பிச்சோலா ஏரி, உதய்பூர்

பிச்சோலா ஏரி 1362ம் ஆண்டில் மனிதமுயற்சியில் உருவாக்கப்பட்ட ஒரு அற்புதமான ஏரியாகும். பிச்சோலி எனும் கிராமத்தின் நினைவாக இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது. நீர்த்தேவைக்காக கட்டப்பட்ட ஒரு அணையால் உருவான நீர்த்தேக்கமே இந்த பிச்சோலா ஏரியாகும். இந்த ஏரியின் ரம்மியமான சூழலில் மனதைப் பறிகொடுத்த மஹாராணா உதய் சிங் இதன் கரையிலேயே ஒரு அழகிய நகரத்தை நிர்மாணிக்க முடிவெடுத்தபின்னர் பிறந்ததுதான் உதய்பூர் நகரம்.அதிகபட்சமாக 8.5 மீ ஆழத்தை கொண்ட இந்த ஏரி 696 ஹெக்டேர் பரந்துள்ளது. காலப்போக்கில் இந்த ஏரியைச் சுழ்ந்துள்ள பகுதியில் கோயில்கள், அரண்மனைகள் மற்றும் மாளிகைகள் உருவாக்கப்பட்டன.

இந்த ஏரிப்பகுதியில் ‘நடினி சபுத்ரா’ மேடைமண்டபத்தை பயணிகள் பார்க்கலாம். நடினி எனும் கயிற்று நடைப்பெண் ஒருத்தியின் கதை மற்றும் அவள் உதய்பூர் ராஜவம்சத்திற்கு விடுத்த சாபம் ஆகியவற்றின் பின்னணியில் உருவாக்கப்பட்ட நினைவுச்சின்னமே இந்த மேடை மண்டபம். சுற்றுலாப்பயணிகள் இந்த ஏரிக்கு செல்வதற்கு டோங்கா எனும் குதிரை வண்டி, டாக்சிகள் மற்றும் ஆட்டோ போன்றவற்றை வாடகைக்கு அமர்த்திக்கொள்ளலாம்.பிச்சோலா ஏரிக்குள்ளேயே நான்கு தீவுத்திட்டுகள் அமைந்துள்ளன. இவற்றில் ஜக் நிவாஸ் எனப்படும் தீவில் ஏரி அரண்மனையும், ஜக் மந்திர் எனும் தீவில் அதே பெயரில் அழைக்கப்படும் ஒரு கோயிலும் அமைந்துள்ளன.

மோகன் மந்திர் என்றழைக்கப்படும் தீவிலிருந்து கன்காவ்ர் எனும் வருடாந்திர திருவிழாக்கொண்டாட்டத்தை கண்டுகளிக்கலாம். அர்ஸி விலாஸ் எனும் தீவு ஒரு சிறு அரண்மனையுடன் வெடிமருந்துக் கிடங்காக பயன்பட்டிருக்கிறது.

கொண்டை வாத்து, நீர்க்கோழி, வெள்ளைக்கொக்கு, ஆலா (புறாவைப்போன்ற பறவை), நீர்க்காகம் மற்றும் மீன்கொத்தி போன்ற பறவைகள் இந்த அர்ஸி விலாஸ் தீவிற்கு வருகை தருகின்றன.

Please Wait while comments are loading...