கும்பல்கர்  - அதிசயங்களும், அற்புதங்களும் நிறைந்த நகரம்

ராஜஸ்தானின் ராஜ்சமந்த் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கும்பல்கர் நகரம், கும்பல்மேர் என்ற பெயரிலும் அறியப்படும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும். இந்த நகரில் ரானா கும்பா என்ற மன்னரால் 15-நூற்றாண்டில் கட்டப்பட்ட கும்பல்கர் கோட்டை ராஜஸ்தானின் முக்கியமான கோட்டைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இங்கு வரும் பயணிகள் இந்தக் கோட்டையின் உச்சியிலிருந்து அருகிலுள்ள பகுதிகளின் கவின்மிகு தோற்றத்தை கண்டு ரசிக்கலாம்.

கும்பல்கர் கோட்டையை  எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்காக அதன் சுவர் மிகவும் நீளமாக வளைந்து வளைந்து செல்லும் பாணியில் கட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக சீனப் பெருஞ்சுவருக்கு பிறகு உலகிலேயே மிகவும் நீளமான சுவராக இந்தச் சுவர் கருதப்படுகிறது.

மேகங்களின் அரண்மனை

ராஜஸ்தானின் மற்ற பகுதிகளை போலவே கும்பல்கர் நகரமும் சொக்க வைக்கும் அரண்மனைகளுக்காக புகழ்பெற்றது. அதிலும் குறிப்பாக மேகங்களின் அரண்மனை என்று பிரபலமாக அறியப்படும் பாதல் மஹால் சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தை அதிக அளவில் ஈர்த்து வருகிறது.

மேலும் மர்தானா மஹால் மற்றும் ஜனானா மஹால் இரண்டும் பாதல் மகாலுடன் ஒன்றிணைக்கப்பட்ட பகுதிகளாக இருந்து வருகின்றன. இந்த அரண்மனையின் அழகிய அறைகள் நீல வண்ண சுவர்ச்சித்திரங்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டிருக்கும் பாங்கு மிகவும் அற்புதமானது.

கும்பல்கரின் கவர்ச்சி அம்சங்கள்

கும்பல்கர் நகரம் அதன் அழகிய அரண்மனைகளை தவிர தொன்மையான கோயில்களுக்காகவும் பிரசித்திபெற்றது. அதிலும் குறிப்பாக வேதி கோயில், நீல்கந்த் மகாதேவ் ஆலயம், முச்சல் மகாவீர் கோயில், பரசுராம் கோயில், மம்மாதேவ் கோயில், ரணக்பூர் ஜெயின் கோயில் போன்றவை முக்கியமான புண்ணிய ஸ்தலங்களாக கருதப்படுகின்றன.

கும்பல்கர் வனவிலங்கு சரணாலயத்தில் நீங்கள் நான்கு கொம்பு இரலை மான்கள், காட்டுப்பன்றிகள், ஓநாய்கள், சிறுத்தைகள், குள்ள நரிகள், சாம்பார் மான்கள், கழுதைப் புலிகள், காட்டுப் பூனைகள், முயல்கள் போன்ற மிருகங்களை கண்டு ரசிக்கலாம்.

அதுமட்டுமல்லாமல் கும்பல்கர் சரணாலயத்தை தவிர ராஜஸ்தானின் வேறெந்த வனவிலங்கு சரணாலயத்திலும் நீங்கள ஓநாய்களை பார்க்க முடியாது. மேலும் ஹல்டிகாட் மற்றும் கனேராவ் ஆகிய இடங்களும் கும்பல்கர் நகரில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய சுற்றுலாப் பகுதிகளாகும்.

கும்பல்கர் நகரை எப்படி அடைவது?

கும்பல்கரின் அருகாமை விமான நிலையமாக உதைப்பூரின் மஹாராண பிரதாப் அல்லது தபோக் விமானம் நிலையம் அறியப்படுகிறது. எனினும் உதைப்பூரில் உள்ளது உள்நாட்டு விமான நிலையம் என்பதால் வெளிநாட்டு பயணிகள் டெல்லியின் இந்திரா காந்தி விமான நிலையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதோடு கும்பல்கர் நகருக்கு வெகு அருகிலேயே பால்னா நகர ரயில் நிலையம் அமைந்திருக்கிறது. இந்த ரயில் நிலையம் மும்பை, டெல்லி, ஜெய்ப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுடன் நன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது.

எனவே பயணிகள் இந்த ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்த பிறகு வாடகை கார்கள் மூலம் சுலபமாக கும்பல்கர் நகரை அடைந்து விட முடியும். மேலும் ஜோத்பூர், உதைப்பூர், புஷ்கர், அஜ்மீர் போன்ற ராஜஸ்தானின் முக்கிய நகரங்களிலிருந்து எண்ணற்ற பேருந்துகள் கும்பல்கர் நகருக்கு இயக்கப்படுகின்றன.

கும்பல்கர் நகரின் வானிலை

கும்பல்கர் நகரில் வருடம் முழுவதும் மிதமான வெப்பநிலையே நிலவும். எனினும் அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் கும்பல்கர் நகரை  சுற்றிப் பார்க்கும் அனுபவம் மிகவும் அலாதியானது.

இந்தக் காலங்கள் குறிப்பாக கும்பல்கர் நகரின் இயற்கை அழகை ரசிப்பதற்கும், கும்பல்கர் வனவிலங்கு சரணாலயத்தை சுற்றிப் பார்பதற்கும் பொருத்தமானதாக இருக்கும்.

Please Wait while comments are loading...