தண்டேலி - பசுமை விரும்பிகளுக்கான காட்சி விருந்து

கர்நாடக மாநிலத்தில் உத்தர கன்னட மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த சிறு நகரம் சுற்றிலும் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரின் அடர்த்தியான இலையுதிர்காடுகளால் சூழப்பட்டுள்ளது. சாசச சுற்றுலாவில் ஆர்வம் உள்ள பயணிகளால் பெரிதும் விரும்பப்படும் ஸ்தலமாக இது பிரசித்தி பெற்றுள்ளது.

இந்த பழமையான நகரம் வளர்ந்து வரும் ஒரு கல்வி மற்றும் வணிக கேந்திரமாகவும் இருப்பதோடு, பல காகித தொழிற்சாலைகளும் இந்த நகரத்தில் அதிகமாக அமைந்துள்ளன.

அவற்றில் ‘வெஸ்ட் கோஸ்ட் பேப்பர் மில்ஸ்’ தொழிற்சாலை குறிப்பிடத்தக்கதாகும். இது தண்டேலி நகரத்தின்  மொத்தப்பரப்பில் அதிக அளவு இடத்தில் அமைந்துள்ளது. மேலும் இந்த ஸ்தலம் ஆற்று மிதவைப்படகு சவாரிக்கு இந்தியாவிலேயே பிரசித்தமான ஸ்தலமாகவும் புகழ்பெற்றுள்ளது.

பெயருக்கு பின் ஒளிந்திருக்கும் கதை

தற்சமயம் இந்த தண்டேலி நகரம் அமைந்திருக்கும் இடமானது புராண காலத்தில் பிரசித்தி பெற்றிருந்த தண்டகாரண்ய வனமாக அறியப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் இந்த ஸ்தலத்தில் உறையும் தண்டேலப்பா எனும் தெய்வத்தின் பெயராலும் இப்படி அழைக்கப்படுவதாக நம்பப்படுகிறது.

இந்த தண்டேலப்பா கடவுள் இங்கிருந்த மிராஷி ஜமீன் தாரர்களிடம் பணியாளாக பணிபுரிந்ததாகவும் சொல்லப்படுகிறது. மற்றொரு கதைப்படி முன்னொரு காலத்தில் இந்த பிரதேசத்தை ஆண்ட தண்டநாயகா எனும் மன்னன் இந்த வனத்தின் அழகால் ஈர்க்கப்பட்டு அதற்கு தன் பெயரை சூட்டிக்கொண்டான் என்றும் சொல்லப்படுகிறது.

தண்டேலியை சுற்றுலாப்பயணிகள் மொய்க்க காரணங்கள்

தண்டேலி பகுதியில் கர்நாடக மாநிலத்திலேயே இரண்டாவது பெரிய காட்டுயிர் சரணாலயமான தண்டேலி காட்டுயிர் சரணாலயம் அமைந்துள்ளது. 2007 ம் ஆண்டு இந்த சரணாலயம் புலிகள் பாதுகாப்பு மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடர்ந்த இலையுதிர்காடுகளால் ஆன தண்டேலி காட்டுயிர் சரணாலயத்தில்  கானேரி ஆறு மற்றும் நாகஜாரி ஆறு எனும் இரண்டு ஆறுகள் குறுக்கும் நெடுக்குமாக ஓடுகின்றன.  இந்த ஆறுகள் காளி ஆற்றின் துணை ஆறுகளாகும்.

இந்த காட்டுயிர் சரணாலயம் பலவகையான வனவிலங்குகளின் உறைவிடமாக அமைந்துள்ளது. புலிகள், சிறுத்தைகள், கருஞ்சிறுத்தைகள், யானைகள், காட்டெருமைகள், மான், கலைமான், கரடி, புனுகுப்பூனை, பைசன், குள்ளநரி, கருங்குரங்கு போன்ற விலங்குகளும் 300 க்கும் மேற்பட்ட பறவை இனங்களும் இந்த காட்டுயிர் சரணாலயத்தில் வசிக்கின்றன. இவை தவிர பலவகை பூச்சி மற்றும் ஊர்வன உயிரினங்களும் இங்கு காணப்படுகின்றன.

தண்டேலி சுற்றுலாஸ்தலம் மிதவைப்படகு சவாரி, பரிசல் சவாரி, ஆற்று மிதவைப்படகுச்சவாரி போன்ற பொழுதுபோக்கு அம்சங்களை காளி ஆற்றில் கொண்டுள்ளது. இவை தவிர சைக்கிள் சவாரி, மலைப்பாதை சைக்கிள் சவாரி போன்ற பொழுதுபோக்குகளுக்கும் உகந்ததாக இது விளங்குகிறது.

முதலைகளை கண்டு மகிழ்வது, இயற்கை நடைப்பயணம், மலையேற்றம், படகுச்சவாரி, பறவைக்காட்சி, தூண்டில் மீன் பிடித்தல் போன்ற ஏராளமான இயற்கையம்சம் சார்ந்த பொழுது போக்குகள் இங்கு நிறைந்து காணப்படுகின்றன.

இந்த ஸ்தலம் உலாவி கோயில், ஸ்கைக்ஸ் பாயிண்ட், சுப்பா நீர்மின்சார நிலையம், காவ்லா குகைகள் மற்றும் சிந்தேரி பாறைகள்  போன்ற இதர சுற்றுலா அம்சங்களையும் கொண்டுள்ளது.

தண்டேலி ஸ்தலம் காளி ஆற்றின் கரையில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1551 அடி உயரத்தில் பின்னணியில் மேற்குத்தொடர்ச்சி மலைகளுடன் அமைந்துள்ளது. கோவாவிலிருந்து 125 கி.மீ தூரத்தில் உள்ள இந்த தண்டேலி நகரம் தார்வாட், ஹூப்ளி மற்றும் பெல்காம் நகரங்களுடன் நல்ல முறையில் சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது.

Please Wait while comments are loading...