மணற்பாறைகளால் கட்டப்பட்டுள்ள அழகிய திருக்கோயில்கள் இந்த கொப்பல் நகரத்தின் சிறப்பம்சமாகும். பெங்களூரிலிருந்து சுமார் 300 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த கொப்பல் நகரம் இங்குள்ள கோயில்களின் கட்டிடக்கலை அம்சங்கள் மற்றும் ஆன்மீக பின்னணிக்காக பிரசித்தமாக அறியப்பட்டுள்ளது. பழம்பெருமை வாய்ந்த இந்த ஸ்தலத்தை தரிசிக்க வருடம் முழுவதுமே பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் வந்த வண்ணம் உள்ளனர்.
கொப்பல் யாத்ரீக ஸ்தலத்தின் சிறப்பம்சங்கள்
கொப்பல் பகுதி கங்க வம்சம், ஹொய்சள வம்சம் மற்றும் சாளுக்கிய வம்சங்களால் ஆளப்பட்டுள்ளது. வரலாற்றின் இறுதியில் இது ஹைதராபாத் நிஜாம் மன்னரின் ஆளுகையின் கீழ் இருந்துள்ளது. இந்த நகரத்தின் உன்னதமான கட்டிடக்கலை அம்சங்கள் அக்காலத்திய மேன்மைக்கு சான்றாய் விளங்குகின்றன.
கொப்பல் ஸ்த்லத்திலுள்ள மஹாதேவா கோயில் அதன் அற்புதமான சிற்ப வேலைப்பாடுகளுக்கு புகழ் பெற்றுள்ளது. சாளுக்கியர்களால் கட்டப்பட்டுள்ள இந்த கோயிலில் காணப்படும் கல்வெட்டில் கோயில்களுக்கெல்லாம் ராஜா இந்த கோயில் என்று புகழ்ச்சியாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஸ்தலத்திலுள்ள இதர முக்கியமான கோயில்களாக அமிர்தேஷ்வரர் கோயில், காசிவிஸ்வேஷ்வரா கோயில் மற்றும் தொட்டபப்பஸ கோயில் போன்றவை காணப்படுகின்றன.
இது மட்டுமல்லாமல் இந்த கொப்பல் கோயில் நகரம் புகழ் பெற்ற வரலாற்றுத்தலமான ஹம்பி மற்றும் ஆனே குந்தி சுற்றுலாத்தலம் இவற்றுக்கு அருகிலேயே அமைந்துள்ளது. ஆனேகுந்தி ஸ்தலத்தில் புதுக்கற்காலத்தை சேர்ந்த ஓவியங்கள் சில காணப்படுகின்றன.
கொப்பல் ஸ்தலத்துக்கு விமானம், ரயில், பேருந்து வசதிகள் அதிகம் உள்ளன. அருகாமையில் ஹுப்ளி விமான நிலையம் 100 கி.மீ தூரத்தில் உள்ளது. இதுதவிர பயணிகள் பெங்களூர் விமான நிலையத்தையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
நகரமையத்திலிருந்து 2.5 கி.மீ தூரத்தில் கொப்பலுக்கென்றே ரயில் நிலையமும் உள்ளது. கொப்பல் பேருந்து நிலையத்தில் நாள் முழுக்கவும் வெவ்வேறு அருகாமை நகரங்களிலிருந்து பேருந்துகள் வந்தவண்ணம் உள்ளன.