Search
  • Follow NativePlanet
Share
» »அடிச்ச மழையில ஆர்ப்பரிக்கும் அருவிகள் - தமிழ்நாட்டில் இத்தனை அருவிகளா?

அடிச்ச மழையில ஆர்ப்பரிக்கும் அருவிகள் - தமிழ்நாட்டில் இத்தனை அருவிகளா?

தமிழகத்தில் இருக்கும் அருவிகளைப் பார்த்தால் நமக்கு என்ன மனதில் இருந்தாலும், அவையெல்லாம் மறந்து ஒரு குளியல் போட்டு குதூகலம் அடையத் தோன்றும். அமைதியே உருவான சூழலில் அருவியின் சல சல சத்தத்தை காதில் கேட்ப

By Udhaya

தமிழகத்தில் இருக்கும் அருவிகளைப் பார்த்தால் நமக்கு என்ன மனதில் இருந்தாலும், அவையெல்லாம் மறந்து ஒரு குளியல் போட்டு குதூகலம் அடையத் தோன்றும். அமைதியே உருவான சூழலில் அருவியின் சல சல சத்தத்தை காதில் கேட்பவருக்கோ இளையராஜா இசையை நிசப்தத்தில் உணர்வதுபோல தோன்றும். அருவிகள் இயற்கையின் கொடை. எங்கோ தோன்றி, எங்கோ முடியும் நீர் ஆதாரங்கள், மழையாய், அருவிகளாய், ஆறுகள், ஏரி, குளங்களாய் முடிவில் கழிமுகங்களாய் உருமாறி கடலில் கலக்கின்றன. இவற்றின் பயணத்தில் நாமும் கொஞ்ச நேரம் கலந்துகொள்வோம். தமிழகத்தின் அருவிகளைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

தமிழகத்தின் அருவிகள்

தமிழகத்தின் அருவிகள்

உலக்கை அருவி, கோவைக் குற்றாலம், தேக்கந்தோட்டம் நீர்வீழ்ச்சி, கும்பக்கரை நீர்வீழ்ச்சி, குதிரையாறு அணை நீர்வீழ்ச்சி, ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி, மங்கீ பால்ஸ், குற்றாலம், ஒக்கேனக்கல், அகத்தியர் அருவி, மாசிலா நீர்வீழ்ச்சி, அய்யனார் நீர்வீழ்ச்சி, மணிமுத்தாறு, கட்டாரி அருவி, கேத்தரின் நீர்வீழ்ச்சி, திற்பரப்பு அருவி, சின்னக்கல்லார் அருவி , சுருளி நீர்வீழ்ச்சி, பியர் ஷோலா நீர்வீழ்ச்சி, சின்ன சுருளி, எல்க் நீர்வீழ்ச்சி, செண்பகாதேவி நீர்வீழ்ச்சி, கல்யாண தீர்த்தம் அருவி, காரையாறு அருவி, ஜலகம்பரி நீர்வீழ்ச்சி, குட்லாடம்பட்டி அருவி, பஞ்சலிங்க நீர்வீழ்ச்சி, குரங்கருவி, கல்கந்தி அருவி, புலி அருவி, தேன் அருவி, கடேரி அருவி, காளிகேசம் அருவி, குத்தரபஞ்சான் அருவி, கோதையாறு அருவி, கௌர் வெள்ளையன் நீர்வீழ்ச்சி, மயிலூற்று அருவி, வட்டப்பாறை அருவி, வைதேகி அருவி என நிறைய அருவிகள் காணப்படுகின்றன.

Vfuller09

 உலக்கை அருவி

உலக்கை அருவி


தென்னிந்தியாவில் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சிகளில் இதுவும் ஒன்றாகும். உள்ளூர் நம்பிக்கைகளின்படி உலக்கையருவி நீர்வீழ்ச்சி மருத்துவ குணங்கள் நிறைந்ததாகக் கருதப்படுகிறது. தோல்வியாதிகளையும், மூட்டு வலிகளையும் குணப்படுத்தும் தன்மை கொண்ட இந்நீர்வீழ்ச்சி, அதில் குளிக்கும் வயதானவர்கள் புத்துணர்ச்சி பெறவும், சக்தி பெறவும் உதவுகிறது.

