இரண்டாம் அடில் ஷா இப்ராஹீம் மன்னரால் (1580-1627) தனக்கும் தன் மனைவி தாஜ் சுல்தானாவுக்குமான சமாதி நினைவுச்சின்னமாக இந்த ‘இப்ராஹீம் ரௌஸா’ எனப்படும் சமாதி மண்டபம் உருவாக்கப்பட்டுள்ளது. மாலிக் சந்தல் எனும் கட்டிடக்கலைச்சிற்பியால் நிர்மாணிக்கப்பட்ட இந்த நினைவுச்சின்னம் ‘தக்காணத்தின் தாஜ் மஹால்’ என்ற பெருமையைக்கொண்டுள்ளது.ஒரு அலங்கார நுழைவாயிலைக் கொண்ட சுற்றுச்சுவருடன் கூடிய வளாகத்தினுள் வலதுபுறத்தில் ஒரு மசூதியும் இடது புறத்தில் சமாதி மண்டபமுமாக இரண்டு கட்டமைப்புகளைக்கொண்டதாக இந்த இப்ராஹிம் ரௌஸா நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இவை இரண்டிலுமே நான்கு மூலைகளிலும் பெரிய தூண் கோபுரங்களும்(மினாரெட்) மற்றும் சிறிய அலங்காரத்தூண் கோபுரங்களும் அமைந்துள்ளன. செவ்வக வடிவிலான தொழுகைக்கூடத்தைக் கொண்டுள்ள மசூதியின் முன்புறம் ஐந்து அலங்கார விதான வளைவு அமைப்புகள் காணப்படுகின்றன.
இங்குள்ள தூண்கோபுரங்கள் பல அடுக்குகளைக்கொண்டு அவற்றில் அடிப்பகுதியில் தொகுப்பு தூண்களுடனும் அமைந்துள்ளன. மேலும் சமாதி மண்டபத்தின் குமிழ் கோபுரமானது ஒரு மலரிதழ்கள் போன்ற அடிப்பீட வடிவமைப்பின் மீது எழுப்பப்பட்டுள்ளது.
சமாதி மண்டபம் மற்றும் மசூதி இரண்டுமே ஒரு அடித்தள மேடைப்பீடத்தின் மேலே ஒரு அழகிய தோட்டப்பூங்காவின் நடுவில் அமைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. பீஜாப்பூரில் எழில் வாய்ந்த வரலாற்றுச்சின்னமாக விளங்கும் இந்த இப்ராஹீம் ரோஸாவைப்பார்க்க பெருமளவில் சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர். இங்கு விஜயம் செய்வதற்கு கட்டணமாக இந்திய, கிழக்காசிய மற்றும் BIMSTEC எனப்படும் பங்களாதேஷ், மியான்மார், ஷீலங்கா, தாய்லாந்து நாட்டு பயணிகளுக்கு ஐந்து ரூபாயும், இதர வெளிநாட்டு பயணிகளுக்கு இரண்டு டாலர் அல்லது இந்திய ரூபாய் 100 வசூலிக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications