உதய்பூர் – ராஜ மஹோன்னத நினைவுகளில் மூழ்க வைக்கும் ஏரி நகரம்

ஏரிகளின் நகரம் என்று  பிரசித்தமாக அறியப்படும் உதய்பூர் ஒரு எழில் மிளிரும் வரலாற்று ஸ்தலமாகும். இது தன் மஹோன்னதமான கோட்டைகள், கோயில்கள், அழகான ஏரிகள், அரண்மனைகள் மற்றும் காட்டுயிர் சரணாலயங்களுக்காக புகழ் பெற்று விளங்குகிறது. இரண்டாம் மஹாராணா உதய் சிங் இந்நகரத்தை 1559ம் ஆண்டில் தோற்றுவித்துள்ளார். உதய்பூர் நகரம் இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக அறியப்படுவதோடு மட்டுமல்லாமல் தன் வளமான பண்பாட்டு மற்றும் பாரம்பரிய அம்சங்களுக்கு கீர்த்தி பெற்றும் விளங்குகிறது.

பிச்சோலா எனும் அற்புதமான செயற்கை ஏரி 1362ம் ஆண்டில் உருவாக்கப்பட்டதாகும். இது இந்த பிரதேசத்தின் நீர்த்தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கட்டப்பட்ட அணையின் காரணமாக உருவான நீர்த்தேக்கமாகும்.

இந்த அணை நீர்த்தேக்கத்தைச் சுற்றிலும் காணப்பட்ட இயற்கை எழில் சூழலால் கவரப்பட்டு மன்னர் மஹாராணா உதய் சிங் இந்த ஏரிக்கரையை ஒட்டியே உதய்பூர் எனும் இந்த நகரத்தை நிர்மாணித்தார்.

பின்னர், ஃபதேஹ் சாஹர் எனும் மற்றொரு ஏரியும் 1678ம் ஆண்டு மஹாராணா ஃபதேஹ் சிங் மன்னரால் உருவாக்கப்பட்டது. இவை தவிர ராஜாசாமந்த் ஏரி, உதய்சாகர் ஏரி மற்றும் ஜெய்சாமந்த் ஏரி போன்ற அற்புதமான ஏரிகளும் உதய்பூர் பிரதேசத்தில் அமைந்துள்ளன.

ராஜபுதன வம்சத்தின் மஹோன்னதத்தை பறை சாற்றும் பல அரண்மனைகளும் கோட்டைகளும் இங்கு நிரம்பியுள்ளன. ‘சிட்டி பேலஸ்’ என்று அழைக்கப்படும் நகர அரண்மனை ஒரு கம்பீரமான வரலாற்று நினைவுச்சின்னமாகும். இது மஹாராஜா உதய் மிர்ஸா சிங் அவர்களால் 1559ம் ஆண்டில் கட்டப்பட்டிருக்கிறது.

பிரதான அரண்மனையில் மொத்தமாக 11 அரண்மனைகள் அடங்கியுள்ளன. இது தவிர, ‘லேக் பேலஸ்’ என்று அழைக்கப்படும் ஏரி அரண்மனை தன் நிகரற்ற கலையம்ச அழகுக்காக புகழ் பெற்றுள்ளது.

இந்த அரண்மனை தற்சமயம் ஒரு ஐந்து நட்சத்திர விடுதியாக பயன்பாட்டில் உள்ளது. இங்குள்ள அறைகள் வண்ணம் பூசிய கண்ணாடிகள், இளஞ்சிவப்பு ரத்தினக்கற்கள் மற்றும் தாமரை மலர்கள் போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

உதய்பூரில் உள்ள மற்றொரு பெருமை வாய்ந்த கட்டமைப்பு கடல் மட்டத்திலிருந்து 944 மீ உயரத்தில் உருவாக்கப்பட்டுள்ள சஜ்ஜன்கர் அரண்மனை ஆகும். இது மழைக்கால அரண்மனை என்று அழைக்கப்படுகிறது.

மழை மேகங்களை அரண்மனை மேல்தளத்திலிருந்து பார்ப்பதற்காகவே மஹாராணா சஜ்ஜன் சிங் இந்த அரண்மனையை 1884ம் ஆண்டில் கட்டியுள்ளார். இவை தவிர, இதர முக்கிய மாளிகைகளான பாகோர் கி ஹவேலி மற்றும் ஃபதேஹ் பிரகாஷ் அரண்மனை போன்றனவும் உதய்பூரில் அமைந்துள்ளன.

நேரம் இருப்பின் சுற்றுலாப்பயணிகள் இங்குள்ள பல அருங்காட்சியகங்களுக்கும், காட்சிக் கூடங்களுக்கும் விஜயம் செய்யலாம். வரலாற்று காலத்தைச் சேர்ந்த பலவிதமான சிறப்பம்சம் பொருந்திய சேகரிப்புகளை அங்கே காணலாம்.

‘சிட்டி பேலஸ் மியூசியத்தில் ராஜவம்சம் தொடர்பான பல அரிய பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இது தவிர, ஃபதேஹ் பிரகாஷ் அரண்மனையின் ஒரு அங்கமாக ஸ்படிகக்கண்ணாடி கலைக்கூடத்தையும் பயணிகள் பார்த்து ரசிக்கலாம். இங்கு அற்புதமான ஓஸ்லர் படிகக்கண்ணாடி கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும் அழகிய சொகுசு இருக்கைகள், ஆபரண வேலைப்பாடுகளுடன் கூடிய தரை விரிப்புகள், ஸ்படிக வேலைப்பாடு கொண்ட ஆடைகள், நீர் ஜாடிகள் மற்றும் பீங்கான் பொருட்கள் ஆகிய பொருட்களையும் இங்கு காணலாம். மற்றொரு பிரசித்தமான அருங்காட்சியகமான ‘அஹார் தொல்லியல் அருங்காட்சியகம்’ புராதன கால மக்களின் வாழ்க்கை முறையோடு தொடர்புடைய அரிய பொருட்களைக் கொண்டுள்ளது.

சஹேலியான் கி பாரி, படா மஹால், குலாப் பாக், மஹாராணா பிரதாப் மெமோரியல், லக்ஷ்மி சௌக் மற்றும் தில் குஷால் போன்ற பல அழகிய தோட்டங்களும் மாளிகைகளும் இங்கு நிறைந்துள்ளன.

மஹாராணா உதய் சிங்’கால் கட்டப்பட்ட கோல் மஹால் அல்லது ராஜ் அங்கன் என்று அறியப்படும் மாளிகை உதய்பூரின் பிரதான சுற்றுலா அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது.

கைவினைக் கலைப்பொருட்களுக்கு பெயர் பெற்ற ஷில்ப் கிராம் என்றழைக்கப்படும் கிராமத்துக்கும் பயணிகள் விஜயம் செய்யலாம். இன்னும் ஏராளமான சுற்றுலா அம்சங்களாக உதய்பூரில் ஜக் மந்திர், சுகாடியா சர்க்கிள், நேரு கார்டன், ஏக்லிங்க்ஜி கோயில், ராஜீவ் காந்தி பூங்கா, சாஸ்-பாஹு கோயில் மற்றும் ஷீநாத்ஜி கோயில் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

மஹாராணா பிரதாப் விமான நிலையம் என்று அழைக்கப்படும் தபோக் விமான நிலையம் உதய்பூரிலிருந்து 22 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. முக்கிய இந்திய நகரங்கள் யாவும் தினசரி விமான சேவைகளால் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

மேலும் உதய்பூர் அகல ரயில் பாதை மூலம் இந்திய முக்கிய நகரங்களுடன் ரயில் சேவைகளால் இணைக்கப்பட்டுள்ளது. சாலை மார்க்கத்தில் பயணிக்க விரும்பும் பயணிகளுக்காக ராஜஸ்தான் மாநிலத்தின் பல நகரங்களிலிருந்தும் பேருந்து வசதிகளை நல்ல முறையில் உதய்பூர் பெற்றுள்ளது.

வருடம் முழுவதுமே வெப்பமான வறண்ட பருவநிலையை உதய்பூர் பெற்றுள்ளது. செப்டம்பர் மற்றும் மார்ச் மாதத்துக்கு இடைப்பட்ட காலம் இங்கு விஜயம் செய்வதற்கு உகந்த பருவமாகும்.

கோடைக்காலத்தின் உச்சத்தில் இங்கு சுற்றுலா மேற்கொள்வதை பெரும்பாலும் பயணிகள் தவிர்க்கின்றனர். அக்காலத்தில் இங்கு வெப்பநிலை 45° C வரை உயர்ந்து கடுமையாக காணப்படுகிறது.

மழைக்காலத்தில் இப்பிரதேசம் மிகக்குறைந்த அளவு மழையையே பெறுகிறது. ஆகவே இங்கு சுற்றுப்புறச்சூழலில் ஈரப்பதம் அதிகமாக காணப்படும். குளிர்காலத்தில் உதய்பூரின் சீதோஷ்ணநிலை மிக இனிமையாக காணப்படுவதோடு சுற்றுலாவுக்கும், நகரத்தை ரசிப்பதற்கும் ஏற்றதாக உள்ளது.

Please Wait while comments are loading...