எங்குள்ளது?

மிக முக்கியமான சுற்றுலாத் தளமான ஓலக்குருவி நீர்வீழ்ச்சி நாகர்கோவிலில் இருந்து 20கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது. இயற்கைச் சூழலில் அமைந்திருக்கும் இந்நீர்வீழ்ச்சிக்கு கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் தவறாமல் வருகை தருகிறார்கள்.

எப்படி செல்லலாம்

நாகர்கோயில் நகரத்தில் இருந்தே நீர்வீழ்ச்சிக்கு சாலை வசதி இருக்கிறது. இருப்பினும் நீர்வீழ்ச்சிக்கு சற்று தொலைவிலேயே இந்த சாலை முடிவுறுகிறது. நீர்வீழ்ச்சியை அடைய சிறிது தொலைவு நடக்கவேண்டும். இந்த நடைபாதை சிறிது தொலைவே என்றாலும் நடைபாதையைச் சுற்றி இருக்கும் இயற்கை சூழல் காண்போரை மயங்கச் செய்யும் அழகுடன் விளங்குகிறது.

Karthi.dr

 கோவை குற்றாலம்

கோவை குற்றாலம்

புகழ்பெற்ற சிறுவாணி அணை இந்த நீர்வீழ்ச்சிக்கு மேல் தான் கட்டப் பட்டுள்ளது. இந்த அணை மற்றும் அதைச் சுற்றியுள்ள நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களின் நிர்வாகத்திற்கு வனத்துறையே பொறுப்பு. கோவை குற்றாலத்தைக் காண வனத்துறையின் சிறப்பு அனுமதி பெற்ற பிறகே செல்ல முடியும்.

எங்குள்ளது

கோவை குற்றாலம் கோயம்புத்தூர் அருகிலுள்ள புகழ் பெற்ற சுற்றுலாத் தலம் ஆகும். பல அடுக்குகள் கொண்ட நீர்வீழ்ச்சியின் ரம்மியமான தோற்றம் இங்கு காணக் கிடைப்பதால் இது புகழ் பெறுகிறது. இந்த அருவி சிறுவாணி ஆற்றிலிருந்து பிறக்கிறது. இந்த சிகரம் கோயம்புத்தூரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பகுதியாக உள்ளது.

எப்படி செல்வது

கோயம்புத்தூரில் இருந்து 35 கி.மீ. தொலைவில் எளிதில் அடையக்கூடிய இடமாக கோவை குற்றாலம் அமைந்துள்ளது.
நகரிலிருந்து இங்கு வர குறிப்பிட எண்ணிக்கையிலான பேருந்துகளே உள்ளன. ஐந்து மணிக்கு மேல் இங்கு செல்ல யாரும் அனுமதிக்கப்படுவதில்லை என்பதால் குறிப்பிட்ட சமயத்திற்கு முன்பாகவே இந்த இடத்தைப் பார்வையிட வேண்டும்.

VasuVR

 தேக்கந்தோட்டம் நீழ்வீழ்ச்சி

தேக்கந்தோட்டம் நீழ்வீழ்ச்சி

பழனிக்கு அருகில் இருக்கும் தேக்கந்தோட்டம் என்ற கிராமத்தில் இந்த தேக்கந்தோட்டம் நீழ்வீழ்ச்சி அமைந்திருக்கிறது. இந்த நீர்வீழ்ச்சியிலிருந்து குழாய்கள் மூலமாக தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு அது பழனி மலையிலிருக்கும் நீர் தேக்கத் தொட்டியில் தேக்கப்படுகின்றது. இந்த நீர் தேக்கத் தொட்டி வாட்டர் டேம் என்று அழைக்கப்படுகிறது.

எப்படி அடைவது

தேக்கந்தோட்டம் கிராமத்தில் இறங்கி 4 கிமீ தூரம் நடந்தால் இந்த நீர்வீழ்ச்சியை அடையலாம். மேலும் பழனியில் இருந்து தேக்கந்தோட்டம் கிராமத்திற்கு பல பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த நீர்வீழ்ச்சியை அடைய மலைமீது ஏறிச் செல்ல வேண்டும்.

