சிட்டி பேலஸ், உதய்பூர்

சிட்டி பேலஸ் அரண்மனை உதய்பூரிலுள்ள அற்புதமான மாளிகைகளில் ஒன்றாகும். இது ராஜஸ்தான் மாநிலத்திலேயே மிகப்பெரிய ஒன்றாக கருதப்படுகிறது. சிசோடிய ராஜபுதன வம்சத்தின் தலைமைப்பீடமாக இந்த அரண்மனையை 1559ம் ஆண்டில் மஹாராணா உதய் மிர்ஸா சிங் நிர்மாணித்துள்ளார். இது பிச்சோலா ஏரிக்கரையில் அமைந்துள்ளது. சிட்டி பேலஸ் அரண்மனை வளாகம் 11 அரண்மனைகளை தன்னுள் கொண்டுள்ளது.இந்த அரண்மனையின் கட்டமைப்பு முகலாய மற்றும் ராஜஸ்தானிய கட்டிடக்கலை பாணியின் கலவையான அம்சங்களை கொண்டுள்ளது. ஒரு மலைக்குன்றின் உச்சியின் கட்டப்பட்டுள்ளதால் இங்கிருந்து மேலிருந்து கீழாக மொத்த நகரத்தையும் பார்க்க முடிகிறது.

இந்த வளாகத்தில் பல குமிழ் மாட கோபுரங்கள், முற்றங்கள், வழிநடைகள், அறைகள், அரங்குகள், தூண்கள் மற்றும் தொங்கும் தோட்டங்கள் அமைந்து அரண்மனையின் அழகை கூட்டுகின்றன.மேலும், இந்த அரண்மனைக்கு பல நுழைவாயில்களும் உள்ளன. பரா போல் அல்லது பெருவழி என்று அழைக்கப்படும் வாசல் இதற்கான பிரதான நுழைவாயிலாக அமைந்துள்ளது. மூன்று விதான வளைவமைப்பைக் கொண்ட, திரிபோலியா என்றழைக்கப்படும் வாசல் ஒன்றும் உள்ளது.

இதற்கு மிக அருகிலேயே யானைச்சண்டைகள் நடைபெறும் ஒரு மைதானம் ஒன்றும் அமைந்துள்ளது. இந்த இரண்டு நுழைவாயில்களுக்கு இடைப்பட்ட பகுதியில் எட்டுத்தோரணங்கள் எனப்படும் வெள்ளைப்பளிங்கு விதான வடிவமைப்புகள் உள்ளன. இங்கு மன்னர்கள் தங்கள் எடைக்கு எடை பொன் மற்றும் வெள்ளியை நிறுத்து அவற்றை ஏழை குடிமக்களுக்கு வழங்கியுள்ளனர்.புராதன இருக்கைப்பொருட்கள் மற்றும் மரக்கலன்கள், அழகிய ஓவியங்கள், கண்ணாடி மற்றும் ஆபரணச்சில்லு வடிவமைப்புகள் இந்த அரண்மனை உட்பகுதியின் சௌந்தயர்யத்தை கூட்டுகின்றன.

மனக் மஹால் அல்லது ரூபி அரண்மனையானது ஸ்படிகக்கல் மற்றும் பீங்கானில் உருவாக்கப்பட்ட அபாரமான சிலைகளைக்கொண்டுள்ளது. பீம் விலாஸ் மாளிகையில் ராதா கிருஷ்ணா வரலாற்றை குறிக்கும் குறு ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.சிட்டி பேலஸ் அரண்மனை வளாகத்தில் உள்ள இதர அரண்மனைகளாக கிருஷ்ண விலாஸ், ஷீஷ் மஹால் அல்லது கண்ணாடி மாளிகை, மோதி மஹால் அல்லது முத்து மாளிகை போன்றவை இடம்பெற்றுள்ளன. உதய்பூரின் மிகப்பெரிய கோயிலான ஜகதீஷ் கோயில் இந்த வளாகத்தின் ஒரு அங்கமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Please Wait while comments are loading...