பன்ஸ்வாரா – நூறு தீவுகளின் நகரம்

பன்ஸ்வாரா நகரம் ராஜஸ்தான் மாநிலத்தின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ளது. 5,307 ச.கி.மீ பரப்பளவில் பரந்துள்ள பன்ஸ்வாரா மாவட்டத்தின் தலைநகரமாகவும் இது செயல்படுகிறது. சராசரியாக 302 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த பன்ஸ்வாரா நகரம் ஒரு காலத்தில் மஹரவால் வம்சத்தை சேர்ந்த ஜக்மல் சிங் என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட ராஜ்ஜியமாகவும் இருந்துள்ளது. இதன் பெயரிலுள்ள ‘பன்ஸ்’ எனும் சொல் இப்பிரதேசத்தில் அதிகமாக காணப்படும் மூங்கில் காடுகளின் காரணமாக பிறந்துள்ளது. பன்ஸ்வாரா மாவட்டத்தில் பாயும் மாஹி ஆற்றில் ஏராளமான தீவுகள் அமைந்திருப்பதால் இது நூறு தீவுகளின் நகரம் என்றும் பிரசித்தமாக அழைக்கப்படுகிறது.

ஒரு காலத்தில் ராஜ சமஸ்தானமாக விளங்கியுள்ள இந்த பன்ஸ்வாரா மாவட்டம் மஹரவால் வம்சத்தாரால் ஆளப்பட்டிருக்கிறது. வகாத் அல்லது வக்வார் என்றழைக்கப்பட்ட கிழக்குப்பகுதியாக இது திகழ்ந்திருக்கிறது.

இப்பகுதியை ஆண்ட பீல் வம்ச மன்னரான பன்சியா என்பவரே இந்த பிரதேசத்திற்கு பன்ஸ்வாரா என்று பெயரிட்டதாகவும் நம்பிக்கைகள் நிலவுகின்றன. பின்னாளில் அவரை தோற்கடித்து கொன்ற ஜக்மல் சிங் இப்பகுதியில் மஹரவால் வம்சத்தின் ஆட்சியை நிறுவியதாக இந்தக்கதைகள் தெரிவிக்கின்றன.

மற்றொரு ஜாலியன் வாலாபாக் துயரம்

1913ம் ஆண்டில் பீல் சமூகத்தினர் ஆளும் அரசுக்கெதிராக கோவிந்த்கிரி மற்றும் புஞ்சா ஆகியோர் தலைமையில் புரட்சியில் இறங்கினர். இருப்பினும் இந்த போராட்டம் முரட்டுத்தனமாக அடக்கப்பட்டதோடு, மன்கர் மலைப்பகுதியில் அமைதியாக கூட்டத்தில் ஈடுபட்டிருந்த 100 பீல் சமூகத்தாரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த துயர வரலாற்றுச் சம்பவத்தின் காரணமாக இந்த ஸ்தலம் ‘மற்றுமொரு ஜாலியன் வாலாபாக்’ என்ற பெயரைப் பெற்றுள்ளது. அன்றிலிருந்து இந்த மன்கர் மலைப்பகுதி புனித இடமாக கருதப்பட்டு ‘மன்கர்தாம்’ என்று அழைக்கப்படுகிறது.

பூர்வகுடி மக்களும் மொழியும்

இந்தியா சுதந்திரம் பெற்றபிறகு பன்ஸ்வாரா சமஸ்தானமும் குஷால்கர் குறுநில அரசும் ஒன்றிணைக்கப்பட்டு 1949ம் ஆண்டில் ராஜஸ்தான் மாநிலத்துடன் சேர்ந்து பன்ஸ்வாரா என்ற தனி மாவட்டமாக பிறந்தது.

பீல் சமூகத்தினர், பீல் மீனா சமூகத்தினர், தமோர், சர்போட்டா மற்றும் நினாமா ஆகிய சமூகத்தினர் இங்கு பூர்வகுடிகளாக வசிக்கின்றனர். தவிர படேல்கள், ராஜபுத்திரர்கள், பிராம்மணியர்கள் மற்றும் மஹாஜன் போன்ற இனத்தாரும் இங்கு வசிக்கின்றனர். குஜராத்தி மொழியும் மேவாரி மொழியும் கலந்த வாக்ரி எனும் மொழி பரவலாக இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.

முக்கிய சுற்றுலா அம்சங்கள்

திரிபுர சுந்தரி, மாஹி தாம், காக்டி பிக்னிக் ஸ்தலம் மற்றும் மாடரேஷ்வர் சிவன் கோயில் போன்றவை இங்குள்ள சில முக்கியமான சுற்றுலா ஸ்தலங்களாகும். அப்துல்லா பிர், ஆனந்த் சாஹர் ஏரி, பீம் குண்ட், அண்டேஷ்வர் ஜெயின் கோயில் மற்றும் சீஞ்ச் பிரம்மா கோயில் போன்றவையும் இதர் முக்கியமான விசேஷ ஸ்தலங்களாக அறியப்படுகின்றன.

பயண வசதிகள்

பன்ஸ்வாராவிலிருந்து 181 கி.மீ தூரத்திலுள்ள உதய்பூர் விமான நிலையம் அருகிலுள்ள விமானத்தளமாக அமைந்துள்ளது. இங்கிருந்து ஜோத்பூர், ஜெய்ப்பூர், மும்பை மற்றும் டெல்லிக்கு தினசரி விமான சேவைகள் உள்ளன.

ரட்லாம், துங்கார்பூர், தோகாட் மற்றும் ஜெய்ப்பூர் போன்ற நகரங்களிலிருந்து பன்ஸ்வாரா நகரத்துக்கு பேருந்து சேவைகளும் உள்ளன. ஆகஸ்ட் மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரையிலான இடைப்பட்ட பருவம் பன்ஸ்வாரா பகுதிக்கு சுற்றுலா மேற்கொள்ள உகந்ததாக உள்ளது.

Please Wait while comments are loading...