Mprabaharan

எலிவால் அருவி

எலிவால் அருவி


தலையாறு அல்லது எலி வால் அருவி என்று அழைக்கப்படும் இது திண்டுக்கல் மாவட்டம் பழநி மலைகளில் அமைந்துள்ளது. இதன் உயரம் 297 மீ அதாவது 975 அடி ஆகும். தமிழ்நாட்டின் உயரமான அருவி இது. இந்தியாவின் ஆறாவது உயரமான அருவி இதுவாகும்.

எப்படி அடைவது

கொடைக்கானல் சாலையிலிருந்து டம் டம் பாறை நோக்கி சென்று அங்கிருந்து 3.6 கிமீ தூரம் மேற்கு திசையில் பயணித்தான் இந்த அருவியை அடையலாம்.

Barbaragailblock

 கும்பக்கரை நீர்வீழ்ச்சி

கும்பக்கரை நீர்வீழ்ச்சி

மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள கொடைக்கானல் மலைப்பகுதிகளில் ஊற்றெடுத்துள்ள அருவிதான் கும்பக்கரை நீர்வீழ்ச்சியாகும். தேனியிலிருந்து 20 கிமீ தொலைவும், பெரிய குளத்திலிருந்து 9 கிமீ தொலைவும் உள்ள கும்பக்கரை என்ற இடத்தில் தான் இந்த அருவி உள்ளது.

இயற்கையாகவே உருவாகியுள்ள இந்த நீர்வீழ்ச்சியைச் சுற்றிலும் எழும் பறவைகளின் கீச்சிடும் குரல்கள் சுற்றூலாப் பயணிகளுக்கு நல்ல வரவேற்பளிக்கும் அம்சமாகும். இந்த கும்பக்கரை நீர்வீழ்ச்சி இரண்டு அடுக்குகளையுடையது.

400 மீ உயரத்திலிருந்து விழும் இந்த அருவியின் நீர், மிருகங்களின் பெயரால் அழைக்கப்பட்டு வரும் அதனைச் சுற்றியுள்ள பாறைகளில் விழுந்து சேகரிக்கப்பட்டு விழுந்து கொண்டிருக்கிறது.

இந்த நீர்வீழ்ச்சிக்கு அருகில் ஒரு முருகப் பெருமான் சிலையும் உள்ளது. இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்வதற்கு ஒரு உள்ளூர் வழிகாட்டியை அமர்த்திக் கொள்ளும் பட்சத்தில், பாறைகளில் வழுக்குதல் மற்றும் பிற ஆபத்துகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

வருடத்தின் எந்த நாட்களிலும் சென்று வர தகுந்த சுற்றுலாத் தலமான கும்பக்கரை நீர்வீழ்ச்சிக்கு, கோடைகாலங்களில் நீர்வரத்து அதிகமாக இருக்கும்.


SarThePhotographer

 அங்குத்தி சுனை அருவி

அங்குத்தி சுனை அருவி

ஜவ்வாது மலைத் தொடரில் அமைந்துள்ள அற்புதமான அருவி இதுவாகும். காண்போரை கண் மயங்கச் செய்யும் அளவுக்கு சிறப்பான அருவி. பாதுகாக்கப்பட்ட இடமாக இருக்கும் இந்த காட்டுக்குள் கொஞ்சம் சிரமப்பட்டு சென்றுவிட்டால், அழகிய அருவியை காணலாம்

எப்படி அடைவது

சிங்காரப்பேட்டை - திருப்பத்தூர் சாலையில் சிங்காரப்பேட்டையிலிருந்து 7 கிமீ தொலைவில் கோவிந்தாபுரம் எனும் கிராமம் உள்ளது. அங்கிருந்து 5 கிமீ பயணித்தால் ஜவ்வாது மலையை அடையலாம். இங்குதான் அந்த அருவி உள்ளது.

TNSEponnthenKGI

 அய்யாறு நதி

அய்யாறு நதி

அய்யாறு நதி சுமார் 300 அடி உயரத்தில் இருந்து விழுவதை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி என அழைக்கிறார்கள். சுற்றிலும் மலைகள் சூழ்ந்த இந்த நீர்வீழ்ச்சி அறப்பலீஸ்வரர் கோவிலின் அருகாமையில் அமைந்திருக்கிறது.

