யானா - சிவபெருமான் தஞ்சமடைந்த இடம்

யானாவின் அசாதாரணமான பாறை வடிவங்களுக்காகவே இங்கு இயற்கை காதலர்களும், சாகசப் பிரியர்களும் படை எடுத்து வருவது போல் வருவர். இந்த கவின் கொஞ்சும் கிராமம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள  சஹயாத்ரி மலைப்  பகுதிகளில் அமைந்திருக்கிறது.

யானாவில் உள்ள குன்றுகளில் பைரவேஸ்வரா ஷிக்கராவும் , மோகினி ஷிக்கராவும்  மிகவும் பிரபலமான குன்றுகள்.

ஒருமுறை அசுரர்களின் அரசன் பஸ்மாசுரன் என்பவன் கடும் தவம் இருந்து சிவபெருமானிடம் வரம் ஒன்றை பெற்றான். அதாவது பஸ்மாசுரன் யார் தலையிலாவது கையை வைத்தால் அவர்கள் நொடிப்பொழுதில் சாம்பலாகிவிடுவார்கள் என்பதே அவன் வாங்கிய வரம்.

ஆனால் அந்தக்  கொடிய அரக்கன் அந்த வரத்தை சிவபெருமானிடமே சோதித்து பார்க்க எண்ணி, அவரை துரத்திக்கொண்டு ஓடினான். அவனிடமிருந்து தப்பித்து ஓடிய சிவபெருமான் தஞ்சமடைந்த இடம் தான் பைரவேஸ்வரா ஷிக்கரா என்ற குன்று.

அப்போது சிவனை காப்பாற்றுவதற்காக மோகினி என்ற  அழகிய இளம் மங்கையாக உருவெடுத்து வந்தார் விஷ்ணு பகவான். மோகினியின் அழகில் மயங்கிய பஸ்மாசுரன் அவளை நடனப் போட்டிக்கு அழைத்தான்.

அந்த சமயத்தில் மோகினியாய் நடனமாடிக் கொண்டிருந்த விஷ்ணு பகவான் தன்னுடைய தலையில் கையை வைத்து ஆடுவதுபோல் சாதுர்யமாக ஒரு அபிநயம் பிடித்தார். இதைக் கண்டு தன்னிலை மறந்த அசுரன் தன் தலையில் மறதியாக கையை வைக்க கணப் பொழுதில் சாம்பாலகிப் போனான் .

இந்த அசுரனை அழிப்பதற்காக விஷ்ணு பகவான் மோகினியாக உருமாறிய இடம் தான் மோகினி ஷிக்கரா என்று சொல்லப்படுகிறது. இதெல்லாம் நமக்கு புராணம் கூறும் செய்திகள்.

பைரவேஸ்வரா ஷிக்கராவின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் பைரவேஸ்வரா கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலில் பத்து நாட்கள் நடக்கும் மகாசிவராத்திரி திருவிழாவுக்கு நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கில்  புனித யாத்ரிகர்களும், பயணிகளும்  கூட்டம் கூட்டமாக வருவர். அப்போது நடன நிகழ்ச்சிகள், யக்ஷகானா போன்ற நாட்டுபுற கலை நிகழ்சிகள் ஆகியவை வெகு விமரிசையாக நடத்தப்படும்.

Please Wait while comments are loading...