, வெயிலுக்கும் கூட பிரபலமானதுதான். கோடை காலத்தில் இங்கு 48 டிகிரி செல்சியஸ் வரை வெயில் சுட்டெரிக்கும். மிகவும் வறண்ட வானிலை காணப்படுவதுடன், அவ்வப் போது புழுதி புயலை வீசுவது உண்டு. இரவு நேரங்களில் கூட வெப்பம் தணியாமல் இருக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஜெய்சால்மர்
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சால்மர் பாலைவன நகரமாகும். வழக்கமாக கோடை காலம் என்றால் மார்ச் துவங்கி ஜூன் மாதம் வரை தான் சொல்லுவார்கள். ஆனால் ஏப்ரல் துவங்கி, ஆகஸ்ட் மிகவும் சூடாக இருக்கும். இங்கு 50 டிகிரி செல்சியஸ் வரை வெயில் உக்கிரமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப்
பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா, அம்ரிஸ்தர், சண்டிகர் ஆகிய நகரங்களில் வெயில் காலத்தில் 44 டிகிரி அளவுக்கு வெயில் கொளுத்தி எடுக்கும். மற்ற காலங்களில் பஞ்சாப்பில் இருப்பது தனி சுகம் என்றாலும், கோடை காலத்தில் மிக கடுமையான வெப்பத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
நாக்பூர்
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் கோடை காலத்தில் 45 டிகிரியைத் தாண்டி வெயில் கொளுத்தும். காலை நேரத்தில் குறைந்தபட்சமாக வெப்பநிலை 17.6 டிகிரியாக இருந்து நேரம் செல்ல செல்ல படிபடியாக வெயிலின் தாக்கம் கடுமையாக ஆரம்பிக்கும்.
பிகானீர்
ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானீர் இன்னொரு அக்னி பூமியாகும். இங்கு வெயில் காலத்தில் 47 டிகிரி செல்சியஸ் வரை வெயில் மக்களைப் படுத்தி எடுக்குமாம். மழை பெய்தாலும் அதிகமாக பெய்யும், வெயில் அடித்தாலும் மிக அதிகமாக அடிக்கும் ஒரு இடம் இதுவாகும்.

குவாலியர்
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் மே - ஜூன் காலகட்டத்தில் 45 டிகிரி செல்சியைஸத் தாண்டி வெயில் வாட்டி எடுக்கும். ஆண்டு முழுவதுமே மழை குறைவாக இருக்கும் ஒரு பகுதி இது. இங்கு கோடை காலத்தில் பயணம் செய்வது அவ்வளவு நல்லதல்ல.
பூஜ்
குஜராத் மாநிலத்தின் பூஜ் ஒரு வெப்ப மண்டலப் பகுதி. வெயில் காலத்தில் இங்கு 40 டிகிரி அளவுக்கு வெயில் இருக்கும். சர்வ சாதாரணமாக வியர்த்து விறுவிறுக்க வைக்கும்.கோடை காலத்தில் பருவ மழை ஒரு பக்கம் பெய்தாலும், மற்றொரு பக்கம் அதற்கு போட்டியாக வெயிலும் வாட்டி வதைக்கும்.
ஜான்சி
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் கோடைகாலம் வந்து விட்டாலே போதும் அனல் கொளுத்தும். அதிகபட்சம் 47 டிகிரியைத் தாண்டி வெயில் ஓடிக் கொண்டிருக்குமாம். குளிர் காலத்தில் அதிகமாக குளிரும் பகுதியும் இதுவாக தான் இருக்கும்.



Click it and Unblock the Notifications