கோவிலில் இருந்து ஆரம்பிக்கும் படிகள் நீர்வீழ்ச்சியின் முடிவு வரை நீள்கிறது. மொத்தம் ஆயிரம் எண்ணிக்கையில் இருக்கும் படிகளின் உயரம் சற்றே அதிகமாக இருப்பதால் இப்படிகளில் ஏறுவதும், இறங்குவதும் சோர்வு தரும் ஒன்றாகும்.

வயதானவர்களும், உடற்கோளாறுகள் கொண்டோரும் இப்படிகளை உபயோகிக்கும்போது அவ்வப்போது ஓய்வெடுத்து மெதுவாகச் செல்வது நலம். படிகளுக்கு நடுவே அமைந்திருக்கும் காட்சிக்கோணங்கள் ரம்மியமாகவும், பயணிகள் ஓய்வெடுக்கும் இடமாகவும் விளங்குகிறது.

ஆகாயத்தில் இருந்து விழுவதுபோல தோற்றமளிக்கும் இந்த நீர்வீழ்ச்சியை அதன் உச்சியில் இருந்து காணுவது மனதைப் பறிக்கும் இயற்கைக் காட்சியாக இருக்கும். பாறைகளில் படிந்திருக்கும் பாசியால் வழுக்கிவிழாமல் கவனமாக இருத்தல் அவசியம்.

 மாசிலா நீர்வீழ்ச்சி

மாசிலா நீர்வீழ்ச்சி

ஆகாய கங்கை போல மிகப்பெரிய நீர்வீழ்ச்சி இல்லையென்றாலும் சுமார் 200 அடி உயரத்தில் இருந்து விழும் மாசிலா நீர்வீழ்ச்சி மிகவும் எழிலான தோற்றம் கொண்டது. இதன் இயற்கைச் சூழலுக்காகவே பல சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் இங்கே நேரம் செலவிடுகின்றனர். நீர்வீழ்ச்சியின் முடிவில் சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக மேம்பட்ட வாகனநிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இங்கே நிறுத்தப்படும் வாகனங்களுக்கு தலா 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. மாசிலா அருவியில் குளிப்பதை சுற்றுலாப்பயணிகள் மிகவும் விரும்புகிறார்கள். நீர்வீழ்ச்சியின் உச்சியில் அமைந்திருக்கும் மாசி பெரியசாமி கோவிலில் இருந்து பார்க்கும் போது தெரியும் பச்சை பசேல் என்ற இயற்கைச் சூழல் வேறு உலகத்திற்கு சென்றதை போன்ற இன்பத்தை தருவதாக இருக்கிறது. வியாபாரமயம் ஆகாத கொல்லிமலையின் பல அழகான இடங்களில் இதுவும் ஒன்றாகும்.

 சின்னக்கல்லார் அருவி

சின்னக்கல்லார் அருவி

வால்ப்பாறை மலைப்பிரதேசத்தில் இருந்து 26 கிலோமீட்டர்கள் தொலைவில் சின்னக்கல்லார் அருவி அமைந்து இருக்கிறது. இவ்விடம் நாட்டிலேயே இரண்டாவது அதிகமான மழைப்பொழிவை பெருவதால், இது தென் இந்தியாவின் சீராப்புஞ்சி என்று அழைக்கப்படுகின்றது. சுற்றிலும் பச்சைப்பசுமையினால் சூழப்பட்டு இருக்கும் சின்னக்கல்லார் அமைதியான சூழலை கொடுக்கின்றது. அருவிக்கு மேலே அமைக்கப்பட்டு இருக்கும் தொங்கு பாலம் பயணத்தை சாகசம் நிறைந்ததாக மாற்றுகின்றது. சின்னக்கல்லார் எப்போதுமே மேகங்களினாலும், பனியினாலும் மூடப்பட்டு காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. வால்ப்பாறையில் இருந்து சின்னக்கல்லாருக்கு பயணம் செய்வது சிறந்த அனுபவமாக இருக்கும்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X